சேர மன்னர் வரலாறு - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
“நுமக்குக் கோவாவான் யார் என வினவு கின்றீர்கள்; எங்கள் வேந்தன், கடலகம் புகுந்து, அங்குள்ள தீவினுள் வாழ்ந்த திறல் மிகுந்திருந்த கடம்பரது கடம்பினை வேரோடு தடிந்து புகழ் மேம்பட்ட நெடுஞ்சேரலாதன்; பகைப்புலத்தே பகைவர் தமது சூழ்ச்சியால் செய்யும் எத்தகைய வினையையும் அவர்கட்கு வாய்க்குமாறு இன்றிக் கருவிலேயே கெடுத்து வெற்றிமிகும் வினைத்திறம் வாய்ந்தவன்; உட்பகை செய்யும் ஒட்டார் முன்னும் பொய் கூறாத வாய்மை யுடையவன்; தன்னைக் காணும் பகைவர் உள்ளத்து ஊக்கம் கெடுமாறு பெருமிதத்துடன் நடந்து, அவரது நாட்டை வென்று தன்னைப் பாடும் பரிசிலர்க்கு நல்கும் பண்பினன்; குதிரைகளையும் பிறவற்றையும் பெருக வழங்கும் கொடைநலம் உடையவன்; மிளையும் கிடங்கும் மதிலும் ஞாயிலுமுடைய பகைவர் பலருடைய நகரங்களை அழித்துத் தீக்கு இரையாக்கிய அவன், தன்பால் வருவோர், வல்லுநாராயினும், மாட்டாராயினும், யாவராயினும் நிரம்ப நல்கும் நீர்மை யுடையவன்; மழைமுகில் தான் பெய்யுமிடத்துத் தப்புமாயினும், சேரலாதன், பசித்து இரக்கும் இரவலர்க்கு வயிறு பசி கூர ஈயும் சிறுமையுடையவனல்லன்; அப் பெற்றியோனை நல்கிய அவனுடைய தாய் வயிறு மாசிலள் ஆகுக[27]” என்று இனிமையாகப் பாடினர். அச் சொற்களைக் கேட்ட பரிசிலர் பேரின்பம் எய்தினர். ஒற்றர் வாயிலாக வேந்தன் கண்ணனார் பாடிய பாட்டைக் கேட்டு அவர்பால் பேரன்பு கொண்டான்.
சேரலாதன் ஆட்சி நலத்தால் நாட்டில் வளவிய ஊர்கள் பல உண்டாயின. மக்கள் செல்வ வாழ்வு நடத்திச் சிறப்பெய்தினர். சான்றோர் பலர், அவனது ஆட்சி நலத்தை வியந்து போந்து அவனை வாழ்த்தினர். பொருளும் இன்பமும் அறநெறியிற் பெருகி நிற்கும் அரசினைக் கீழ்மக்களும் விரும்புவரெனின், சான்றோர் போந்து பாராட்டுவதில் வியப்பில்லையன்றோ!
நெடுஞ்சேரலாதனொடு நெருங்கிய நட்பாற் பிணிப் புண்டிருந்த கண்ணனார் அவனுடைய ஆட்சியால் நலம் எய்திய நாடு முற்றும் கண்டு மகிழ்ந்தார். அவன் தன்னொடு பகைத்து மாறுபாடு கொண்ட வேந்தர் நாட்டிற் படையெடுத்துச் சென்று, அவர்களை வென்றடங்கி, அவன் நாட்டைப் பாழ் செய்வதையும் அவர் அறியாமலில்லை. போர்ப்புகழ் பெறுவதில் மகிழ்ந்து மைந்துற்று ஒழுகும் வேந்தர் உள்ளத்து மறவேட்கையை மாற்றி நாட்டு மக்கட்கு இன்பம் பெருக்கும் செயல்களில் ஈடுபடச் செய்வதை, அவ்வேந்தர்க்குச் சுற்றமாய்த் துணைபுரிந்த அந்நாளைச் சான்றோர் தமது கடமையாக மேற்கொண்டிருந்தனர். கண்ணனார் தமது கடமையை மறந்தார் இல்லை. காலம் வாய்க்குந் தோறும் நெடுஞ்சேரலாதனுக்குப் போரால் விளையும் கேட்டினை எடுத்துக்காட்டியே வந்தார். செய்த போர்களிலெல்லாம் இமயவரம்பன் வெற்றியும் பெருஞ்செல்வமும் பெற்றதனால், அவனது மனம் மறப் புகழையே நாடிநின்றது. மறவுணர்வை மாற்றுதற்கு அவர் எடுத்துரைத்த அறவுரைகள் கருதிய பயனைக் கருதிய அளவில் விளைக்கவில்லை . முடிவில், அவன் கருத்தை இன்பத் துறையில் செலுத்துவது ஓரளவு அவன் நெஞ்சில் நிலவும் மறவுணர்வை மாற்றும் எனக் கண்ணனார் எண்ணினார்.
