முதன்மை பக்கம் » பொது அறிவுக் களஞ்சியம் » புகழ் பெற்ற புத்தகங்கள் » வால்காவிலிருந்து கங்கை வரை » பக்கம் 365
வால்காவிலிருந்து கங்கை வரை - பக்கம் 365
இதுவரை மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த சமதன் இப்பொழுது வாய் திறந்தான்:
“தோழ சுமேர்! நீ சொல்லியவற்றில் அநேக விஷயங்களை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் சில விஷயங்களை ஒப்புக் கொள்ள முடியாது! உன்னுடைய கருத்துக்களுக்கு நான் எப்பொழுதும் மரியாதை வைத்து வந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். இந்த உலகமெங்கும் பரவியுள்ள யுத்தத்தில், யாரும் நடுநிலைமை வகிக்க முடியாதென்பதை நானும் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் நண்ப, நீ தேர்ந்தெடுக்கப்பட்டு ராணுவத்திலே சேர்ந்த பிறகு எங்களுக்குத் தகவல் கொடுத்திருக்கிறாய். கொஞ்சம் முன்னாலே சொல்லியிருக்க வேண்டும்.”
“முதலிலேயே சொல்லியிருப்பேன். நான் தேர்ந்தெடுக்கப்படாமல் போய்விட்டால் என்ற சந்தேகத்தினால்தான், தேர்ந்தெடுக்கப்பட்டு இருபத்திநாலு மணி நேரம் கழிந்த பிறகு நண்பர்களுக்குச் சொன்னேன்.
இப்பொழுது நாளை மறுநாள், அம்பாலா ஆகாய விமானப் பள்ளிக்கூடத்திற்குப் போகப் போகிறேன்.”
“தாயாருக்குத் தகவல் கொடுத்துவிட்டாயா?”
“தாயாருக்குப் பாட்டனாவும் அம்பாலாவும் ஒன்றுதான். நான் சண்டையில் சேர்ந்து, நமனுடைய வாய்க்குள் நுழைகிறேன் என்று வெளிப்படையாக எழுதாத வரை அவளுக்கு இரண்டும் ஒன்றே. வெளிப்படையாக எழுதினால், அவளை நிரந்தரமான துக்கத்தில் ஆழ்த்துவதாக முடியும். ஆகவே, நான் உயிரோடு இருக்கும்வரை அவளுக்குக் கடிதம் எழுதிக் கொண்டேயிருப்பேன். அதிலேயே அவள் மகிழ்ச்சியடைவாள்.”
“உன்னுடைய தைரியத்தை நான் எப்பொழுதும் மறக்க முடியாது, சுமேர்!”
“நாம் மனிதனாகப் பிறந்ததின் கடமையைச் செய்வதற்கு எப்பொழுதும் தயாராயிருக்க வேண்டும். மேலும், ஒரு லட்சியவாதியாக ஆகிவிட்டால், நம்முடைய பொறுப்புக்கள் இன்னும் அதிகரித்துவிடுகின்றன.”
“இந்த யுத்தம் உலகத்தில் ஒரு மகத்தான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நீ நம்புகிறாயா?”
“கடந்த மகாயுத்தமும் குறைவான வேலையைச் செய்யவில்லையே. ருஷ்யாவிலே சோவியத் ஆட்சியை உண்டாக்கியது. உலகத்தின் ஆறில் ஒரு பாகத்தில் சமத்துவத்தின் ராஜ்யத்தை ஸ்தாபித்தது, சின்னக் காரியமா என்ன? ஆனால் இந்த யுத்தத்தினால் ஏற்படப் போகிற மாற்றம், ஒரு புதிய
உலகத்தையே சிருஷ்டித்து விடும்! சோவியத் அரசாங்கமும், செஞ்சேனையும் பங்கெடுத்துப் போராடும் கட்சி-சீன ஆங்கில, அமெரிக்கப் பொதுஜனங்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் கட்சி, நிச்சயமாக வெற்றி பெறும் என்பதில் எனக்குக் கொஞ்சம்கூடச் சந்தேகமில்லை.”
சமதனுக்கும் ரூபகிஷோருக்குமிடையே, பாகிஸ்தானைப் பற்றிப் பலமுறை விவாதம் நடந்திருக்கிறது. அது மறுபடியும் நினைவு வரவே, ரூபகிஷோர் அதைப் பற்றிப் பேசத் தொடங்கினான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 363 | 364 | 365 | 366 | 367 | ... | 367 | 368 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான், எப்பொழுதும், ஆனால் - Volgavilirundhu Gangai Varai - வால்காவிலிருந்து கங்கை வரை - Famous Books - புகழ் பெற்ற புத்தகங்கள்