சேர மன்னர் வரலாறு - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
சில பல நாட்கள் கழிந்தன. சேர நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த ஒரு குறுநில மன்னன் சேரலாதன் சினந்து போர் தொடுத்தற்குரிய குற்றத்தைச் செய்தான். போர் தொடங்கிற்று. பகைத்த வேந்தன் தோற்றோடினான்; அவன் நாட்டில் வாழ்ந்த மக்களுள் பலர், போரினது கடுமை கண்டஞ்சி நாட்டை விட்டு யோடின; நிலங்கள் உழுவாரின்றிப் பாழ்ப்பட்டன. அந் நிலையைக் கண்ட கண்ணனார் சேரலாதன் தங்கியிருந்த பாசறைக்குச் சென்றார்.
அங்கே பல வகைப் படைகளும் தத்தமக்குரிய வினைகட்கு வேண்டுவனவற்றை முற்படச் செம்மை செய்து கொண்டிருந்தன. கூளிப்படை, பின்னே வரவிருக்கும் தூசிப்படை முதலிய வயவர் படைக்கு வழி செய்து நின்றது; வயவர் படைக்கருவிகளை வடித்துத் தீட்டி நெய் பூசிச் செம்மை செய்து கொண்டிருந்தனர்; இயவர் முரசுக்குப் பலியிட்டுப் போர் முழக்கம் செய்திருந்தனர்; கண்ணனார் இச்செயல்களை எடுத்தோதி, “நின் கூளியரும் வயவரும் இயவரும் சான்றோரும் போர்க்குச் சமைந்திருக்க நீயும் போரையே விரும்பியிருக்கின்றாய்; நின் போர்வினையால் நாடுகள் அழிந்து பாழ்படுகின்றன; நாடுகளில் மக்கள் இனிதிருந்து வாழ்தற்கு ஏற்ற வாய்ப்புப் போர்வினையால் கெடுகிறது; அதனால் நாட்டின் பகுதிகள் பலவும் அழிவுறுகின்றன. போர் நிகழ்தற்கு முன் அந் நாட்டு நீர்நிலைகளில் தாமரை மலர், நெல்வயல்களில் நெய்தல் பூப்ப, நெற்பயிர் வளமும் வளர்ந்து விளைந்தன; நெல்லரிவோர் குயம் நெற்றாளை அரிய மாட்டாது வாய்மடங்கின ; கரும்பின் எந்திரம் கரும்பின் முதிர்வால் பத்தல் சிதைந்து வருந்தின; அந் நிலையைக் கண்டோர் இப்போது கை பிசைந்து புடைத்து வருந்த, போர்வினையால் அழிந்து மாட்சி இழந்தன; இவற்றை நீ எண்ணுதல் வேண்டும். இந் நிலையில் கணவனை இழந்த மகளிர் கையற்று வருந்தும் காட்சி நெஞ்சிற் பல நினைவுகளை எழுப்பு கின்றது. நின் திருநகர்க்கண் உறையும் நின் காதலி, போர்த்துறை மேற்கொண்டு பாசறை யிருப்பிலே நீ கிடத்தலால், நின்னைக் கனவின்கண் கண்டு இன்புறுவது ஒன்றைத் தவிர வேறு இன்பம் காணாது வருந்தி உறைகின்றாள்; அவளை நினையாது இருப்பது முறையன்று” என்று சொல்லி, நெடுஞ்சேரலாதன் உள்ளத்தெழுந்த மறவேட்கையை மாற்றினார். இவ்வகையால் அவனது உள்ளத்தை அறத் துறையில் ஒன்றுவித்து நாட்டில் அமைதி நிலவச் செய்து மக்களது வாழ்வில் நிலைத்த இன்பம் செய்யும் புலமைப்பணியில் கண்ணனார் பெரிதும் உழைத்துப் பயன் கண்டார். அவரது புலமை நலம் கண்டு வியந்த வேந்தன் அவர்க்கு மிக்க சிறப்புகளைச் செய்தான். அந் நாட்டில் இன்றும் புகழ்மிக்கு விளங்கும் கண்ணனூர் அன்று இவர் பெயரால் ஏற்பட்டிருக்குமோ என நினைத்தற்கு இடமுண்டாகிறது. இடைக் காலத்தே இது சிறைக்கல் பகுதியை ஆண்ட வேந்தரது தலைநகரமாய் விளங்கிற்று. மேலும், அவன் உம்பற்காடு என்ற பகுதியில் ஐஞ்ஞுறு ஊர்களைக் கண்ணனார்க்குப் பிரமதாயம் கொடுத்தான். உம்பற்காடு என்பது இப்போது நீலகிரிப் பகுதியில் நும்பலக்காடு என்ற பெயர்க் கொண்டு நிலவுகிறது. இஃது, இப்போது வயனோடு என வழங்கும் பண்டைய பாயல் நாட்டின் ஒரு பகுதியாக இருந்து, ஆங்கிலேய ருடைய ஆட்சிக் காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் சேர்க்கப்பெற்றது.[29]திருவிதாங்கூர் அரசைச் சேர்ந்த வைக்கம் என்ற நகரத்தில் உம்பற்காட்டு வீடு என ஒரு வீடு இருந்து உம்பற்காட்டின் பழமையை உணர்த்தி நிற்கிறது[30].
