திருப்புகழ் - பாடல் 617 - தீர்த்தமலை
ராகம் -
சங்கரானந்தப்ரியா; தாளம் - மிஸ்ரசாபு - 3 1/2
தகிட-1 1/2, தகதிமி-2
தகிட-1 1/2, தகதிமி-2
|
தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன தாத்த தனதன ...... தனதான |
|
பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை கூற்று வருவழி பார்த்து முருகிலை பாட்டை யநுதின மேற்று மறிகிலை ...... தினமானம் பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் ...... வழிபோக மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ ...... னிதுகேளாய் வாக்கு முனதுள நோக்கு மருளுவ னேத்த புகழடி யார்க்கு மெளியனை வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ...... மருவாயோ ஆட்டி வடவரை வாட்டி யரவொடு பூட்டி திரிபுர மூட்டி மறலியி னாட்ட மறசர ணீட்டி மதனுடல் ...... திருநீறாய் ஆக்கி மகமதை வீட்டி யொருவனை யாட்டின் முகமதை நாட்டி மறைமக ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ ...... னருள்பாலா சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற ஓட்டி யழல்பசை காட்டி சமணரை சீற்ற மொடுகழு வேற்ற அருளிய ...... குருநாதா தீர்த்த எனதக மேட்டை யுடனினை ஏத்த அருளுட னோக்கி அருளுதி தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே. |
மனமே, நீ பாட்டின் பொருளை அறிந்து உருகுதல் இல்லை, பாட்டின் பொருளைச் சொல்லக் கேட்டும் உருகுதல் இல்லை, யமன் வரும் வழியைக் கண்டும் இறைவனிடம் பக்தியால் உருகுவதில்லை, கஷ்டங்களை தினமும் அனுபவித்தும் உண்மைப் பொருளை நீ அறிவதில்லை, நாள்தோறும், பாம்பை அணிந்த சிவபிரான் அருளும் மோக்ஷ இன்பத்தை விரும்புவதும் இல்லை, நுனி நாக்காலாவது இறைவனைப் போற்றும் துதி சொல்ல அறிகின்றாய் இல்லை, பாழ்பட்ட இந்தப் பிறப்புக்களிலே மீண்டும் பிறப்பெடுத்து உழலும் மனமே, நீ நல்ல வழியிலே போகமாட்டேன் என்று சொல்கிறாய். உடல் சிறையாகிய இந்தக் கூட்டை விடுகின்றதாக நீ இல்லை, ஏட்டில் உனக்கென எழுதிவைத்த தலைவிதி எந்த வழியிலே உன்னைச் செலுத்துகிறது என்று நீ அறிகின்றிலை, உன் நிலைமையைப் பார்த்தும் சும்மா இருக்க முடியாமல் நான் இனி உனக்கு ஒரு நல்வார்த்தை கூறுகிறேன் - இதை நீ கேட்பாயாக. அவனது திருப்புகழை ஓதி அவனைத் துதிக்க உனக்கு நல்ல வாக்கையும் உன் உள்ளத்தில் நல்ல தரிசனத்தையும் அவன் உனக்கு அருள்வான். அடியார்களுக்கு அவன் வெகு எளியனானவன். அவனை வாழ்த்தினால் நல்வினை தீவினை இரண்டையுமே விலக்கும் முருகனை நீ இனி சிந்திப்பாயாக. உலகையே ஆட்டி வைப்பவரான சிவபிரான் வடக்கில் உள்ள மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டி, திரிபுரத்தில் தீ மூட்டி, யமனுடைய ஆணவம் அழியும்படி பாதத்தை நீட்டி அவனை உதைத்துத் தள்ளி, மன்மதனுடைய உடலைச் சாம்பலாகும்படி எரித்து தக்ஷனின்* யாகத்தை அழித்து, அந்த தக்ஷனைக் கொன்று ஆட்டின் தலையை அவனது உடலின் மீது பொருத்தி, வேதவல்லி ஸரஸ்வதிதேவியின் உடலில் காயம் ஏற்படும்படி அவளை வாட்டியவரும், உமாதேவியின் கணவருமான சிவபிரான் அருளிய பாலனே, திருப்பாசுரம் எழுதிய ஏட்டை வைகையாற்று வெள்ளத்தில் எதிர்த்து ஏறும்படியாக ஓட்டியும், நெருப்பிலே இட்ட ஏடு பச்சைநிறத்துடன் விளங்கும்படி காட்டியும், (வாது செய்து தோற்ற) சமணர்களைக் கோபித்துக் கழுவேற வைத்தும், அருள் செய்த (திருஞானசம்பந்தனாக வந்த) குருநாதனே, பரிசுத்தனே, என் மனம் விருப்பத்துடன் உன்னை துதிக்கும்படி நீ திருவருளுடன் கண்பார்த்து அருள வேண்டும். தீர்த்தமலை** நகரின் காவல் தெய்வமான பெருமாளே, இந்திராணி மகள் தேவயானையின் பெருமாளே.
* தக்ஷன் சிவபிரானின் மாமனார். சிவனையும் தன் மகள் தாக்ஷ¡யணியையும் மிகவும் அவமதித்து தக்ஷன் செய்த யாகத்தை சிவபிரான் வீரபத்திரர் உருவத்தில் வந்து அழித்து, தக்ஷனைக் கொன்று, ஆட்டுத்தலையை அவனது உடலில் பொருத்தினார். யாகத்துக்கு வந்த ஸரஸ்வதியின் முகத்தில் கோபத்துடன் காயம் ஏற்படுத்தினார் - கந்த புராணம்.
** தீர்த்தமலை சேலம் மாவட்டத்தில் மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடகிழக்கில் 17 மைலில் உள்ளது.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 615 | 616 | 617 | 618 | 619 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தாத்த, தனதன, இல்லை, சிவபிரான், பெருமாளே, உனக்கு, அவனது, நல்ல, அழித்து, யாகத்தை, அவன், என்று, அவனை, தக்ஷனைக், வந்த, மகள், தக்ஷன், செய்த, காயம், கொன்று, உடலில், வழியிலே, முருகிலை, ஆட்டி, மூட்டி, முருகனை, கூட்டை, மறிகிலை, ஏத்த, அருளிய, தீர்த்த, தீர்த்தமலை, பாம்பை, உருகுதல், பொருளை, மனமே, பாட்டின், பார்த்து

