திருப்புகழ் - பாடல் 1124 - பொதுப்பாடல்கள்
ராகம் -
கரஹரப்ரியா
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35
- எடுப்பு - /4/4/4 0
நடை - தகதகிட
தாளம் - சதுஸ்ர த்ருவம் - கண்டநடை - 35
- எடுப்பு - /4/4/4 0
நடை - தகதகிட
|
தனதனன தந்தந்த தத்ததன தனதனன தந்தந்த தத்ததன தனதனன தந்தந்த தத்ததன ...... தத்ததன தான |
|
அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும் அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு ...... மாய அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவைஅடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணு வினின்மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு ...... காலம் நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு ...... மானும் நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய நினதுவழி யடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் ...... வாயே தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு ...... தீதோ தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு தரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி ...... யாவும் மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர் அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு ...... கோடி முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த ...... பெருமாளே. |
அகரம் முதல் எழுத்தாக கூறப்படுகின்ற (வட மொழியிலுள்ள) ஐம்பத்தி ஒன்று எழுத்துக்களும், உலகத்திலுள்ள எல்லாக் கலைகளும், பலதரப்பட்ட (96) தத்துவங்களும்*, அளவிட முடியாத வேதங்களும், தனக்குள் அடக்கிக் கொண்டுள்ள ஒப்பற்ற பரம்பொருளை, தன்னைத் தவிர மற்ற எல்லாப் போருள்களும் தானே ஆகி விளங்கும் ஞான நிலையை அறிபவர் அறிந்து அனுபவிக்கும் பரமானந்தப் பொருளை, யோகியர் தன்மயமான நிலையில் தரிசிக்கும் முடிவுப் பொருளை, தொடக்கம், இடைநிலை, இறுதி இவை ஏதும் இல்லாத பரிசுத்தப் பொருளை, அணுவைக் காட்டிலும் சிறிய அணுவாக விளங்கும் பொருளை, மும்மலங்களும் (ஆணவம், கன்மம், மாயை), மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகிய நான்கு கரணங்களும், ஸத்வம், ராஜதம், தாமதம் என்ற முக்குணங்களும், நீங்கின ஒரு வேளையில் துலங்கும் அருள் உருவத்தை, ஊழிக்காலம் முடிகின்ற சமயம் ஒன்று என்னும் பொருளாக இருப்பதனை, நிறைந்தது, குறைந்தது, நீங்கிப் போவது என்பது ஏதுமற்று நிறை பொருளாக எல்லா இடங்களிலும் நிலைத்து நிற்கும் பொருளை, இதற்கு சமம் அதுதான் என வேறொரு பொருளை ஒப்புரைக்க இயலாததை, வானில் சஞ்சரித்துக் கொண்டே இருந்த திரிபுரத்தை சிரித்தே எரித்த சிவபெருமானும், (உன்னை நோக்கி) அரசனே, குருமூர்த்தியே, குமரனே, என்றெல்லாம் பக்தியுடனே போற்றித் தொழுதவுடன் அவருக்கு அருளிச் செய்த மெளன உபதேசமந்திரத்தை** உன் பழைய அடிமையாகிய அடியேனுக்கும் புரியும்படி இனிமையாக உபதேசித்து அருள்வாயாக. தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு தகுதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ தனதனன தனதனன தந்தந்த னத்ததன டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு (என்று பலமுறை மேலே கண்ட அதே ஓசையுடன்) இடது கையால் கொட்டும் தோல் பறைகளும் உடுக்கை வாத்தியங்களும் பிற எல்லா ஒலிக்கருவிகளும், மொகு மொகு என்னும் பேரொலியோடு அதிர்ச்சி தரும்படி முழங்க, இப் பழமையான முதிர்ந்த பூமி பிளவுபட்டு வெடிக்க, நிமிர்ந்து நின்று பேய்கள் கூத்தாட, உலகம் எங்கிலும் உள்ள மக்கள் திகைத்து நிற்க, வேகமாக நடனம் செய்யும் பைரவ மூர்த்திகள் கூத்தாடி மகிழ, அசுரர்கள் இறந்து படும் போர்க்களத்தில் கோடிக்கணக்கான முதிர்ந்த கழுகுகளும், காக்கைகளும், கருடன் பருந்துகளும் பிணங்களின் அங்கங்களைக் கொத்தித் தின்ன, ரத்த வெள்ளம் பெருக, பலவகையான தலையற்ற உடல் குறைகள் கூத்தாட, முரசு வாத்தியம் பேரொலி முழக்க அசுரர்களை வெற்றி கொண்டு, தேவேந்திரனுக்கு விண்ணுலக ஆட்சியைத் தந்த பெருமாளே.
* 96 வகை தத்துவங்களில் சிவதத்துவங்கள் ஐந்து நீங்கிய மற்றவை 91. சிவதத்துவங்கள் இருந்தால் மனமும் புத்தியும் உழல்தல் இல்லை. 96 தத்துவங்கள் பின்வருமாறு:36 பரதத்துவங்கள் (அகநிலை): ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை): மண், தீ, நீர், காற்று, வெளி.ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை): வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4. ** இதே மெளன மந்திர உபதேசம் சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே என்ற வரிகளால் அறியலாம்.
| ‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 1122 | 1123 | 1124 | 1125 | 1126 | ... | 1327 | 1328 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
Thiruppugazh, திருப்புகழ், Arunagirinathar Books, அருணகிரிநாதர் நூல்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - தந்தந்த, தனதனன, பொருளை, டிகுடிகுகு, தகுதகுகு, தத்ததன, டுடுடுடுடு, தத்துவம், அகங்காரம், பொருளாக, எல்லா, என்ற, என்னும், கூத்தாட, தத்துவங்கள், புறநிலை, சிவதத்துவங்கள், முதிர்ந்த, மொகு, மெளன, டுட்டுடுடு, தகுதகெண, கெணசெகுத, குக்குடிகு, டிண்டிண்டி, குத்தகுகு, ரித்தகுத, தத்ததகு, பெருமாளே, ஒன்று, டுண்டுண்டு, னத்ததன, தீதோ, விளங்கும்

