சேர மன்னர் வரலாறு - கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
இச் செய்தி செங்குட்டுவனுக்குத் தெரிந்தது. உடனே, அறுகை தன்னாட்டிற்கு மிக்க சேணிடத்தே இருப்பதை அறிந்திருந்தும், தான் செய்த கடற்போர் செவ்வே நிகழ்ந்து வென்றி விளைப்பதற்கு அவ்வறுகை துணைசெய்தமையின், அவன் தனக்குக் கேளான் என வஞ்சினம் மொழிந்து, செங்குட்டுவன் தன் பெரும் படையுடன் போந்து மோகூர்ப் பழைனோடு போர் தொடுத்தான். பழையனும் நெடுமொழி நிகழ்த்திக் கடும்போர் உடற்றினான். அவனுக்குச் சோழவேந்தர் சிலரும் வேளிர் சிலரும் துணை புரிந்தனர். செங் குட்டுவன் அவனுடைய மோகூர் அரண்களை அழித்து, வேந்தர் முதலியோரது துணையைச் சிதைத்து, அவனுடைய காவல் மரமான வேம்பினை வெட்டி, அது போர்முரசு செய்வதற்கு ஏற்றதாய் இருப்பது கண்டு, ஏற்றவாறு துண்டஞ் செய்து களிறு பூட்டிய வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வஞ்சி மாநகர் வந்து சேர்ந்தான். இதனைப் பரணர், “நுண்கொடி உழிஞை வெல்போர் அறுகை ஒழுகை யுய்த்தோய்[12]” என்றும், விறளியாற்றுப் படையாக, “யாமும் சேறுகம் நீரும் வம்மின், துயலும் கோதைத் துளங்கியல் விறலியர், கொளைவல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர். கருஞ்சினை விறல் வேம்பு அறுத்த, பெருஞ்சினக் குட்டுவன் கண்டனம் வரற்கே[13]” என்றும் பாடினர்.
பரணர் பாடிய பாட்டுக்குச் செங்குட்டுவன் மிக்க பரிசில் தந்தான். அவர், பின்பு பொறை நாடு கடந்து ஆவியர் தலைவனான வையாவிக் கோப்பெரும் பேகன் நாட்டுக்குச் சென்றார். செங்குட்டுவன் வஞ்சி நகர்க்கண் இனிதிருக்கையில் சோழநாட்டுக் காவிரிப்பூம்பட்டி னத்தில் தோன்றிப் பாண்டி நாட்டு மதுரை மாநகரை அடைந்த கோவலன் கண்ணகி என்ற இருவருள், கோவலன், தன் மனைவி கண்ணகியின் காற்சிலம்பு விற்க முயலுகையில், பாண்டியனால் தவறாகக் கொலை யுண்டான். அவன் மனைவி கண்ணகியென்பாள் மன்னனது தவற்றை வழக்குரைத்துக் காட்டி மதுரை மூதூரை எரித்துவிட்டு வைகையாற்றின் கரை வழியே சேர நாடுவந்து ஒரு வேங்கைமரத்தின் நிழலில் தங்கி விண்ணுலகடைந்தாள். இதற்குச் சிறிது காலத்துக்கு முன் செங்குட்டுவன் தம்பி இளங்கோ என்பார், அரசுரிமையைக் கையிகந்து துறவு பூண்டு குணவாயிற் கோட்டம் என்னுமிடத்தே உறைவாராயினர். பொறை நாட்டுப் பகுதியிலுள்ள சீத்தலையென்னும் ஊரில் சாத்தனார் என்ற சான்றோர் ஒருவர் தோன்றி மதுரை மாநகர்க் கண் கூலவாணிகம் செய்து பெருஞ்செல்வம் ஈட்டினார். பின்னர், அவர் அச் செல்வத்தையும் வாணிகத்தையும் தம் மக்கள்பால் விடுத்துத் துறவு பூண்டு சேரநாடு வந்து சேர்ந்தார். செங்குட்டவன் அவர்க்கு வேண்டுவன நல்கிச் சிறப்பித்து தோடு சாத்தனூர் என்று ஓர் ஊரையும் நல்கினான். அது யவன நாட்டுத் தாலமி (Ptolemy) என்போரால் மாசாத்தனூர் (Mastanour) என்று குறிக்கப்பட்டுள்ளது.
ஒருகால் செங்குட்டுவன் மலைவளம் காண விரும்பித் தன் மனைவி இளங்கோ வேண்மாள் உடன்வரப் பேரியாற்றங்கரைக்குச் சென்றான். அங்கே, அதற்கு இலவந்திகை வெள்ளிமாடம் என்றோர் அரண்மனை இருந்தது அப்போது அவனுடன் அரசியற் சுற்றத்தாரும் தண்டமிழாசானாகிய சாத்தனாரும் வந்திருந்தனர். அவ்விடம், நேரிமலையின் அடியில் பேரியாற்றங்கரையில், இப்போது உள்ள நேரிமங்கலம் என்னும் இடமாகும். இன்றும் அங்கே இடிந்து பாழ்பட்டுப்போன அரண்மனைக் கட்டிடங்கள் உள்ளன எனத் திருவாங்கூர் நாட்டியல் நூல்[14] கூறுகிறது. இடைக்காலத்தில் வாழ்ந்த அரச குடும்பத்தின் ஒரு கிளை அங்கே இருந்தது என அங்கு வாழ்பவர் கூறுகின்றனர்.
சேரமான் வந்திருப்பதை அறிந்த மலைவாணர் மலைபடு செல்வங்களான யானைக்கோடு, அகில், மான்மயிர்க் கவரி, மதுக்குடம், சந்தனக்கட்டை முதலிய பலவற்றைக் கொணர்ந்து தந்து, கண்ணகி போந்து வேங்கை மரத்தின் கீழ் நின்று விண்புக்கதைத் தாம் கண்டவாறே வேந்தர்க்கு எடுத்துரைத்தனர். உடனிருந்த சாத்தனார் கண்ணகியின் வரலாற்றை எடுத்து உரைத்தார். அது கேட்டு மனம் வருந்திய செங்குட்டுவன், தன் மனைவியை நோக்கி, “பாண்டியன் மனைவியான கோப்பெருந்தேவியோ கண்ணகியோ, நின்னால் வியக்கப்படும் நலமுடையோர் யாவர்?” என்று வினவி காணாது கழிந்த மாதராகிய கண்ணகியார் வானத்துப் பெருந்திருவுறுக; அது நிற்க, நம் நாடு அடைந்த இப் பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்” என்று தெரிவித்தாள். கேட்ட வேந்தன் சாத்தனாரை நோக்க, அவரும் அதுவே தக்கது எனத் தலையசைத்தார். பின்னர், வேந்தன், பத்தினிக் கடவுளாகிய கண்ணகியின் உருவம் சமைத்தற்குக் கல் வேண்டும் என அரசியற் சுற்றத்தாரை ஆராய்ந்தான். முடிவில் இமயத்தினின்றும், கல் கொணர்வதே செயற்பாலது எனத் துணிந்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - செங்குட்டுவன், எனத், அங்கே, மனைவி, மதுரை, கண்ணகியின்