இவ்வாறிருக்கையில், நெடுஞ்சேரலாதன், ஒருகால் வேந்தன் ஒருவனுடன் போர் தொடுத்து அவன் நாட்டிற் பாசறை யிட்டிருந்தான். அந் நிலையில் ஒருநாள் கண்ணனார் அவனுடைய பாடிவீட்டிற்குச் சென்றார். வேந்தன் அவர் வரவு கண்டு மகிழ்ந்தானாயினும், அவனுடைய குறிப்பு அவர் வந்த வரவின் கருத்தை அறிய விழைந்தது. ‘வேந்தே, நீ மேற்கொண்டிருக்கும் வினை, நினக்கு வருத்தம் பயக்கும் அத்துணைக் கொடுமையுடையதென அஞ்சி யான் வந்தேனில்லை; மலைபோல் உயர்ந்த புறமதிலும், அகன்ற இடைமதிலும், கணைய மரங்கள் நான்று கொண்டிருக்கும் உயரிய வாயிலும் உடைய இப் பாசறை யிடத்தே நீ நெடிது தங்கிவிட்டாய்; அதனால் நின்னைக் காண்பது விரும்பி வருவேனாயினேன்'’ என்றார். சேரலாதன் நெஞ்சு மகிழ்ந்து அவரது அன்பை வியந்து பாராட்டினான். அக்காலையில் அன்பரது அன்பு பற்றிய பேச்சொன்று உண்டாயிற்று. “அன்பால் பிணிப்புண்ட ஆண் மக்களாகிய என் போல்வார்க்கே நின் பிரிவு ஆற்றாமையை விளைவிக்குமாயின், நின்னையின்றி அமையாத நின் காதலியின் ஆற்றாமை எத்துணை மிகுதியாக இருக்கும் என்பதை எண்ணுதல் வேண்டும்” என்றார்.
அவரது சொல்வலையில் சிக்கிய இமயவரம்பன் மனக் கண்ணில், அவனுடைய காதலியான தேவியின் அன்புருவம் காட்சியளித்தது; ஒருசில சொற்களால் அவன் தன் மனைவியின் குணநலங்களைச் சொன் னான். அச் சொற்களையே கண்ணனாரும் கொண் டெடுத்து, “சேரவேந்தே, நின் தேவியானவள் ஆறிய கற்பும் அடங்கிய சாயலும் உடையவள்; நீ கூறுமாறு ஊடற் காலத்தும் இனிய மொழிகளையே மொழியும் இயல்பினள்; சிவந்த வாயும் அமர்த்த கண்ணும் அசைந்த நடையும் சுடர்விட்டுத் திகழும் திருநுதலும் உடைய நின் தேவி நின்னை நினைத்தற் குரியன்; நின் மார்பு மகளிர்க்கு இனிய பாயலாம் பான்மை யுடையது; நீயோ அதனை அவர்கட்கு நல்குதலும், நல்காது பிரிதலும் கொண்டு உறைகின்றாய்; இக் காலத்தில் நின் மார்பை நின் தேவியார்க்கு நல்காயாயின், அவள் பாயல் பெறாமையால் உளதாகும் வருத்தத்தின் நீங்கி உய்தல் கூடுமோ?"[28] என்று இனிமை மிகக் கூறினார். இமயவரம்பன் கருத்துத் தன் காதலி மேற் சென்றது. அவன் மேற்கொண்ட வினையை விரைந்து முடித்துத் தன் நகர் வந்து சேர்ந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவன், நின், அவனுடைய, கண்ணனார், வேந்தன், அவர், இமயவரம்பன், சான்றோர், சேரலாதன், பகைவர், தமது, அவரது