சேர மன்னர் வரலாறு - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
இவற்றை எல்லாம் கருத்தூன்றி நோக்கிய நெடுஞ் சேரலாதனுக்கு, இமயம் சென்று அதனை எல்லை யாக்கிக் கோடற்கு எழுந்த வண்ணம் பேரூக்கத்தால் உந்தப் படுவதாயிற்று. எண்பேராயத்தை ஒருங்கு கூட்டித் தன் எண்ணத்தைத் தெரிவித்தான். எல்லோரும் அவன் கருத்தைப் பாராட்டினர்; ஏனைச் சோழ பாண்டி யர்க்குத் திருமுகம் போக்கி அவர் கருத்தை அறிய முயன்றான். அந் நாளில் சோழ பாண்டியர்கள், தமிழர் என்ற இனவொருமையால் கருத்தொருமித்து இமயத்தைத் தமிழ்க்கு வரம்பாகச் செய்யும் சேரமான் முயற்சியை வாழ்த்தித் தங்கள் நாட்டினின்றும் இரு பெரும் படைகளை விடுத்துத் துணை செய்தனர். இமயச் செலவுக்கெனச் சேரநாட்டிலும் பெரும்படைதிரண்டது. யானை, குதிரை, தேர் என்ற படைவகைகளும் வில் வேல்வாள் முதலியன் ஏந்தும் படைவகைகளும் அணியணியாய் இமயம் நோக்கிப் புறப்பட்டன. இவ்வாறு எழுந்த சேரப்படையுடன் சோழப்படையும் பாண்டிப்படையும் கலந்து கீழ்க்கடலும் தென்கடலும் மேலைக் கடலும் ஒன்று கூடி இமயம் நோக்கி யெழுந்ததுபோல நிரந்து செல்லலுற்றன.
அந் நாளில் கொண்கானத்துக்கும் வடவிமயத் துக்கும் இடையிற் கிடந்த நாடு ஆரியகம் என்ற பெயர் பெற்று விளங்கிற்று. அந் நாளிற் போந்த மேலைநாட்டு யவனர் குறிப்புகளும் அப் பகுதியை ஆரியகம் (Ariake) என்றே குறித்துள்ளன. ஆங்கு வாழ்ந்த சதகன்னரும் மோரியருமாகிய ஆரிய மன்னர் தமிழ்ப்படையின் வரவுகண்டு இறும்பூதெய்தினர். படையின் பெருமை அறியாது பகை கொண்டு எதிர்த்த வேந்தர் சிலர் வலி தொலைந்து ஒடுங்கினர்; பலர் பணிந்து திறைதந்து நண்பராயினர் நெடுஞ்சேரலாதன் நினைந்தது நினைந்தவாறே நிறைவேறியது பற்றி மனம் மகிழ்ந்து இமயத்தில் தன் விற்பொறியைப் பொறித்துவிட்டுத் திரும்பினான். ஆரிய நாட்டினர் கொடுத்த பொன்னும் பொருளும் பொற்பாவைகளும் இமயச் செல்வின் ஊதியமாகச் சேர நாடு வந்து சேர்ந்தன. சேரமான், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்ற நெடும் புகழால் சிறப்புற்றான். தன்னொடு போந்த தானைத் தலைவர் கட்கும் துணைவர் கட்கும் பரிசிலர்க்கும் தக்க வரிசை களைச் செய்து மகிழ்வித்ததோடு சோழ பாண்டியப் படைத் தலைவர்கட்கும் உரிய சிறப்புகளைச் செய்து இன்புறுத்தினான்.
இமயவரம்பனான நெடுஞ்சேரலாதன் இமயத் துக்குச் சென்றிருந்த காலையில், நாட்டின் ஆட்சி முறையில் மக்கள் எய்திய நலந் தீங்குகளை நேரிற் கண்டறியும் கருத்தால், அவன் நாட்டின் பல பகுதி கட்கும் செல்ல வேண்டியவனானான். காடு கொன்று நாடாக்குதலும், குடிபுறந்தருவோரும் பகடு புறந்தரு வோருமாகிய நாட்டு மக்கட்கு வேண்டும் நலங்களைப் புரிதலும், அந் நாளைய வேந்தன் பணியாதலின், அதுபற்றி அவன் அடிக்கடி தெற்கிலும் கிழக்கிலும் உள்ள நாடுகட்குச் சென்று வந்தான். இஃது இவ்வாறிருக்க –
கொண்கான நாட்டுக் கடற்கரையில் தீவுகள் பல இருந்தன. அவற்றுள் கடம்பர் என்போர் வாழ்ந்து வந்தனர்; அத் தீவுகளுள் கூபகத் தீவு என்பது ஏனைய பலவற்றினும் சிறிது பெரிது. அக் கடம்பர்கள் அதனைத் தலைமை இடமாகக் கொண்டு தெற்கிலுள்ள தீவுகள் பலவற்றிலும் பரவி வாழ்ந்து வந்தனர். இன்றைய வட கன்னடம் மாவட்டத்தைச் சேர இருக்கும் கோவா என்னும் தீவு அந் நாளில் கூவகத் தீவம் என்ற பெயர் பெற்று நிலவியது[8]; தெற்கில் தென் கன்னட மாவட்டத்தைச் சேர்ந்திருக்கும் கடம்பத் தீவு (Kaamat Island) கடம்பர் கட்கு