சேர மன்னர் வரலாறு - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
குடநாட்டில் மாந்தை யென்பது அந் நாளில் தலைநகரமாக விளங்கிற்று. குடக்கோக்கள் அதன்கண் இருந்து அரசுபுரிந்தனர். மாந்தைநகர் இப்போது மாதையென்ற பெயருடன் கண்ணனூர்க்கு வடமேற்கில் 13½ கல் அளவில் இருந்து தனது முதுமையைத் தோற்றுவித்துக் கொண்டுளது; பழையங்காடியென்னும் புகைவண்டி நிலையம் இதன் ஒரு பகுதி ; இங்குள்ள பழங்கோயில் இதன் தொன்மையைக் காட்டுகிறது; இது பற்றி நிலவும் பழைய மலையாளப் பாட்டொன்று, இதன் கண் பண்டை நாளில் கோட்டையும் அரண்களும் இருந்த குறிப்பைத் தெரிவிக்கிறது[1]. இந் நகரைப் பண்டைச் சான்றோர், “நன்னகர் மாந்தை[2]” “துறை கெழு மாந்தை”, “கடல்கெழு மாந்தை[3]” என்றெல்லாம் பாராட்டி யுரைப்பர்.
பெருஞ்சோற்றுதியன் குட்டநாட்டு வஞ்சிநகர்க் கண் இருந்து ஆட்சி செய்கையில் நெடுஞ்சேரலாதன் மாந்தை நகர்க்கண் இருந்து நாடு காவல் புரிந்து வந்தான். உதியன் இறந்தபின் தான் சேரமானாய் முடிசூட்டிக் கொண்டு மாந்தை நகரிலேயே தங்கினான்; தன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவனை வஞ்சி நகர்க் கண்ணே நாடு காவல் செய்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தான்.
நெடுஞ்சேரலாதன் இளமையில் முரஞ்சியூர் முடிநாகனார் பால் கல்வி பயின்றவன். அவரும் பிறருமாகிய சான்றோர் வேந்தர்களை வாழ்த்தும்போது “பொதியமும் இமயமும் போல நிலைபெறுக” என வாழ்த்துவது மரபாக இருத்தமை அவனுக்குத் தெரிந்திருந்தது. நெடுஞ்சேரலாதன் அதன் கருத்தை ஆராய்ந்தான். தென்பொதியத்து வேளிர் சேரவேந்தர்க்கு மகட்கொடை புரியும் முறைமையினராதலால், அவரது பொதியத்துக்கும் சேரர்கட்கும் தொடர்புண்டு என்பது இனிது விளங்கிற்று. பொதியம் போல வட விமயமும் சேரவரசரோடு தொடர்புற வேண்டும் என்பது அச் சான்றோர் கருத்தாதலைக் கண்டான். சேர நாட்டின் தென்பகுதியை வென்று ஞாயிறு தன் கடலில் தோன்றித் தன் கடலிலே குளிக்கும் என்று சான்றோர் பரவும் பாராட்டினைத் தன் தந்தை உதியஞ்சேரல் பெற்றான்; அதற்கு முன்னோருள் ஒருவன் பாரதப் போரில் பெருஞ்சோற்று விழாவினைச் செய்துகாட்டிச் சிறப் புற்றான்; அவருள் வேறொருவன் குடநாட்டிற்குக் கிழக்கில் சுவர்போல் வானளாவி நிற்கும் பாயல் மலையின் வடக்கில் விளங்கும் வானமலையைத் தனக்குரியதாக்கி வானவன் என்ற சிறப்பும் வானி யாற்றையும் வானமலையையும் வடக்கில் வரம்பறுத்து வானவரம்பன் என்ற சிறப்பும் பெற்றான்; ஆகவே சான்றோர் விழைந்தவண்ணம் இமயத்தைத் தன் புகழ்க்கு எல்லையாக்குதல் வேண்டும் என்று நெடுஞ் சேரலாதன் நெஞ்சில் வேட்கைகொண்டான்.
