சேர மன்னர் வரலாறு - கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் காலத்தில், அவனுக்கு நேர் இளையவனும், அவன் தந்தை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடைய மற்றொரு மனைவியான சோழன் மணக்கிள்ளியின் மகனுமான செங்குட்டுவன் குடநாட்டுப் பகுதியில் இருந்து தன் தமையனுக்குக் கீழ் நின்று துணை புரிந்து வந்தான். நார்முடிச் சேரல் இறந்தபின் செங்குட்டுவனே சேர நாடு முழுதிற்கும் முடிவேந்தனாயினான். செங்குட்டுவன் சிறந்த மெய்வன்மையும், பகைவரும் வியந்து பாராட்டும் திண்ணிய கல்வியறிவும், நண்பர்பாலும் மகளிர்பாலும் வணங்கிய சாயலும், பிறர்பால் வணங்காத ஆண்மையும் உடையவன். போர்கள் பல செய்து வெற்றிபெற்ற காலத்துப் பகைவரிடத்திலிருந்து பெரியவும் அரியவு மான பொருகள் பல பெறுவான்; ஆயினும், அவற்றை அத்தன்மையனவானக் கருதாது பிறர்க்கு ஈத்துவக்கும் இன்பத்தையே நாடுவது செங்குட்டுவனது சிறந்த பண்பாகும். மேலும், தனக்கு ஒரு குறையுண்டாயின், அது குறித்துப் பிறரை அடைந்து இரந்து நிற்கும் சிறுமை செங்குட்டுவன்பால் கனவினும், செங்குட்டுவன், உலகியல் பொருளின்பங்களில் மிகக்குறைந்த பற்றும், தன் புகழ் நிலைபெறச் செய்வதில் ஊற்றமும் ஊக்கமும் உடையன் எனச் சாலும்.
குடவர் கோமான் என்ற இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆட்சிசெய்த காலத்தில், சோழவேந்தர் நட்புப் பெற்று அவருள் சிறந்தோன் ஒருவனுடைய மகளான மணக்கிள்ளி யென்பவளை மணந்து கொண்டான். அவளுக்குப் பிறந்த செங்குட்டுவன், இளமையில் சோழநாட்டு வேந்தன் மனையில் இருந்து சோழர்களின் குணஞ் செயல்களையும் நாட்டின் நலங்களையும் அறிந்திருந்தான். செங்குட்டுவன் குட் நாட்டில் அரசு புரந்து வருகையில், ஒருகால், சோழருட் சிலர் தம்முள் ஒருவனான கிள்ளியென்பான்[1] அரசு கட்டிலேறுவது பற்றிப் பகை கொண்டு ஒருவரோ டொருவர் பூசலிட்டனர். அதனால் நாட்டின் நலம் குறைந்தது. அந் நாளில் பாண்டி வேந்தர் அவர்களை அடக்கி நன்னிலைக்கண் நிறுத்தும் அத்துணை வலியின்றியிருந்தனர். மதுரை மாவட்டத்தில் உள்ள மோகூரில் இருந்த குறுநிலத்தலைவர்களே மேம் பட்டிருந்தனர். ஆயினும் அவர்கள் நடுநிலை பிறழ்ந்தொழுகினர். இதனால் சோழநாட்டுச் சான்றோர் சிலர், குடவர் கோமானாய்த் திகழும் செங்குட்டுவனை அடைந்து நிகழ்ந்தது முற்றும் நிலைபெறக் கூறினர்.
