சேர மன்னர் வரலாறு - கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
என்று பாடிச் செங்குட்டுவன் சீர்த்தியைச் செந்தமிழில் நிலைபெறுவித்தார். செங்குட்டுவனது வரையாத வள்ளன்மையால், பாட்டினும் கூத்தினும், வல்லுநர் மாட்டாதவர் என்ற வேறுபாடின்றி, யாவரும் பெரும்பொருள் பெறுவதை. அவருள் இளையர் பலர் கண்டு, தமக்குள்ளே, “இச் செங்குட்டுவன் கல்லா வாய்மையன்” என்று பேசிக்கொண்டனர். இதனைக் கேட்ட பரணர், செங்குட்டுவனைப் பாடிய பாட் டொன்றில்,
“பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி, ஒண்ணுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக், கெடலரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக் கடலொடு உழந்த பனித்துறைப் பரதவ ! ‘ஆண்டு நீர்ப் பெற்ற தாரம் ஈண்டு இவர் கொள்ளாப் பாடற்கு எளிதினின் ஈயும் கல்லா வாய்மையன் இவன் எனத் தத்தம் கைவல் இளையர்[8]” |
கூறுகின்றனர் எனக் குறித்து அவனது கொடைமடத்தை எடுத்தோதிச் சிறப்பித்தார்.
செந்தமிழ் வளஞ் சிறந்து திகழும் பரணருடைய நல்லிசைப் புலமையின் பால் செங்குட்டுவனுக்கு மிக்க விருப்பமுண்டாயிற்று. அவரைக் கொண்டு தமிழ் இளைஞர்க்கு அகமும் பொருளுமாகிய பொருணூல் களை அறிவுறுக்குமாறு ஏற்பாடு செய்தான். அதற்காகச் சேர நாட்டு உம்பற்காடு என்ற பகுதியின் வருவாயைப் பரணற்கு நல்கித் தன் மகன் குட்டுவன் சேரல்என்பவனை அவர்பால் கையடைப்படுத்துக் கல்வி கற்பிக்குமாறு செய்தான். பிற்காலத்தே, சேர நாட்டுக் கானப்பகுதி யொன்று பரணன் கானம் என்ற பெயரெய்தி இன்றும் திருவிதாங்கூர் நாட்டில் மினச்சில் பகுதியில் உளது.
ஆசிரியர் பரணர், செங்குட்டுவன் விரும்பியவாறு தமிழ்ப்பணி செய்யுங்கால், களவொழுக்கம் பூண்டு ஒழுகும் தமிழ்த் தலைமகன் இரவுக்குறிக்கண் தலை வேற்றுக்குறி நிகழக் கண்டு அவ்விடம் வந்து அவனைக் காணாமல் சென்ற தலைவி, அவன் மெய்யாக வந்து செய்த வரவுக் குறியையும் வேற்றுக்குறி யென்று நினைந்து வாரா தொழிந்தாள்; தலைமகன் ஏமாற்றம் எய்தித் தன் நெஞ்சை வெகுண்டு, “பெறலருங் குரையள் என்னாள், வைகலும் இன்னா அருஞ்சுரம் நீந்தி நீயே என்னை இன்னற் படுத்தினை; அதனால்,
“படைநிலா விளங்கும் கடல்மருள் தானை மட்டவிழ் தெரியல் மறப்போர்க் குட்டுவன் பொருமுரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து செருச்செய் முன்பொடு முந்நீர் முற்றி ஒங்குதிரைப் பௌவம் நீங்க ஒட்டிய நீர்மாண் எஃகம் நிறத்துச் சென்றழுந்தக் கூர்மதன் அழியரோ நெஞ்சே[9]" |
என்று கூறும் கருத்தமைந்த பாட்டில், செங்குவன் கடலிற் பகைவர் மேல் வேலெறிந்து அவர் பிறக்கிடச் செய்த திறத்தைப் பாடிச் சிறப்பித்துள்ளார். இவ்வாற்றால் செங்குட்டுவனுக்குக் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் என்று பெயர் பிறங்குவதாயிற்று.
