திருப்புகழ் - பாடல் 902 - வயலூர்
ராகம் - : தாளம் -
தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ...... தந்ததான |
இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத மத்தக்க ளிற்றையெதிர் புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகை கட்டிப்பி ணித்திறுகி யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி முத்தத்தை யிட்டுநக ...... தந்தமான இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில் எற்றிக்க லக்கமுற இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது தொட்டுத்தி ரித்துமிக இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி செக்கச்சி வக்கவளை ...... செங்கைசோர அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபல கொத்துக்கு ழற்குலைய மயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகர நெக்குக்க ருத்தழிய அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண வர்க்கத்தி னிற்புணரு ...... மின்பவேலை அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர கட்டுப்பொ றிச்சியர்கள் மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை யுற்றுத்து திக்கும்வகை அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில் ரக்ஷித்த ளித்தருள்வ ...... தெந்தநாளோ திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட செகணசெக சகணசக செக்கச் செகச்செகண சத்தச்ச கச்சகண திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த ...... திங்குதீதோ திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுட தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை பக்கக்க ணப்பறைத ...... வண்டைபேரி வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை பக்கத்தி னிற்சரிய எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி விட்டத்த மித்ததென வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுது தொக்குக்கு னிப்புவிட ...... வென்றவேலா வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி சித்ரப்ர சித்தமுறு அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி தத்வத்தி றச்சிகர வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி தப்பற்று ரைக்கவல ...... தம்பிரானே. |
வலிமையும், கடுமையும், முகத்துக்கு இடும் அலங்காரத் துணியின் பேரழகும், துதிக்கையும், இவைகளை எல்லாம் கொண்டு மத நீர், மதம் பொழியும் யானையை எதிர்க்கும் திறத்ததாய் மயிர் சிலிர்த்த மார்பகங்கள் நெகிழ, ஆசையுடன் தாவி கழுத்தைக் கைகளால் கட்டி அணைத்து அழுத்தி, வாயிதழாகிய நிறைவினின்றும் கிடைக்கும் அமுதனைய வாயூறலை காம சாஸ்திரத்தின்படி நிரம்ப அருந்தி, மனம் உருகி, முத்தமிட்டு, நகத்தைக் கொண்டும் பற்களைக் கொண்டும் இடப்பட்ட அடையாளங்கள் ரேகைகள் போலத் தெரிய, நெற்றியாகிய இடத்தில் முகத்தோடு முகம் வைத்துத் தாக்க, (வந்தவர் உள்ளம்) கலக்கம் கொள்ளும்படி இடை நெகிழவும், ஆடை கழன்று போகவும், ஆசையுடன் அரையில் உள்ள பாம்பு போன்ற பெண்குறியை தொட்டு மிகவும் அலைத்து, போர் புரியும் பகைவர்களின் கண்களைப் போல இயற்கையாகக் கறுத்து இருக்கும் கண்கள் மிகவும் சிவந்த நிறத்தை அடையவும், வளைகள் அழகிய கைகளில் நெகிழவும், அகிலும் அதனுடன் சேரும் கஸ்தூரியும் நறு மணம் வீச, அடர்த்தியுள்ள பூங்கொத்துகள் கொண்ட கூந்தல் கலைந்து விழ, மயில், புறா, குயில், வண்டு, செம்போத்து ஆகிய பறவைகளின் குரலைக் காட்டி, உள்ளம் நெகிழ்ந்து உணர்ச்சி அழிய, படுக்கையில் நிரம்ப ஆரவாரம் எழ, வதக்கப்படுவது போல சூடேற உடல் சம்பந்தப்பட்டு செய்யப்படும் கலவி வகைகளில் புணர்ச்சி இன்பத்தை அனுபவிக்கும் அந்தச் சமயத்தில், கடல் போல பெரிய கண்ணின் மணியாகிய வலையை வீசி எனது கைப் பொருளைக் கொள்ளை கொள்ள பாசம் விளைக்கும் தந்திரக்காரர்களான விலைமாதர்களின் மன்மத சாஸ்திர அறிவால் வரும் மனத்துயரத்தை அழித்துத் தொலைத்து, உனது திருப்புகழில் நாட்டம் வைத்து உன்னை வணங்கும்படி எல்லை இல்லாத சிவ ஞானம் என் அறிவில் பெறப்படும்படியாக நீ என்னைக் காப்பாற்றி காத்தளித்து என் மயக்கத்தை நீக்கி அருளுவது எந்த நாளோ? மேற்கூறிய தாள ஒலிகளை எழுப்பும் மேள வகைகள், (அரச) வேட்டைக்கு உரித்தான இடக்கை, கூட்டமான பெரும் பறை வகைகள், பக்கத்தில் வரும் தோற் கருவி வகைகள், பேருடுக்கை, முரசு முதலிய பறைகள் மிகுந்த ஒலி எழுப்ப, கோபமுடன் அசுரர்களின் சேனைகள் பக்கங்களிலே சரிந்து விழ, சித்திரம் வரைந்த விருதுக் கொடி, போர்க் களம் முழுதும் உலவி, பட்டப் பகலில் சூரியனை சக்ராயுதத்தை விடுத்து அஸ்தமிக்க வைத்தது போல இருளாக்க, வந்துள்ள பிசாசுகள் பெருகி வரும் ரத்தத்தில் குளித்துத் திளைத்து விளையாடி, உடல் வளைவை விட்டு நிமிர்ந்து எழும்படி வெற்றி பெற்ற வேலனே, வயலூரில்* எப்போதும் மகிழ்ந்து வீற்றிருக்கும் குமரனே, அடியார்களுக்கு அருள் செய்பவனே, விநோதமான புகழைக் கொண்ட திருமாலின் மருகனே, ஆறு முகங்களைக் கொண்டவனே, சிவ சாரூபக் கூட்டத்தினர் வணங்கும் அறிவுத் திறம் கொண்டவனே, சிகரங்களைக் கொண்ட, வடக்கே உள்ள, கயிலை மலையில் நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானை அடைவதற்கு வேண்டிய முக்தி வழியைச் சம்பந்தராகத் தோன்றி தப்பு இல்லாத வகையில் சொல்ல வல்ல தம்பிரானே.
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 900 | 901 | 902 | 903 | 904 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தனதனன, தத்ததன, தத்தத்த, கொண்ட, வரும், வகைகள், வயலூர், கொண்டவனே, உடல், மிகவும், இல்லாத, உள்ளம், தம்பிரானே, தத்தித்த, திக்குத்தி, ஆசையுடன், நிரம்ப, நெகிழவும், கொண்டும், உள்ள