சேர மன்னர் வரலாறு - கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
இவ்வாறு, தமது சேர நாட்டுப் படையெடுப்பு (வஞ்சிப்போர்) வெற்றி பயவாமை கண்ட வடவேந்தர் வேறு செயல்வகை அறியாது திகைத்து நின்றனர். மேலை நிலத்து யவனர்கள், சேரர் ஆதரவால் அச்சமின்றிப் பொன் சுமந்து கலங்களுடன் போந்து மிளகும் சந்தனமும் அகிலும் பிற விரைப் பொருளும் கொண்டு சென்று பெரு வாணிகம் செய்து பெருஞ்செல்வராயினர். அந்த யவன நாட்டுப் பொருணூலறிஞர் முற்போந்து யவன நாட்டவர் தம்மை உயர்ந்த பட்டாடையாலும் விரைப் பொருளாலும் ஒப்பனை செய்து கொள்வதில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பொன்னைச் செலவிடுவது கூடாது என்றெல்லாம் தங்கள் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினர். அதனைச் செவிமடுத்த சில யவனர்க்கட்குச் சேர வேந்தர் பால் வெறுப்பும் மன வெரிச்சலும் உண்டாயின. அக் குறிப்பை அறிந்த வட வேந்தர், அவர்களோடு உறவு செய்துகொண்டு சேரரைச் சீரழித்தற்குச் சூழ்ச்சி செய்தனர். நிலத்து வழியே சென்று பொருதால் சேரரை வெல்ல முடியாதென்பதை வியலூர் போர் காட்டி விட்டதனால், கடல் வழியாகப் படை கொண்டு சென்று சேரரைத் தாக்க முயன்றனர். யவனர் சிலர் அவர்கட்கு உதவி செய்தனர்.
வஞ்சிநகர்க்கண் அரசு வீற்றிருந்த செங்குட்டுவன். யவனரும் வடவரும் கூடிப் பெரியதொரு கடற்படை கொண்டு போர்க்கு வரும் செய்தியை ஒற்றரால் அறிந்தான். உடனே வில்லவன்கோதை அழும்பில்வேள் முதலிய அமைச்சர்களை வருவித்து நால்வகைப் படையும் திரட்டுமாறு ஆணையிட்டான். படைகள் பலவும் திரண்டன.
கடற்போர் செய்தற்குத் தேரும் களிறும் குதிரையும் பயன்படாமையின் அவற்றைக் கடற்கரையையும் ஏனை எல்லைப் புறங்களையும் காவல் செய்யுமாறு பணித்து, விற்படையும் வேற்படையும் வாட்படையும் கொண்ட பெரும்படையை கலங்களில் செல்லப் பணித்தான்.
சேரநாட்டுக்கு அண்மையிலன்றித் தென்பாண்டிக் கரை வழியாகப் பகைவர் நிலத்திற் புகுந்து போர் தொடுக்கக் கூடும் என்று எண்ணி, தென் பாண்டிப் பகுதியில் இருந்து அரசுபுரிந்த அறுகையென்னும் குறுநிலத் தலைவனைப் பாண்டிக் கடற்கரையைக் காக்குமாறு திருமுகம் விடுத்தான். அறுகையும் செங்குட்டுவன் கருத்துணர்ந்து அவ்வாறே படை திரட்டிக் காவல் புரியலுற்றான். செங்குட்டுவனுடைய தேர் முதலிய மூன்று படைகளும் சேரநாடு முழுதும் பரந்து அருங்காவல் புரிந்தன. இச் செயலை அறிந்த பரணர் என்னும் நல்லிசைச் சான்றோர்,
“மன்பதை மருள் அரசுபடக் கடந்து முந்துவினை எதிர்வரப் பெறுதல் காணியர், ஒளிறுநிலை உயர்மருப் பேந்திய களிறூர்ந்து மான மைந்தரொடு மன்னர் ஏத்தநின் தேரொடு சுற்றம் உலகுடன் மூய[4]” |
என்று பாடிக் காட்டுகின்றார்.
