திருப்புகழ் - பாடல் 823 - பெரியமடம்
ராகம் - ...; தாளம் -
|
தனதனன தானதன தத்தனா தாத்த தனதனன தானதன தத்தனா தாத்த தனதனன தானதன தத்தனா தாத்த ...... தனதான |
|
கலகவிழி மாமகளிர் கைக்குளே யாய்ப்பொய் களவுமத னூல்பலப டித்தவா வேட்கை கனதனமு மார்புமுற லிச்சையா லார்த்து ...... கழுநீரார் கமழ்நறைச வாதுபுழு கைத்துழாய் வார்த்து நிலவரசு நாடறிய கட்டில்போட் டார்ச்செய் கருமமறி யாதுசிறு புத்தியால் வாழ்க்கை ...... கருதாதே தலமடைசு சாளரமு கப்பிலே காத்து நிறைபவுசு வாழ்வரசு சத்யமே வாய்த்த தெனவுருகி யோடியொரு சற்றுளே வார்த்தை ...... தடுமாறித் தழுவியநு ராகமும்வி ளைத்துமா யாக்கை தனையுமரு நாளையும வத்திலே போக்கு தலையறிவி லேனைநெறி நிற்கநீ தீ¨க்ஷ ...... தரவேணும் அலகில்தமி ழாலுயர்ச மர்த்தனே போற்றி அருணைநகர் கோபுரவி ருப்பனே போற்றி அடல்மயில்ந டாவியப்ரி யத்தனே போற்றி ...... அவதான அறுமுகசு வாமியெனும் அத்தனே போற்றி அகிலதல மோடிவரு நிர்த்தனே போற்றி அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி ...... அசுரேசர் பெலமடிய வேல்விடுக ரத்தனே போற்றி கரதலக பாலிகுரு வித்தனே போற்றி பெரியகுற மாதணைபு யத்தனே போற்றி ......பெருவாழ்வாம் பிரமனறி யாவிரத தக்ஷிணா மூர்த்தி பரசமய கோளிரித வத்தினால் வாய்த்த பெரியமட மேவியசு கத்தனே யோக்யர் ...... பெருமாளே. |
கலகத்தை விளைவிக்கக் கூடிய கண்களை உடைய அழகிய விலைமாதர்களின் கைகளில் அகப்பட்டு, களவு, பொய், காம சாஸ்திரம் பலவும் கற்று, ஆசையுடனும், விருப்பத்துடனும் கனத்த மார்பகங்களோடு நெஞ்சாரத் தழுவி மகிழ்ந்து, செங்கழுநீர் மலர்களை நிரப்பி, மணக்கும் ஜவ்வாது, புனுகு இவைகளைக் கலந்து ஊற்றி பரிமளிக்க வைத்து, பூமியில் உள்ள அரசர் முதல் நாட்டில் உள்ள யாவரும் அறியும்படியாக, கட்டில் படுக்கை போட்டவர்களாகிய வேசியர்கள் செய்கின்ற தொழில்களின் சூதை அறியாமல், எனக்குள்ள அற்ப புத்தியால் எனது வாழ்க்கையின் அருமையை எண்ணாமல், (அந்த வேசியரின்) இடத்தை நெருங்கிச் சென்று, ஜன்னலின் வாயில்களின் முன் பக்கத்தில் காத்து நின்று, (அவர்களால் அழைக்கப்பட்டவுடன்) நிறைந்த செல்வமும் அரச வாழ்வும் சத்தியப்பேறும் கிடைத்தன போல மனம் உருகி, அவர்கள் வீட்டினுள் ஓடிச்சென்று, உள்ளே இருக்கும் கொஞ்ச நேரத்துக்குள் பேசும் பேச்சும் தடுமாறி, அவர்களைத் தழுவி காம லீலைகளைச் செய்தவனாய், சிறந்த உடலையும் அருமையான வாழ் நாளையும் வீணில் கழிக்கின்றவனும், நல்லறிவு இல்லாதவனுமாகிய என்னை, நன்னெறியில் நிற்கும்படி நீ தயை புரிந்து அறிவுரை செய்தருள வேண்டும். எல்லை இல்லாத தமிழறிவால் உயர்ந்துள்ள வல்லவனே, போற்றி, திருவண்ணாமலையின் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, போற்றி, வலிய மயிலை ஓட்டுதலில் விருப்பு வைத்தவனே, போற்றி, விந்தையான செயல்களைச் செய்த ஆறுமுகச் சுவாமி என்னும் தலைவனே, போற்றி, எல்லாப் பூமிகளையும் வலம் செய்து ஓடி வந்த நிருத்த மூர்த்தியே, போற்றி, அருணகிரி நாதரே என்று என்னை அழைத்த அப்பனே, போற்றி, அசுரர் தலைவர்களின் வலிமை அழிய வேலைச் செலுத்திய கரத்தினனே, போற்றி, கையில் கபாலம் ஏந்திய சிவபெருமானுக்கு ஞான உபதேச பண்டிதனாய் நின்றவனே, போற்றி, பெருமை வாய்ந்த குறப் பெண்ணாகிய வள்ளி நாயகியை அணைகின்ற திருப்புயங்களை உடையவனே, போற்றி, பெருஞ் செல்வப் பொருளானதும், பிரமனும் அறியாததுமாகிய பிரணவப் பொருளை உபதேசித்த தக்ஷிணா மூர்த்தி சொரூபனே, மற்ற (சமண, புத்த) மதங்களை அழிக்க வந்த (திருஞான சம்பந்த) சிங்கமே, தவச் செயலால் கிடைக்கும், பெரிய மடம்** என்னும் இடத்தில் வீற்றிருக்கும், சுகப் பெருமானே, தூய யோகியர்கள் போற்றும் பெருமாளே.
* தீ¨க்ஷ என்பது குருவின் அறிவுரை. அது ஏழு வகைப்படும்: நயன (கண்களால்), ஸ்பரிச (தொடுவதால்), மானச (மன அலைகளால்), வாசக (சொல்லால்), சாஸ்திர (வேத நூல்களால்), யோக (யோகாப்பியாசத்தால்), ஔத்திரி (கேள்வி - பதில் மூலமாக) என்பனவாகும்.
** பெரிய மடம் கும்பகோணத்தில் மகாமகக் குளத்துக்கு வட கரையில் உள்ள சைவ மடம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 821 | 822 | 823 | 824 | 825 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - போற்றி, உள்ள, தனதனன, தாத்த, தானதன, தத்தனா, என்னை, தழுவி, அறிவுரை, வந்த, மடம், பெரிய, பெருமாளே, என்னும், அப்பனே, வாய்த்த, காத்து, புத்தியால், தீ¨க்ஷ, யத்தனே, தக்ஷிணா, அருணகிரி, மூர்த்தி

