முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 368
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 368
அவர்களில் ஒருத்தி, அவன் அன்பிற்குரியவள். மற்றவர்கள் அந்தத் தீண்டத்தகாத தாயின் அறிவாளியான மகனைத் தங்கள் மகனாகவும், சகோதரனாகவும் ஏற்றுக்கொண்டவர்கள். பாசிஸ வெறுப்பும், பழைய நினைவுகளும் அவன் உள்ளத்தைக் குழப்பிக்கொண்டிருக்கும் பொழுது எதிரிலே சூரியன் அடையாளமிட்ட மூன்று விமானங்கள் வருவது தெரிந்தது. உடனே சுமேர் தனது ‘மிஷின்கன்ன’ருக்குப் போன் மூலம் எச்சரிக்கை செய்துவிட்டு, பாசிஸ்டு விமானங்களின் மத்தியிலே பாய்ந்தான். வாயால் சொல்வதற்கு நேரமாகிறது; எழுதுவதற்கு அதை விட நேரமாகிறது; ஆனால் சுமேர், தன்னுடைய விமானத்தை எப்படிச் சரியான இடத்திற்குச் செலுத்தினான், அவனுடைய கன்னர் ஷெரீப் எப்படி ‘மிஷின் கன்னை’ உபயோகித்தான்
என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்பே, பத்தே நிமிடத்தில் அந்த மூன்று விமானங்களும் சிறகிழந்த பருந்தைப் போல், சமுத்திரத்திலே விழுந்து விட்டன. சுமேர் தனது திறமையைக் காட்டுவதற்குக் கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுதான். ஆயினும் தனது வெற்றியிலே அவனுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. அவன் திரும்பும்பொழுது ஷெரீபிடம் சொன்னான்:
“தோழ! நாம் நமது பங்கைச் செய்து விட்டோம். நம்மில் ஒவ்வொரு வரும் மும்மூன்று பாசிஸ்டுகளை முடித்து விட்டார்களானால், வெற்றி சீக்கிரம் தான்.”
“எனக்கும் மனப்பாரம் குறைந்தது போலவே இருக்கிறது. இனிச்சாக நேர்ந்தாலும் கவலைப்பட மாட்டேன்.”
“நாம் இன்னும் உயிரோடிருக்கும் வரை ஜப்பானியப் பாசிஸ்டுகளைக் கொன்று கொன்று, லாபத்திற்கு மேல் லாபம் சேகரித்துக் கொண்டிருப்போம்.”
அதன் பிறகு சுமேர் இருநூறு தினங்கள் தான் உயிரோடிருந்தான். அந்த இருநூறு நாட்களிலே, அவன் நூறு ஜப்பானிய விமானங்களையாவது நஷ்டப்படுத்தியிருப்பான். கடைசி நாளன்று அவனுக்கு வங்காள விரிகுடாவிலே, வேலை கிடைத்திருந்தது. அந்தமானுக்கு மேற்கே ஒரு பெரிய ஜப்பானிய யுத்தக்கப்பல் போய்க் கொண்டிருந்தது. நாற்பதாயிரம் எடையுள்ள அந்தப் பெரிய யுத்தக் கப்பலைப் பார்த்ததும், அதை நோக்கி விரைந்தான் சுமேர். அந்தப் பெரிய கப்பலுக்குப் பாதுகாவலாக நான்கு புறமும் சண்டை விமானங்கள் பறந்து வந்து கொண்டிருந்தன. ஆனால் மேகத்தின் மத்தியிலே மறைந்து வந்த சுமேரின் தனி விமானத்தை அவைகள் கவனிக்கவில்லை.
சுமேர், டார்பிடோவைத் தயாராக வைத்திருக்கும்படி கன்னருக்கு உத்திரவிட்டான். மேகத்திலே மறைந்து கப்பலுக்கு உச்சியில் அவன் வந்துவிட்டதை ஜப்பானிய விமானங்கள் பார்க்கவில்லை. அவன் முழு வேகத்தோடு இயந்திரத்தைச் செலுத்தினான். அவனுடைய விமானமும் டார்பிடோவும் அந்தப் பெரிய யுத்தக் கப்பலிலே போய் மோதின. சுமேரும் அவருடைய கன்னர் ஷெரீபும் என்ன கதியானார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் தங்களோடு அந்தப் பெரிய ஜப்பானிய யுத்தக் கப்பலையும் மறைந்து போகும்படி செய்து விட்டார்கள்.
* * * * * *
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவன், சுமேர், பெரிய, அந்தப், ஜப்பானிய, யுத்தக், மறைந்து, ஆனால், விமானங்கள், தனது - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்