நற்றிணை - 302. பாலை

இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக் காடு கவின் பூத்தஆயினும், நன்றும் வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் நரை நிறம் படுத்த நல் இணர்த் தெறுழ் வீ |
5 |
தாஅம் தேரலர்கொல்லோ- சேய் நாட்டு, களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு வெளிறு இல் காழ வேலம் நீடிய பழங்கண் முது நெறி மறைக்கும், வழங்கு அருங் கானம் இறந்திசினோரே? |
10 |
வேற்று நாட்டிலே களிறு காலால் உதைத்துப் போகட்டு ஒழிந்த மேல் கீழாகப் படிந்த மிக்க புழுதி; வெளிறு இன்றி வயிரமேறிய வேலமரங்கள் நெருங்கிய செல்லுவோருக்குத் துன்பஞ் செய்தலையுடைய முதிர்ந்த நெறியை மறையாநிற்கும்; மக்கள் நடத்தற்கரிய சுரநெறியின்கண்ணே சென்ற தலைவர்; பொன்னாலாகிய கலன்களை மிக அணிந்த மகளிர்போல யாவரும் விரும்பும் வண்ணம் மலர் விரிந்த நீண்ட சுரிந்த பூங்கொத்தில் உள்ள விளங்குகின்ற பூவையுடைய கொன்றைக்காடு அழகு மிக்கிருந்த அதனை அறிந்திலரேனும்; பெரிதும் வருகின்ற மழையை நோக்கி மலர்ந்த நீலமணியின் நிறம் போன்ற கரிய புதர்களிலுள்ள; நல்ல பூங்கொத்தை உடைத்தாகிய எறுழ் மலர் மழைக்காலம் நீங்குதலாலே தன்னிறமாறி வெண்மை நிறம் பொருந்தியிருத்தலை அவர் தாம் அறியாரோ? அறிந்திருப்பாரேல் முன்பு தாம் கூறிய பருவம் கழிகின்றதே என்று வந்திருப்பரே;
பருவம் கழிந்தது கண்டு தலைமகள் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 300 | 301 | 302 | 303 | 304 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - நிறம், பருவம், தாம், வெளிறு, களிறு, மலர்