திருப்புகழ் - பாடல் 517 - கயிலைமலை
ராகம் - ...; தாளம்
-
|
தனதன தனனத் தான தனதன தனனத் தான தனதன தனனத் தான ...... தனதான |
|
திருநில மருவிக் காலி னிருவழி யடைபட் டோடி சிவவழி யுடனுற் றேக ...... பரமீதே சிவசுட ரதனைப் பாவை மணமென மருவிக் கோல திரிபுர மெரியத் தீயி ...... னகைமேவி இருவினை பொரியக் கோல திருவரு ளுருவத் தேகி யிருள்கதி ரிலிபொற் பூமி ...... தவசூடே இருவரு முருகிக் காய நிலையென மருவித் தேவ ரிளையவ னெனவித் தார ...... மருள்வாயே பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர் பழமறை பணியச் சூல ...... மழுமானும் பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறெனக் கோவு பரியினை மலர்விட் டாடி ...... அடியார்கள் அரஹர வுருகிச் சேசெ யெனதிரு நடனக் கோல மருள்செயு முமையிற் பாக ...... ரருள்பாலா அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ டடியவர் கயிலைக் கான ...... பெருமாளே. |
ஒளி வீசும் ஜோதி இடத்தைப் பொருந்தி, பிராண வாயு செல்லும் இடகலை, பிங்கலை மார்க்கங்கள்* அடைபடும்படி மூச்சை ஓட்டி, சிவ நெறியில் நின்று, தனித்து நிற்கும் மேலிடத்தே சிவ ஜோதியை பொம்மைக் கல்யாணம் போலக் கூடி, விளங்கி நிற்கும் (காமம், வெகுளி, மயக்கம் என்னும்) மும்மலங்களும் உனது புன்னகையில் விளைந்த தீயில் எரிபட்டு அழிய, எனது நல் வினை, தீ வினை ஆகிய இரண்டு வினைகளும் பொரிந்து சாம்பலாக, அழகிய உனது திருவருளாகிய உருவத்தில் ஈடுபட்டு, இருளும் ஒளியும் இல்லாத அழகிய பூமியிடத்தே, தவ நெறிப் பயனாய் நீயும் நானும் ஒன்றுபடக் கலந்து, (அத்தகையக் கலப்பால்) இவ்வுடல் நிலைபட்டதெனப் பொருந்தி, தேவர்கள் இவன் இளையவன் என்று என்னை வியந்து கூறும்படியான விசித்திரப் பெரும் பேற்றை அருள்வாயாக. சிலம்பு, வீரக் கழல்கள் ஆகியவற்றின் ஒலிகள் எட்டு திசைகளிளும் செவிடுபடும்படியாக ஒலிக்க, பிரமன், ருத்திரன், திருமால் என்னும் முத்தேவர்களும், பழமையான வேதங்களும் பணிந்து போற்ற, (கைகளில் ஏந்திய) சூலம், மழு, மான் ஆகிய மூன்றும் பக்குவமாகச் சுழல, நாகராஜனாகிய ஆதிசேஷனின் பணாமுடிகள் நெறு நெறு என்று முறிய, நந்தியாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருத்தலை விட்டு, நடனம் செய்து, அடியார்கள் அரகர என மனம் உருகி ஜெய ஜெய என்று போற்ற, ஆனந்த நடனக் காட்சியைத் தந்தருளும் பார்வதியின் பாகராகிய சிவ பெருமான் ஈன்றருளிய குழந்தையே, மலர் அணிந்த கூந்தலை உடைய அழகிய பாவையும், லக்ஷ்மியின் மகளுமான வள்ளியின் மஞ்சத்திலே இன்பப் போரிடுதலை விரும்புவதோடு, அடியார்கள் வாழும் கயிலை மலையிடத்தும் விருப்பம் காட்டும் பெருமாளே.
* இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் 'பூரகம்' என்றும், வெளிவிடும் காற்றுக்கு 'ரேசகம்' என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு 'கும்பகம்' என்று பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட 'ஆதாரங்கள்' (நிலைகள், சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் 'பிரம கபால'த்தில் உள்ள 'ஸஹஸ்ராரம்' (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும். இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும் ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் 'மூலாதார'த்தை வந்து அடையும். இந்த ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று 'மண்டல'ங்களும் (அக்கினி, ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து 'நாடி'களும் (இடைகலை, பிங்கலை, சுழுமுனை முதலியன) உள்ளன.'இடைகலை' பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.'பிங்கலை' பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம்.'சுழு முனை' இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.'சுழு முனை' ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. 'இடைகலை'யும், 'பிங்கலை'யும் ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.சுவாச நடப்பை 'ப்ராணாயாமம்' என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 515 | 516 | 517 | 518 | 519 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பிங்கலை, என்று, அழகிய, தனனத், பத்து, இடைகலை, தனதன, அடியார்கள், பெயர், இந்த, என்ற, ஒன்று, முனை, யும், சுழு, சுவாசம், காற்றுக்கு, விடும், நாடிகளுள், போற்ற, பொருந்தி, செல்லும், பெருமாளே, நடனக், பாவை, நிற்கும், என்னும், மருவிக், நெறு, ஆகிய, வினை, உனது, என்றும்

