சேர மன்னர் வரலாறு - கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
பின்னர், வேந்தர் பெருமானான செங்குட்டுவன் மலைவளம் கண்டு மகிழ்ச்சி கொண்டு வஞ்சிமா நகருக்குத் திரும்பிப்போந்து, இமயம் சேறற்கு வேண்டும் செயல் முறைகளைச் செய்யலுற்றான். இதற்கிடையே வடநாட்டில் ஒரு நிகழ்ச்சியுண்டாயிற்று. சேரநாட்டுக்கு வடக்கெல்லையாக விளங்கும் வானவாசி (Banavasse) நாட்டில் நூற்றுவர் கன்னர் (Satakarni) என்பார் ஆட்சி புரிந்துவந்தனர்.[15] இச் செய்தியை வானவாசி நகரத்தில் உள்ள கல்வெட்டுக்கள் உரைக்கின்றன. அவர்கள் பெயரடியாகத்தான் புன்னாடு[16] என முன்னாளில் வழங்கிய அப் பகுதி கன்னட நாடு எனப்படுவதாயிற்று; அவர் வழங்கும் திராவிட மொழியும் கன்னட மொழி எனப் பெயர் பெறுவதாயிற்று. சேர வேந்தர் வானவரம்பராகிப் பின் இமயவரம்பரான காலமுதல், அந்நூற்றுவர் கன்னர் சேரரோடு நண்பர்களாகவே இருந்தனர். அவர்கட்கு வடக்கில் இருந்த கடம்பரும் பிற ஆரிய வேந்தரும் சேரர்பால் அழுக்காறும் மனக்காய்ச்சலும் கொண்டிருந்தனர். அந்த மன்னர் ஒரு கால் திருமணத்திற் கூடிவேட்டுப் புகன்றெழுந்து, மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள், எம்போலும் முடிமன்னர் ஈங்கு இல்லை போலும்” என்று பேசிக் கொண்டனர்; அச் செய்தியைச் செங்குட்டு வனுக்கு அப் பகுதியிலிருந்து வந்த மாதவர் சிலர் தெரிவித்தனர். அதனால், அவ் வடவாரிய வேந்தரின் செருக்கை அடக்குதற்கு இதுவே ஏற்ற செவ்வி எனச் செங்குட்டுவன் கருதினான்.
கணிகள் கூறிய நன்னாளில் சேரர் பெரும்படை இமயம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றது. நூற்றுவர் கன்னர் வழியிற் குறுக்கிட்டு ஓடிய ஆறுகளைக் கடத்தற்கு வேண்டும் துணை புரிந்தனர். வடவாரிய நாட்டில் கனகன் விசயன் என்ற இரு வேந்தர்கள், உத்தரன், விசித்திரன், உருத்திரன், பயிரவன், சித்திரன், சிங்கன், தனுத்தரன், சிவேதன் முதலிய வேந்தர்களைத் துணையாகக் கொண்டு பெரும்போர் உடற்றினர்; அப்போர் பதினெட்டு நாழிகை நடந்தது; ஆரிய மன்னர் படை அழிந்து மாறிப் புறந்தந்து ஓடினர். கனகனும் விசயனும் சிறைப்பட்டனர். இமயத்தில் கண்ணகி பொருட்டு எடுத்த படிமக் கல்லை அக் கனக விசயர் முடியில் ஏற்றிக் கங்கையில் நீர்ப்படை செய்து சிறப்பித்துக்கொண்டு செங்குட்டுவன் சேரநாடு வந்து சேர்ந்தான். கனக விசயர் வஞ்சிநகர்ச் சிறைக் கோட்டத்தே இருந்தனர். பின்னர்க் கண்ணகியின் உருவமைந்த கோயிலுக்குக் கடவுள் மங்கலம் செய்தான். தமிழ்நாட்டினின்றும், ஈழம் முதலிய நாட்டினின்றும், பிறநாடுகளிலிருந்தும் வேந்தர் பலர் அவ் விழாவுக்கு வந்திருந்தனர். கனக விசயரையும் சிறை நீக்கித் தன் வேளாவிக்கோ மாளிகையில் (வேண்மாடத்தில் அரசர்க்குரிய சிறப்புடன் இருத்திக் கண்ணகி விழாவில் கலந்து கொள்ளச் செய்தான். ஈழ நாட்டிலிருந்து வந்த வேந்தன் முதற் கயவாகு எனப்படுகின்றான். பின்பு செங்குட்டுவன்,
“கைவினை முற்றிய தெய்வப் படிமத்து வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து முற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக்கடை நிறுத்தி வேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக் கடவுண் மங்கலம் செய்கென ஏவினன்.[17]” |
பிறகு வேந்தர் அனைவரும் தங்கள் தங்கள் நாட்டிலும், தங்களாற் செய்யப்படும் திருக்கோயிலில் எழுந்தருள் வேண்டும் என்று கண்ணகித் தெய்வத்தைப் பரவினர். கண்ணகித் தெய்வமும் “தந்தேன் வரம்” என்று மொழிந்தது.
இது செய்த காலத்துச் செங்குட்டுவன் ஐம்பதாண்டு நிரம்பியிருந்தான். மேலும், ஐந்தாண்டுகள் தன் வாழ்நாளைச் செங்குட்டுவன் அறத்துறை வேள்விகள் செய்து கழித்து மகிழ்ந்தான். பதிற்றுப்பத்து ஐந்தாம் பதிகம், செங்குட்டுவன் ஐம்பத்தையாண்டு வீற்றிருந்தான் என்று கூறுகிறது. கண்ணகி வரலாற்றை நேரிற் கூறிச் செங்குட்டுவன் கருத்தைப் புகழ்க்குரிய துறையில் செலுத்திய சாத்தனாரது சிறப்பை வியந்து, அவர் பெயரால் “மாசாத்தனூர்” என்ற ஊரோடு, இந் நிகழ்ச்சியைச் செந்தமிழ்க் கோயிலாகிய சிலப்பதிகாரம் அமைத்துச் சிறப்பித்த இளங்கோ அடிகள் பெயரால் “இளங்கோவூர்[18]” என்று ஊரும் சேர நாட்டில் ஏற்படுத்தி னான். அவையிரண்டும் யவன அறிஞரான தாலமயின் குறிப்பில் உள்ளமை ஆராய்ச்சி யறிஞர் கண்டு இன்புறுவாராக[19].
- ↑ 15. Bombay Gazetteer: Kanara. part ii p. 178.
- ↑ 16. Punnata of Ptolemy M. Crindle P.72. Robert Sewell’s Antiquities. p. 226. Heritage of karnataka. p. 6. அகம். 396
- ↑ 17. சிலப் 28: 288-33.
- ↑ 18. Ilankour.
- ↑ 19. MC. Crindle’s Translation: Ptolemy P. 54.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - செங்குட்டுவன், வேந்தர், செய்து, கண்ணகி, நாட்டில், வேண்டும், கன்னர்