செங்குட்டுவன் வலிமிக்க தொரு படையைத் திரட்டிக்கொண்டு சோழ நாட்டிற்குச் சென்றான். சோழ நாட்டில் தன் மைந்தனுமான கிள்ளிவனோடு ஒன்பது சோழர்கள் போரிடுவது கண்டு அவர்களை ஒன்று படுத்த முயன்றான். அம் முயற்சி கைகூடாது போகவே அவர்களோடு தானும் போர் தொடுத்தான். அவர்களும் பலர் தம்மிற் கூடி உறையூரை நோக்கித் திரண்டு வந்தனர். செங்குட்டுவன் கிள்ளிக்குத் துணையாய் நின்று உறையூர் நேரிவாயிலிலேயே[2] அவர்களை எதிரேற்று வலியழித்தான்; அதனால் அவர்கள் மீட்டும் போர் தொடுக்கும் ஆற்றலின்றிக் கெட்டழிந்தனர். முடிவில் செங்குட்டுவன் தன்மைந்துன்னைச் சோழர் வேந்தனாக முடிசூட்டிச் சிறப்பித்துவிட்டுத் தன் குடநாடு வந்து சேர்ந்தான். இதனையே, “வெந்திறல் ஆராச் செருவில் சோழர் குடிக்குரியோர் ஒன்பதின்மர் வீழ வாயிற்புறத்து இறுத்து[3] நிலைச் செருவின் ஆற்றலை அறுத்துக் கெடலருந்தானை யொடு” திரும்பினான் என்று பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது.
நார்முடிச்சேரலுக்குப் பின் செங்குட்டுவன், சேரநாட்டு முடிவேந்தனாய் வஞ்சிமாநகர் வந்து சேர்ந்தான். இவனது புகழ் பெருகுவது குடநாட்டுக்கு வடக்கிலிருந்து வட வேந்தர்களுக்கு மனக்காய்ச்சலை உண்டுபண்ணிற்று. அவர்கள் கடம்பகுல வேந்தர் எனப்படுவர். அவர்கள் நெடுஞ்சேரலாதனோடு கடற்போர் செய்து கடம்பு மரமாகிய தங்கள் காவல் மரத்தை இழந்து மீளப் போர் தொடுக்கும் பரிசிழந்திருந்தனர். அவன் வானவரம்பனாக இருந்து போய் இமயவரம்பன் என்ற இசை நிறுவிச் சிறந்தது அவர்களுடைய புகழ்க்கும் மானத்துக்கும் மாசு செய்வதாகக் கருதினர். அவன் காலத்தில் மேலைக் கடலில் சேரரும் அவர் நண்பரும் ஒழிய, ஏனோ எவரும் கலம் செலுத்துதல் இயலாது என்னும் பேரிசை நாடெங்கும் பரவியிருந்தது. அதனால் அவ் வட வேந்தர்கள் கடல் வழியாகப் போர் தொடுப்பதை விடுத்து நிலத்து வழியாக ஒரு பெரும்படை திரட்டி வரக் கருதினர். செங்குட்டுவன் குடநாட்டினின்றும் நீங்கிக் குட்டநாட்டில் அரசு வீற்றிருப்பது கண்டு குடநாட்டின் வட பகுதியில் நுழைந்து போர் தொடுத்தனர். தொடக்கத்தில் குடவர் படை வடவர் படைமுன் நிற்கலாற்றது பின்வாங்கியது. பின்பு, குட்டுவர் படை போந்து இடுப்பில் என்னுடமிடத்தே தங்கி வடவர் படையை வெருட்டவே, இரண்டும் வயலூர் என்னு மிடத்தே கடும்போர் புரிந்தன. வடவர் படை அழிந்தது; அவரது முழுமுதல் அரணம் தவிடுபொடியாயிற்று. உய்ந்தோடிய வடவர் சிலர் கொடுகூர் என்னுமிடத் திருந்த அரண்களில் ஒளித்தனர். சேரர் அதனை யுணர்ந்து இடையிலோடிய ஆற்றைக் கடந்து கொடுகூரை அடைந்து அரணையழித்து வடவர் படையைத் தகர்த்தனர். இந்த வயலூர் இப்போது பெயிலூர் என வட கன்னட நாட்டில் உளது. இடும்பில் என்பது இப்போது உடுப்பியென வழங்குகிறது. கொடுகூர் கோட்கூரு என மருவியுளது.
- ↑ 1. இவனைக் கரிகாலனெனக் கருதுவோரும் உண்டு. அகம். 125.10
- ↑ 2. உறையூரின் தென்புற வாயில் நேரிவாயிலாகும்.
- ↑ 3. சிலப். 27: 118-23: 116-9, பதிற். iv பதி.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - செங்குட்டுவன், வடவர், போர், சிலர், அதனால், அரசு, அவர்களை, குடவர், இமயவரம்பன், அவன், இருந்து, அடைந்து, காலத்தில், நாட்டில்