இவ் வண்ணம் செங்குட்டுவன், தான் கடல் பிறக்கோட்டிய சிறப்பைச் சான்றோர் பரவ இனிது இருந்து வரும் நாளில், தென் பாண்டி நாட்டில் அவன் மன அமைதியைக் கெடுக்கும் செயலொன்று நிகழ்ந்தது. மதுரை மாவட்டத்து மோகூர்[10] என்னும் ஊரில் பழையன் என்னும் தலைவன் ஆட்சிபுரிந்து வந்தான். அவன் காவிரி நாட்டுப்போர் என்னும் ஊர்க்குரிய பழையன் என்பான் வழிவந்தான். போர்ப் பழையன், சோழர்க் குரியனாய், செங்குட்டுவனால் நேரிவாயிலில் அலைத்து வருத்தப்பட்ட சோழர் ஒன்பதின்மர்க்குத் துணைவனாய் நின்று வரிசை யிழந்தான். அதனால் அவற்குச் சேரன் செங்குட்டுவன் பால் மனத்தே பகைமை உண்டாயிருந்தது. அன்றியும், தென்பாண்டி நாட்டு அறுகை செங்குட்டுவற்குத் துணை செய்தது, பழையன் உள்ளத்தில் அவ்வறுகையாலும் பகைமை பிறப்பித்தது.
அறுகை யென்பான் இருந்த ஊர் குன்றத்தூர் என்பது. அவற்குப்பின் அவ்வூர் அறுகை குன்றத்தூர் என்று வழங்குவதாயிற்று. இடைக்காலத்தே, அப் பகுதியில் அரசுபுரிந்த வேந்தர் அறுகை குன்றத்தூரி லிருந்து தமது ஆணையைப் பிறப்பிப்பது உண்டு எனச் சோழபுரத்துக் கல்வெட்டு ஒன்றால்[11] அறிகின்றோம்.
சோழர் பொருட்டுப் போர் ஒப் பழையன், கொங்கு : நாட்டவரோடு ஒருகால் பெரும் போர் செய்து வெற்றி பெற்றான்; அறுகை, கொங்கு நாட்டினின்றும் தென்பாண்டி நாட்டிற்குட் போந்திருந்த ஒரு குடியிற் பிறந்தவன். அதனால், பழையர்பால் அறுகைக்கு வெறுப்புண்டாகி யிருந்தது; சேரன் செங்குட்டுவனோடு நேரிவாயிலிற் பொருத்தமிழிந்த சோழர் ஒன்பதின்மர்க்குத் துணை செய்து தனக்கு நண்பனான செங்குட்டுவனது வெகுளிக்கு இரையாகியவன் என்பதனாலும், தனக்குச் செங்குட்டுவன் நண்பன் ஆதலாலும், மோகூர்ப் பழையன்மேல் போர்க்கெழுந்தால் அவன் அஞ்சி யோடுவன் என்று அறுகை படையை மோகூர்மேல் செலுத்தி அதனைச் சூழ்ந்து கொண்டு உழிஞைப் போர் தொடுத்தான். மோகூர் மன்னன், சோழவேந்தரும் வேளிரும் துணைவரத் தனது பெரும்படையைச் செலுத்தி அறுகையின் படையை வென்று வெருட்டி னான். அறுகை போரிழந்து புறந்தந்து ஓடி ஒளிந்து கொண்டான். இவ் வேந்தர் பண்டு செங்குட்டுவற்குத் தோற்ற சோழர் என அறிக.
- ↑ 8. பதிற். 48.
- ↑ 9. அகம். 219.
- ↑ 10. மோகூரும் பழையன் பெயரால் உண்டான பழையானூரும் மாற நாட்டில் இன்றும் உள்ளன.
- ↑ 11. Ep. A.R. No. 493 of 1909
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - செங்குட்டுவன், அறுகை, பழையன், அவன், சோழர், போர், என்னும், அதனால்