திருப்புகழ் - பாடல் 248 - திருத்தணிகை
ராகம் - தாணதி கொளை;
தாளம் - ஆதி - எடுப்பு 3/4 இடம்
|
தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன ...... தனதான |
|
எலுப்பு நாடிக ளப்பொடி ரத்தமொ டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ ...... சதிகாரர் இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு ...... சமுசாரம் கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள் அழிப்பர் மாதவ முற்றுநி னைக்கிலர் கெடுப்பர் யாரையு மித்திர குத்தரர் ...... கொலைகாரர் கிருத்தர் கோளகர் பெற்றுதி ரிக்கள வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்திவ ...... ணுழல்வேனோ ஒலிப்பல் பேரிகை யுக்ரவ மர்க்கள மெதிர்த்த சூரரை வெட்டியி ருட்கிரி யுடைத்து வானவர் சித்தர்து தித்திட ...... விடும்வேலா உலுத்த ராவண னைச்சிர மிற்றிட வதைத்து மாபலி யைச்சிறை வைத்தவன் உலக்கை ராவிந டுக்கடல் விட்டவன் ...... மருகோனே வலிக்க வேதனை குட்டிந டித்தொரு செகத்தை யீனவள் பச்சைநி றத்தியை மணத்த தாதைப ரப்ரம ருக்கருள் ...... குருநாதா வனத்தில் வாழும யிற்குல மொத்திடு குறத்தி யாரைம யக்கிய ணைத்துள மகிழ்ச்சி யோடுதி ருத்தணி பற்றிய ...... பெருமாளே. |
எலும்பு, நாடிகள், நீருடனும், ரத்தத்துடனும், அழுக்குகள், மூளைகள், தகுதியின்றி உள்ளிருக்கும் புழுக்கள், இவையாவும் நிறைந்திருக்கும் வீடு இந்த உடல். அத்தகைய வீட்டில் எத்தனை குணத்து மோசக்காரர்கள், அக்கிரமக்காரர்கள், சூதான உள்ளத்து மக்கள், தம் வறட்டுப் பேச்சால் ஊரையே ஏமாற்றுபவர்கள், பூமியில் தோன்றி, பிறந்த பிறப்புடன் முன்னேற்றம் இன்றி இருப்பவர்கள், வீடுகள் பலவற்றைக் கட்டி மிகவும் அலட்டிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற்றதைப் பேசித் திரிபவர், மோகவலையில் விழுந்து கிடக்கும் துஷ்டர்கள், பெரிய தவநிலையைப்பற்றி சற்றேனும் நினைத்துப் பார்க்காமல் அழிப்பவர்கள், யாவரையும் கெடுப்பவர்கள், நண்பர்களுக்கும் வஞ்சனை செய்பவர்கள், கொலைகாரர்கள், செருக்கு மிகுந்தவர்கள், கோள் சொல்பவர்கள் முதலியோருடன் சேர்ந்து திரிந்து திருட்டுத்தொழிலில் ஈடுபடுபவர்கள், கோப நெஞ்சினர் ஆகியோரையும், எத்தனை வியாதிகள் உண்டோ அத்தனையையும், வெற்றி பெற உழலும் இத்தகைய உடலாகிய வீட்டை நான் ஆசைப்பட்டு எடுத்து இந்த உலகில் அலைந்து திரிவேனோ? ஒலிக்கின்ற பல முரசு வாத்தியங்கள் முழங்கும் கடுமையான போர்க்களத்தில் எதிர்த்துவந்த அசுர வீரர்களை வெட்டி அழித்து, மாயை சூழ்ந்த கிரெளஞ்சமலையைப் பிளந்து எறிந்து, தேவர்களும் சித்தர்களும் வணங்கும்படியாகச் செலுத்திய வேலை உடையவனே, காமாந்தகனான ராவணனைச் சிரம் அற்று விழ அவனை வதைத்தவனும், (தன் பாதத்தை அவன் தலைமேல் வைத்து) மகாபலியைப் பாதாளத்தில் தள்ளிச் சிறை வைத்தவனும், இரும்பு உலக்கையைப் பொடிப்பொடியாக்கி நடுக்கடலில் கரைத்தவனும்* ஆகிய திருமாலின் மருகனே, வலி உண்டாகும்படியாக வேதப் பிரமனை சிரங்களில் குட்டினவனே, நடனம் செய்து ஒப்பற்ற உலகத்தை ஈன்ற தாயான பச்சை நிறப் பார்வதியை மணந்த தந்தையாகிய பரப்பிரம்மப் பொருளான சிவபிரானுக்கு உபதேசித்து அருளிய குருநாதனே, காட்டிலே வாழும் மயிலினம் போன்ற அழகியான குறத்தியாகிய வள்ளிதேவியை மயக்கி அணைத்து, மனமகிழ்ச்சியுடன் திருத்தணித்தலத்தில் பற்றுடன் வீற்றிருக்கும் பெருமாளே.
* யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர் உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின் பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான். யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 246 | 247 | 248 | 249 | 250 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தத்தன, தனத்த, தானன, உலக்கையைப், இரும்பு, நடுக்கடலில், வேடன், கண்ணனின், வெற்றி, யாதவர், எத்தனை, வீடுகள், மூளைகள், உலக்கை, பெருமாளே, இந்த, பிறந்த

