திருப்புகழ் - பாடல் 23 - திருச்செந்தூர்
ராகம் - கல்யாணி;
தாளம் - அங்கதாளம் - 9 - கண்ட ஜாதி த்ருபுடை
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2
|
தனதனன தனதனன தந்தத் தந்தத் தனதனன தனதனன தந்தத் தந்தத் தனதனன தனதனன தந்தத் தந்தத் ...... தனதான |
|
அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட் பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித் தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப் பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற் கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப் பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக் கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா திடுககடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட் டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட் டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச் சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக் குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக் குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக் கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத் தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத் தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத் திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப் புரளஎறி திரைமகர சங்கத் துங்கத் திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே. |
அமுதமாகிய திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சைக் கக்கும் சிவந்த கண்களையும், சந்திரனுடைய பிளவு போல் ஒளி விடுகின்ற வெண்மையான பற்களையும், சுருளும் தன்மையுடைய மயிர்க் குடுமியோடு கூடிய தலையையும் கொண்டவன், பேரொலியும் தண்டாயுதமும் கொடுங் கோபமும் கொண்டவனுமான யமனுடைய ஓலையானது வரும்போது உயிர் யமனுலகிற்கும் பூவுலகிற்கும் இடையே ஊசலாட, பறையும், மற்ற முரசு வகைகளும், பேரொலி மிக்க தம்பட்டம் முதலிய பல வாத்தியங்களும் ஒலிக்கவும், சுற்றத்தார் கதறி அழ, கொண்டு போகும் சந்தித் தெரு வழியே எம்முடைய பொருள் என்னும் பற்று மயக்கம் இல்லாமல் குன்றி மணியில் பாதியாகிலும் தினை அளவு கூட பங்கிட்டுத் தந்து உண்ண வேண்டிய அற வழியில் நின்று இளைத்தும், லோபி என்ற பெரும் பழி நீங்க, இன்றைக்கு ஆகட்டும், நாளைக்கு ஆகட்டும் என்று எண்ணாமல், தர்மம் இப்போதே செய்வாயாக என்னும் உணர்வு அழிந்து போக (உடலை) எடுத்துக் கொண்டு டுடு டுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்டு என்ற கொட்டின் ஒலிக்கேற்பப் போகின்ற மார்க்கத்தை நினைத்து மனத்தில் பயம் கொண்டு ஏழைகளுக்கு என் வருவாயில் பங்கிட்டு தருமம் புரிய மாட்டேனோ? ஆம்பல் மலரின் நாயகனான சந்திரனின் பிறை அமிர்த கிரணங்களை மிகவும் சிந்தவும், திருவடிச் சிலம்பு வேத மொழிகளை மிக இனிமையாகக் கொஞ்சி ஒலிக்கவும், வளைவுடைய சடை நடனத்திற்கு ஏற்ப சுழன்று தொங்கவும், பக்கத்தில் உள்ள கொடி போன்ற பார்வதி தேவி ஆடவும், சிறந்த கங்கை ஆறு அசைந்தோடவும், இசை ஒலி மிகுதியாகப் பொங்கவும், பாதத்திலுள்ள வீர கண்டாமணிகள் அதிர்ந்து ஒலிக்கவும், டெகு டெகுட டெங்கட் டெங்க தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்க (இதே) தாள ஒலியில் மேள வாத்தியம் முழங்கவும், சிவந்த கையில் உள்ள உடுக்கையானது அதிரும் தாளத்துடன், அடியார்களுக்கு இன்ப நிலையை உதவுகின்ற பரத நாட்டியத்துக்கு ஆசிரியரான சிவபெருமான் வணங்கும் சற் குரு நாதனே. உருட்சியாகத் திரளும் மணியும் முத்தும் உயர்ந்த தென்னை மரங்களில் தங்கிப் புரளும்படி அவற்றை அள்ளி வீசுகின்ற அலைகளையும் மகர மீன்களையும் சங்குகளையும் உடைய பரிசுத்தமான கடல் நீர் அணைந்துள்ள கரையை உடைய திருச்செந்தூரில் வாழும் கந்தப் பெருமாளே.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தந்தத், தனதனன, தொகுகுகுகு, ஒலிக்கவும், கொண்டு, டுண்டுட், தொங்கத், டுடுடுடுடு, என்ற, என்னும், ஆகட்டும், டுடு, உள்ள, தகதிமி, உடைய, சிவந்த, டெங்கட், கொஞ்சக், தகதகிட, கந்தப், சிந்தச், பெருமாளே, சந்தித்

