திருப்புகழ் - பாடல் 561 - திருசிராப்பள்ளி
ராகம் -
பூர்வி கல்யாணி; தாளம் - அங்கதாளம் - 6 1/2
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2
தகதிமிதக-3, தகிட-1 1/2, தகதிமி-2
|
தானத்தத் தான தானன தானத்தத் தான தானன தானத்தத் தான தானன ...... தந்ததான |
|
வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொ ணாதது வாய்விட்டுப் பேசொ ணாதது ...... நெஞ்சினாலே மாசர்க்குத் தோணொ ணாதது நேசர்க்குப் பேரொ ணாதது மாயைக்குச் சூழொ ணாதது ...... விந்துநாத ஓசைக்குத் தூர மானது மாகத்துக் கீற தானது லோகத்துக் காதி யானது ...... கண்டுநாயேன் யோகத்தைச் சேரு மாறுமெய்ஞ் ஞானத்தைப் போதி யாயினி யூனத்தைப் போடி டாதும ...... யங்கலாமோ ஆசைப்பட் டேனல் காவல்செய் வேடிச்சிக் காக மாமய லாகிப்பொற் பாத மேபணி ...... கந்தவேளே ஆலித்துச் சேல்கள் பாய்வய லூரத்திற் காள மோடட ராரத்தைப் பூண்ம யூரது ...... ரங்கவீரா நாசிக்குட் ப்ராண வாயுவை ரேசித்தெட் டாத யோகிகள் நாடிற்றுக் காணொ ணாதென ...... நின்றநாதா நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி ராமலை நாதர்க்குச் சாமி யேசுரர் ...... தம்பிரானே. |
நூல்களைக் கற்று கலையறிவால் காணமுடியாததும், பூஜை செய்து கிரியாமார்க்கத்தால் அடைதற்கு அரியதும், வாக்கினால் இத்தன்மைத்து எனப் பேசமுடியாததும், உள்ளத்தில் குற்றமுடையோருக்குத் தோன்றி விளங்காததுவும், அன்பு செய்தார் நெஞ்சினின்றும் நீங்காது நிற்பதுவும், மாயையினால் சூழமுடியாததும், விந்து (சக்தி) சுழல அதனின்று எழும் நாதம் (சிவம்) என்னும் ஓசைக்கு அப்பால் வெகு தூரத்தில் இருப்பதுவும், ஆகாயத்திற்கு முடிவிலே இருப்பதுவும், இவ்வுலகத்திற்கு ஆதியானதுவும் ஆகிய மெய்ப்பொருளை, உள்ளக் கண்களால் நாயேன் கண்டு, சிவயோகத்தை அடையுமாறு உண்மை அறிவை நீ உபதேசித்து அருள்வாய். இனி யான் இந்த உடம்பை வெறுத்து ஒதுக்காது மாயை வசப்படலாமோ? நீயே மிக விரும்பி, தினைப்புனம் காவல் செய்த வேட்டுவப் பெண் வள்ளிக்காக பெரிதும் மயங்கி, பொன் போல் ஒளிரும் அவள் பாதத்தில் வீழ்ந்து வணங்கிய கந்தக் கடவுளே. ஆரவாரித்து சேல்மீன்கள் பாய்ந்து விளையாடுகின்ற வயலூர் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளி, விஷம் நிறைந்த பாம்பை மாலையாகப் பூண்ட மயிலாகிய குதிரை மீது பவனிவரும் வீரனே, நாசியின் வழியாக பிராணவாயுவை வெளியேவிட்டு, மீண்டும் பூரகம் செய்து ஸஹஸ்ராரப் பெருவெளியை* எட்டமுடியாத தவயோகிகள் எத்தனை விரும்பியும் காணமுடியாதபடி (அப்பாலுக்கு அப்பாலாய்) நின்ற தலைவனே, மலையின் கிளைச் சிகரம் வளர்ந்து சென்று உயர்ந்த மேகமண்டலத்தைச் சேரும் திரிசிராமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு குருஸ்வாமியே, தேவர்களுக்குத் தலைவனே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 559 | 560 | 561 | 562 | 563 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ணாதது, பிங்கலை, இந்த, இடைகலை, தானத்தத், தானன, பத்து, ஒன்று, நாடிகளுள், விடும், யும், முனை, சுழு, சுவாசம், என்ற, என்றும், என்னும், சக்தி, செய்து, காணொ, இருப்பதுவும், மீண்டும், காற்றுக்கு, சென்று, தலைவனே, பூரகம், பெயர்