இவ்வாறு இமயவரம்பனுடைய பேரன்பைப் பெற்றுக் கண்ணனார் சிறப்புடன் இருந்து வருகையில், அவர்க்குத் தமது ஊர்க்குச் செல்லவேண்டும் என்ற விருப்பமுண்டாயிற்று; வேந்தனிடத்தில் தமது கருத்தைக் குறிப்பாய்த் தெரிவித்தார். இப்போது சேரலாதனுக்கு முப்பத்தெட்டாம் ஆட்சியாண்டு நடைபெற்றுக் கொண் டிருந்தது. கண்ணனார்க்கும் முதுமை நெருங்கிற்று. இமயவரம்பன் அவரது விருப்பத்தைப் பாராட்டித் தன் ஆட்சியில் அடங்கிய உம்பற்காட்டின் தென்பகுதியான தென்னாட்டு வருவாயில் ஒரு பாகத்தை அவர் பெறுமாறு திருவோலை எழுதித் தந்து சிறப்பித்தான்; அச் சிறப்பின் நினைவுக் குறியாகச் சிறப்புடைய ஊரொன்றைக் கண்ணன் பட்டோலை என்று மக்கள் வழங்கத் தலைப்பட்டனர். இப்போதும் குடநாட்டின் தென் பகுதியில், பாலைக்காட்டு வட்டத்தைச் சேர்ந்த தென்மலைப்புறம் என்ற பகுதியில் இந்தக் கண்ணன் பட்டோலை என்ற ஊர் இருந்து வருகிறது.
இச் சிறப்புப் பெற்ற கண்ணனார்க்கு இமய வரம்பன் பால் உண்டான அன்புக்கு எல்லையில்லை. அவனை வாயார வாழ்த்த வேண்டும் என்ற எண்ணம் அவர்க்கு உண்டாயிற்று. “சேரலாதனே, நிலமும் நீரும் வளியும் விசும்பும் போல், நீயும் அளப்பரிய பண்புகள் கொண்டவன்; தீயும் ஞாயிறும் திங்களும் பிற கோள் களும் போல ஒளியுடையவன்; பாரதப் போரில் பாரத வீரர்கட்குத் துணை செய்து உயர்ந்த அக்குரன் போன்ற கைவண்மை உன்பால் உளது; நீயோ போரில் பகைவர் பீடழித்த முன்பன்; மாற்றலாகாதது எனப்படும் கூற்றையும் மாற்றவல்ல ஆற்றல் உனக்கு உண்டு. நீ சான்றோர்க்கு மெய்ம்மறை : வானுறையும் மகளிர் நலத்தால் நிகர்ப்பது குறித்துத் தம்மில் இகலும் பெருநலம் படைத்த நங்கைக்குக் கணவன் ; களிறு பூட்டிப் பகைப்புலத்தை உழும் அயில்வான் உழவன்; பாடினியைப் புரக்கும் வேந்தன். நின் முன்னோர் இவ்வுலகு முழுதும் ஆண்ட பெருமையுடையார்; அவர்களைப் போல நீயும் பெரும்புகழ் பெற்று வாழ்வாயாக[31]” என வாழ்த்தினார்.
சின்னட்குப் பின் நெடுஞ்சேரலாதன் அவர்க்குப் பொன்னும் பொருளும் நிரம்ப நல்கித் தானே காலின் ஏழடிப் பின் சென்று வழிவிட, கண்ணனார் தமது குமட்டூர்க்குச் சென்றார். அரசியற் சுற்றத்தாரும் அவர் செய்த தொண்டினைப் பாராட்டி அவரை மனம் குளிர்ந்து வாழ்த்தினர்.
குமட்டூர்க்குப் போந்த கண்ணனாரை ஏனைச் சான்றோர் கண்டு அளவளாவி இன்புற்றனர். உம்பற்காட்டு வேதியரும் தென்னாட்டுச் செல்வர்களும் அவரைச் சிறப்புடன் வரவேற்றனர். கண்ணனார் தம்முடைய நாட்டில் இனிது உறைவாராயினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - கண்ணனார், செய்து, பகுதியில், நின், போர், இருந்து, நாட்டில், இப்போது, கண்டு, தமது, நீயும், வேந்தன், நாட்டின், போர்வினையால்