முதல் இடமாகும். கடம்ப மரத்தைக் காவல் மரமாகப் பேணி வந்தமையின் அவர்கள் கடம்பர்கள் என வழங்கப்பட்டனர். கடலில் கலஞ் செலுத்துவதும் மீன்பிடிப்பதும் அவர்கள் மேற் கொண்டிருந்த தொழில். கடம்ப வேந்தர் சிலருடைய செப்பேடுகளில் மீன்கள் பொறிக்கப்பட்டிருப்பதும், கோவாத் தீவில் பழங்கோவா என்ற பகுதியிற் காணப்படும் வீரக்கல் ஒன்றில் கடற்படை யொன்று நாவாய் ஏறிப் போருடற்றும் ஓர் இனிய காட்சி பொறிக்கப்பட்டிருப்பதும்[9] அவர்களுடைய பண்டை நாளைத் தொழில் வகையை நன்கு தெரிவிக்கின்றன. சங்க காலத்தேயே தோற்றமளிக்கும் இக் கடம்பர்கள் இடைக்காலத்தில் கொண்கானம், கருநாடகம், கலிங்கம் என்ற இந்த நாடுகளில் அரசு நிலையிட்டு வாழ்ந்து, கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் இடையில் பெருவிளக்கம் பெற்றுத் திகழ்ந்த விசயநகர வேந்தரது ஆட்சியில் மறைந்தொழிந்தனர்.[10] இவர்களுடைய கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் வட கன்னடம், தென் கன்னடம், குடகு, மைசூர், ஆந்திர நாடு என்ற பகுதிகளில் காணப்படுகின்றன.
கடம்பர்கள் கடம்ப மரத்தைக் காவல்மரமாக ஓம்பிக் கடலகத்தே வாழ்ந்தனர் எனச் சங்க இலக்கியங்கள் குறித்துக் காட்டவும், இக் கடம்பர்களுடைய இடைக்காலச் செப்பேடுகளும் பிறவும் பெளராணிக முறையில் அவர்கட்குத் தொன்மை கூறுகின்றன. பம்பாய் மாகாணத்துப் பெல்காம் பகுதியிற் கிடைத் துள்ள கி.பி. ஐந்தாம் நூற்றாண்டுச் செப்டேடொன்று, வேதியர் குலத்தில் அரிதிபுத்திர கோத்திரத்தில் பிறந்த இருடிகள் மூவருள் மாணவியர் என்பார் ஒருவரெனவும், அவர், “வேதாத்தியயனமும் சாதுர்மாஸ்ய ஹோமங்களும் யாகங்களும்” செய்து வந்தார் எனவும், அவரது மனையில் கடம்பமரம் ஒன்று -வளர்ந்திருத்தது எனவும், அதனைப் பேணிப் புறந்தந்து வந்த சிறப்பால் அவர் வழிவந்தோர் கடம்பர் எனப்படுவாராயினர் எனவும்[11] கூறுகிறது, ஒருகால் சிவபெருமான் திரிபுரமெரித்துப்போந்து தமது நெற்றி வியர்வையை வழித்து ஒரு கடம்ப மரத்தின் அடியில் சிந்தினர் என்றும், அத்துளிகளிலிருந்து திரிலோசக் கடம்பன் என்பான் தோன்றினான் என்றும் இசில கல்வெட்டுகள் செப்புகின்றன[12]; நந்த வேந்தருள் ஒருவன் மகப்பேறின்றிக் கயிலை மலையில் தவஞ்செய்தான் எனவும், அப்போது வானவர்கள் அவன் கையில் கடம்ப மலர்களைச் சொரிந்து வாழ்த்தினர் எனவும், வானில் வானொலி தோன்றி அதற்கு மக்கள் இருவர் தோன்றுவர் என்றதாக, அவ்வாறு தோன்றிய இருவர் வழிவந்தோர் கடம்பராயினர் எனவும் வேறுசில விளம்புகின்றன.[13] களிறொன்று மாலை சூட்டிக் கரிகாலனை சோழனாக்கிற்று என்று பழமொழி யென்னும் நூல் கூறுவது போலத் திரிலோசனைக் கடம்பன் கடம்ப வேந்தனானான் என்றொரு வரலாறும் உரைக்கப் படுகிறது.[14]
- ↑ 8. Journal of the Bombay Branch of the Royal Asiatic Society: Vol. xi p. 283. L. Rice’s Mysore Vol. ip. 300
- ↑ 9. Ep. Indica Vol xiii. p. 309.
- ↑ 10. Rice Mysore Vol. i.p. 299, 300.
- ↑ 11. Ep.Car. part1. Shikarpur Taluk No. 176.
- ↑ 12. George M.Moracs; The Kadamba Kula. p.8.
- ↑ 13. J.B.B.R.A.S. vol ix p.243.
- ↑ 14. Bom.Gazet.Kanara, Part ii p.78.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - எனவும், கடம்ப, கடம்பர்கள், அவன், வாழ்ந்து, தீவு, கன்னடம், கடம்பர், செய்து, நாளில், அவர், நாடு, நெடுஞ்சேரலாதன், கட்கும், இமயம்