நெடுஞ்சேரலாதன் முடிசூடிக்கொண்ட போது வேந்தர் எழுவர் முடிப்பொன்னாற்செய்த பொன்னாரம் ஒன்று வழிவழியாக வரும் முறைப்படி அவன் மார்பிலும் அணியப் பெற்றது. அதன் கருத்தை உணர்த்த வந்த சான்றோர், ‘தம்மவர் அல்லாத பிற வேந்தரை வென்றால், அவர் முடிப்பொன் கொண்டு கழல் செய்து கொள்வது தமிழரசர் மரபு[4]; ஒரு காலத்தே சேர நாடு எட்டுச் சிறு நாடுகளாகப் பிரிந்திருந்தது; மன்னர் எண்மரும் தனித்து நிற்பின் பகைவர் தம்மை வெல்லற்கு எளிதாம் என எண்ணித் தம்மில் ஒன்றுபட்டு ஒருவர் முடிவேந்தராக ஏனையோர் அவர்க்குத் துணைவராய்ப் பிரிவின்றி ஒழுகுதல் வேண்டும் என்று உறுதிசெய்து கொண்டனர் என்றும் ‘அவ் வொற்றுமைக் குறிப்புத் தோன்ற ஏனை எழுவர் முடிப்பொன்னால் ஆரம் செய்து மார்பில் அணியாகப் பூண்டனர்’ என்றும் எடுத்துரைத்தனர். இதைக் கருத்துட்கொண்டே எண்மரும் கூடியிருந்து ஆராயும் அரசியற்குழு எண்பேராயம் எனப்பட்டது; பின்பு நாளடைவில் எண்பேராயம் வேறு வகையில் இயலுவதாயிற்று. இவ்வாறே பாண்டிநாடு ஐம் பெரும் நாடுகளாகப் பிரிந்திருந்தது, பின்பு ஐம் பெருந்தலைவரும் தம்மில் ஒருவராய் இயைந்ததனால் பாண்டியர் பஞ்சவர்[5] எனப்பட்டனர்; இக் குறிப்புத் தோன்றவே ஐம்பெருங் குழு என்னும் அரசியலாராய்ச்சிக் குழு தமிழ் வேந்தர் அரசியலில் இடம் பெறுவதாயிற்று. சேரரினும் பாண்டிர் பழையராதலின், அவரால் உளதாகிய ஐம்பெருங் குழு முன்வைத்தும், எண்பேராயம் பின் வைத்தும் சான்றோ ராற் குறிக்கப்படுகின்றன. சேரநாட்டு எண்பகுதிகளும் குட்டநாடு, பொறைநாடு, குகட நாடு, கொண்கான நாடு, வான நாடு, பாயல் நாடு, கடுங்கோநாடு[6], பூழி நாடு என்பன. பாண்டிய நாட்டு ஐம் பகுதிகளும், மதுரை, மோகூர், கொற்கை, திருநெல்வேலி (பழையன் கோட்டை[7]), கருவை என்ற ஊர்களைத் தலைமையாகக் கொண்டவை.
- ↑ 1. K.P.P. Menon’s History of Kerala Vol. i.p. 15.
- ↑ 2. அகம். 127.
- ↑ 3. நற். 35. 395.
- ↑ 4. சோழன்குள் முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடலுற்ற ஆவூர் மூலங்கிழார், “நீயே, பிறரோம்புறு மறமன்னெயில் ஓம்பாது கடந்தட்டு அவர் முடிபுனைந்த பசும்பொன்னின் அடி பொலியக் கழல் தைஇய வல்லாளனை” (புறம் 40) என்பது காண்க.
- ↑ 5. “செருமாண் பஞ்சவர்” - புறம். 58.
- ↑ 6. சங்ககாலத்துக்கு முன்னர் வான நாடு கொண்கானத்திலும், பின்னர்க் கடுங்கோ நாடு, வள்ளுவ நாடு கொங்கு நாடுகளிலும் சேர்ந்து விட்டன.
- ↑ 7. இப் பழையன்கோட்டை நாளடைவில் பளையன் கோட்டையாகிப் பாளையங்கோட்டை என மருவிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - நாடு, சான்றோர், மாந்தை, நெடுஞ்சேரலாதன், இருந்து, குழு, எண்பேராயம், செய்து, இதன், வேண்டும்