வில்லும் வேலும் வாளும் ஏந்திய படைவீர்ரகள் உடன்வரச் செங்குட்டுவன் கலங்கள் பலவற்றை அணிவகுத்துக் கடலிடத்தே செலுத்தினான்; பகைவர் படை வீரரைச் சுமந்த கலங்கள் வரும் திசையை ஒற்றரால் அறிந்து எதிர்நோக்கிச் சென்று அவருடைய கலங்களைச் சூழ்ந்து நின்று தாக்கலுற்றான். நாற்புறமும் சேரர் கலங்கள் போந்து சூழ்ந்து கொண்டதனால் பகைவர்கள், இடையே அகப்பட்டு எத்துணையோ முயன்றும் மாட்டாது தோற்றனர். பெரும்பாலோர் மாண்டனர்; எஞ்சினோர் சிறைப்பட்டனர். அவர்களுடைய கலம் கொணர்ந்த அரியவும் பெரியவுமாகிய பொருள்கள் செங்குட்டுவன் கைவயமாயின. கடற் போரில் வாகை சூடிக் கரையை அடைந்த செங்குட்டு வனது புகழ் தமிழக மெங்கும் பரந்தது. சோழவேந்தரும் பாண்டி வேந்தரும் அவனைப் பாராட்டினர்.
பரிசிலர் பலர், சேர நாட்டை அடைந்து செங் குட்டுவனது கடல் வென்றியை முத்தமிழ் வழியாலும் இசைத்தனர். தமிழ்நாட்டுச் சோழ பாண்டிய மண்டலங் களில் இருந்த வேந்தர்களையும் செல்வர்களையும் பாடிச் சிறப்பித்து வந்து பரணர் என்னும் சான்றோர், மலையும் கானமும் கடந்து வஞ்சிநகர் அடைந்து செங்குட்டுவனைக் கண்டு,
“மழை பெயல் மாறிய கழைதிரங்கு அத்தம் ஒன்று இரண்டு அல்ல பல கழிந்து திண்டேர் வசையில் நெடுந்தகை காண்கு வந்திசினே[5]“ |
என்று தொடங்கி, நாளும் குதிரை யூர்ந்து பயின்ற நின் தாள், வெற்றிமுரசு முழங்க, அலைகள் பிசிர் பிசிராக உடையுமாறு “படுதிரைப் பனிக்கடல்” உழந்ததனால் வருந்தா தொழிவதாக என்று வாழ்த்தி, “வேந்தே, வழி வழியாகக் கடற்போர் செய்து பயின்றவன் போல நீ இக் கடற் போரைச் செய்து பெருவென்றி எய்தினாய்;
‘இனியார் உளரோ? நின்முன்னும் இல்லை; மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது விலங்குவளி கடவும் துனிங்கிருங் கமஞ்சூல் வயங்குமணி இமைப்பின் வேல் இடுபு முழங்குதிரைப் பனிக்கடல் மறுத்திசி னோரே[6]’ |
என்று எடுத்தோதிப் பாராட்டினார்.
இவ்வாறு பாடி வந்த பாணர் கூத்தர் விறலியர் பலருக்கும், செங்குட்டுவன், கடலிற் பகைவர்பாலும் பிற பகைவர்பாலும் பெற்ற அரும்பெரும் பொருள்களை மழைபோல் வரையாது நல்கி, “இனிது புறந்தந்து அவர்க்கு இன்மகிழ்” சுரந்தான். அதனால், அவர்கள் பலரும் அவன் திருவோலக்கத்தே நெடிது தங்கினர். அதனை நேரிற் கண்ட பரணர்,
“கோடுநரல் பௌவம் கலங்க வேலிட்டு உடைதிரைப் பரப்பில் படுகடல் ஒட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே[7]” |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - செங்குட்டுவன், செய்து, சென்று, கலங்கள், பரணர், கொண்டு