திண்டுக்கல் - தமிழக மாவட்டங்கள்
1760 இல் ஹைதர் அலிக்கும் முகமது யூசுப்புக்கும் இங்கு பெரிய போர்
நிகழ்ந்தது. 1885 இல் ஊராட்சி மன்றம் ஏற்பட்டது. இங்கு தெலுங்கு
பேசுவோர் மிகுதியாக வாழ்கின்றனர். ஏராளமான நிலப்பரப்பில் மல்லிகை
விளைகிறது. கொடைக்கானல் மலைக்குச் செல்ல இது வாயிலாகத்
திகழ்கிறது.
தும்மலப்பட்டி :
சக்கிலியாறு,மஞ்சளாறு ஓடைகளுக்கிடையில் உள்ள இவ்வூர் வத்தலகுண்டிலிருந்து 6 கி.மீ தொலைவிலுள்ளது. நெல், கரும்பு விளைச்சல் மிகுந்த சிற்றுர். பெருந்தொகை யினராக யாதவர்களும், கவுண்டர்களும் வசிக்கின்றனர்.
பட்டிவீரண்பட்டி :
செல்வச் செழிப்பான வணிக நகரம். காப்பிக் கொட்டை வறுக்கும் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. கூட்டுறவுத் தொழிலிலும் தமிழகத்தில் முன்னணியில் நிற்கிறது. ஏலக்காய் வணிகமும் சிறப்புற நடக்கிறது. பருவகாலங்களில் அன்றாடம் இலட்ச ரூபாயிற்கும் அதிகமான மதிப்புடைய பன்னீர் திராட்சை, மலைவாழைப்பழம் முதலியன கூடைகளிலும் ஓலைப்பெட்டிகளிலும் வைத்து வெளியூர்களுக்கு அனுப்பப்படுகின்றன. இங்கு நாடார்கள் அதிகத் தொகையினராக உள்ளனர். மேனிலைப்பள்ளி ஒன்று உள்ளது.
தாடிக்கொம்பு :
திண்டுக்கல்லுக்கு வடக்கே 8 கி.மீ தொலைவில் இவ்வூர் குடகனாற்றின் கரையில் அமைந்துள்ளது. விசயநகர ஆட்சியில் தெலுங்கர்கள் மிகுதியாக இவ்வூரில் குடியேறினர். தாலவனம் என்பது இதன் பழம் பெயர். தாடிக்கொம்பு என்று தெலுங்கர் பெயர் சூட்டினர் (தாடி-பனைமரம், கும்பு-கூட்டம்). இவ்வூர் செளந்தரராசப் பெருமாள் கோயிலைப் போல் திண்டுக்கல் பகுதியில் வேறு கோயில் கிடையாது. நாற்புறமும் தேரோடும் வீதிகள் அமைத்து நெடிதுயர்ந்த கோயிலாக எழுப்பப்பட்டுள்ளது.
சிறுமலை :
சிறுமலை |
மலையின் உயரம் 1200 மீட்டர். அகலம் 20கி.மீ. இதனைச் சுற்றிலும் புதூர், பமையூர், சக்கிலிப்பட்டி, அரளிக்காடு, தவிட்டுக்கட்டை, தாழைக்காடு, வேளாண்பண்ணை ஆகிய ஊர்கள் இருக்கின்றன. இங்கு நாயுடு, சக்கிலியர், பிள்ளைமார் மற்றும் பளியர் என்ற பழங்குடியினர் வாழுகின்றனர். ஆண்டு முழுவதும் இதமான காலநிலை நிலவுகிறது. வடகிழக்குப் பருவக்காற்றால் மழை பெய்கிறது. இம்மலைக் காற்று காசநோயைக் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது.
வாழை, பலா, ஆரஞ்சு, எலுமிச்சை, மாதுளை முதலியன மிகுதியாக விளைகின்றன.காப்பித் தோட்டங்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படுகின்றன. மேலும் அதிக அளவில் சாமை, தினை போன்ற தானியங்கள் பயிராகின்றன. காடுகளும் அடர்த்தியாக உள்ளதால், பல வகை மரங்களும் வளர்ந்தோங்கியுள்ளன. வெட்டுக் காயத்தைக் குணப்படுத்தும் 'லெமன் கிராஸ்' என்னும் புல் இங்கு அதிகமாய் விளைகிறது.
சின்னாளப்பட்டி :
இவ்வூரிலிருந்து மதுரை 50 கி.மீ. தொலைவில் உள்ளது. பழனிமலை, சிறுமலை இவற்றிற்கு இடையில் பள்ளத்தாக்கில் இவ்வூர் அமைந்துள்ளது. நெசவுத் தொழில் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது. நார்ப்பட்டு நெசவு மட்டும் சுமார் 12,000 தறிகளில் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் விற்பனையாகும் சரக்கின் மதிப்பு மூன்று கோடிக்கும் மேல் ஆகும். இங்குத் தயாராகும் சேலைகளும் வேட்டிகளும் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுகின்றன.
அகரம் :
தாடிக்கொம்புக்கு அருகில் உள்ள இச்சிற்றுரில் காழங்குடை என்னும் ஒரு வகைக் குடை மிகுதியாக விற்பனையாகிறது. புரட்டாசியில் நடைபெறும் மாரியம்மன் திருவிழா வில் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கூடுகிறார்கள். இதற்கென விசேஷ பேருந்துகள் நிறைய விடப்படுகின்றன. திருவிழாவன்று பெரும்பாலும் மழை பெய்யும். விழா இரவில் அரிசந்திரா நாடகம் நடத்துவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அய்யம்பாளையம் :
கோயிலில் குடிகொண்டிருக்கும் அய்யனார் பெயரால் இவ்வூர் வழங்குகிறது. இது பட்டி வீரன்பட்டி எல்லையில் அமைந்துள்ளது. தாண்டிக்குடி மலையும், மருதா நதியும் ஊரை அழகுப்படுத்துகின்றன. பருத்தி, தென்னை, மாங்கனி, வாழை, முதலியன இவ்வூரின் முக்கிய விளைப் பொருட்களாகும். எலுமிச்சை, ஆரஞ்சு, ஏலக்காய், காப்பி முதலியன இங்கு பெருவாரியாக விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் சமஅளவில் உள்ளனர். சித்தையன் கோட்டை என்னும் ஊரிலுள்ள அணையிலிருந்து திண்டுக்கல் நகரம் குடிநீர் பெறுகிறது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 6 | 7 | 8 | 9 | 10 | ... | 12 | 13 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திண்டுக்கல் - Dindigul - தமிழக மாவட்டங்கள் - Tamilnadu Districts - தமிழ்நாட்டுத் தகவல்கள் - Tamilnadu Information - திண்டுக்கல், இங்கு, இவ்வூர், முதலியன, மிகுதியாக, சிறுமலை, தமிழக, மாவட்டங்கள், tamilnadu, என்னும், அமைந்துள்ளது, நடைபெறுகிறது, தகவல்கள், தமிழ்நாட்டுத், சாலையில், பெயர், குணப்படுத்தும், districts, வாழை, மக்கள், | , dindigul, எலுமிச்சை, ஆரஞ்சு, தொலைவில், தாடிக்கொம்பு, தொழில், சிறப்பாக, நகரம், தெலுங்கு, உள்ள, information, ஏலக்காய், விளைகிறது, உள்ளது, உள்ளனர், அனுப்பப்படுகின்றன, திண்டுக்கல்லுக்கு