சேர மன்னர் வரலாறு - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
இக் கண்ணனார் சேர நாட்டுச் சான்றோருள் ஒருவர். இவரது ஊர் குமட்டூர் என்பது. இப்போது மலையாளம் மாவட்டத்தில் ஏர் நாடு எனப்படும் வட்டத்தின் ஒரு பகுதி இராம குடநாடு என இடைக் காலத்தே வழங்கிற்று. அதன்கண் உள்ள ஊர்களுள் ஒன்று இக் குமட்டூர்; இஃது உமட்டூர் எனவும் வழங்கும். உமட்டுதல் குமட்டுதல் என்றும், குமட்டுதல் உமட்டுதல் என்றும் மாறி வழங்குவது போல, உமட்டூர் குமட்டூர் என்றும் வழங்கியது. ஏனைச் சங்க நூல்கள் உமட்டூர் என்று குறிப்பது கல்வெட்டிலும் பதிற்றுப்பத்து ஏட்டிலும் குமட்டூர் என்றும் காணப்படுகிறது. இராம நாடு, பிராமியெழுத்துக் கல்வெட்டுக்களில் யோமி நாடு எனக் குறிக்கப்படுகிறது[19].
இமயவரம்பன் கண்ணனாரது புலமை நலம் கண்டு தனது திருவோலக்கத்தில் இருந்து வருமாறு பணித்து அவரைத் தன் மனம் விரும்பிய துணைவராகக் கொண் டான். அவரும் அவன்பால் அமைந்திருந்த குண நலங்களை அறிந்து இன்புற்றார். இமயவரம்பனான செயலால், நெடுஞ்சேரலாதனது புகழ் நாடெங்கும் பரவிற்று. கடற் குறும் பெருந்து கடம்பரை வெருட்டி யோட்டி அடக்கிய நிகழ்ச்சியால் கடல் வாணிகம் சிறந்தது. நாட்டு மக்களிடையே செல்வம் மிகுந்த நல்வாழ்வு நிலவிற்று.
இமயவரம்பன் புகழ், கொண்கானத்தின் வட பகுதியில் வாழ்ந்த ஆரிய வேந்தர் சிலர்க்குப் பொறாமையை உண்டுபண்ணிற்று. கடலகத்துத் தீவுகளில் வாழ்ந்த கடம்பருட் சிலர் நாட்டில் புகுந்து சேரமானுக்கு மாறாக ஆரிய வேந்தரொடு கலந்து பகை சூழலுற்றனர். அந் நாளில் யவன நாட்டவர் கலங்களிற் போந்து வாணிகம் செய்தமையின், அவருட் சிலரொடு நட்புக் கொண்டு, இமயவரம்பனுக்கு மாறாகப் போர் தொடுக்குமாறு அக் கடம்பர்கள் அவர்களைத் தூண்டினர். உண்மை அறியாத யவனர், ஆரியரும் கடம்பரும் செய்த துணை பெற்று இமயவரம்பனோடு போரிட்டனர். போர் கடுமையாக நடந்தது. சேரர்படை கடலிற் கலஞ் செலுத்திப் பொருவதிலும் சிறந்திருந் தமையால் யவனர் நிலத்தில் கால்வைத்தற்கு வழியின்றிச் சீரழிந்தனர். அவருட் பலர் சிறைபட்டனர்; நேர்மையும் பணிவும் அமைந்த சொற்செயல்களால் நெடுஞ்சேர லாதன் அருட்கு இலக்காகாத பகைவர் கடுந் தண்டத்துக்கு உள்ளாயினர். மிக்க குற்றம் செய்தவரைக் கைப்பற்றி அவர் தம் இருகைகளையும் முதுகின் புறத்தே சேர்த்துக் கட்டித் தலையில் நெய் பூசித் தன் நகரவர் காண நெடுஞ்சேரலாதன் கொண்டுவந்தான். மற்றை யோர், பொன்னும் வயிரமுமாகிய மணிகளைக் கொணர்ந்து கொடுத்துச் சேரலாதனது அருளைப் பெற்றனர். அவன் அவற்றைப் படை மறவர்க்கும் தானைத் தலைவர்க்கும் துணைவர்க்கும் பரிசிலர்க்குமே நல்கினான். இதனைப் “பேரிசை மரபின் ஆரியர் வணக்கி , நயனில் வன்சொல் யவனர்ப் பிணித்து நெய் தலைப்பெய்து கையிற் கொளீஇ அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு, பெருவிறல் மூதூர்த் தந்து பிறர்க்குதவி” என்று பதிற்றுப் பத்தின் பதிகம் கூறுகிறது. மாமூலனார் என்னும் சான்றோர், “நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார், பணிநிறைதந்த பாடுசால் நன்கலம், பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல், ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்று அவன் நிலந்தினத் துறந்த நிதியம்[20]” என்று இசைக்கின்றனர்.
இவ்வண்ணம் இமயவரம்பன், ஆரியர் கடம்பர் யவனர் என்போருடைய புறப்பகை கடிவதில் பெரிதும் ஈடுபட்டிருந்ததனால், உண்ணாட்டில் வாழ்ந்த குறுநில வேந்தர் சிலர், அவனது பொருமுரண் இயல்பு நோக்காது, திரை செலுத்துவதைக் கைவிட்டுப் பகைத்து அவன் சீற்றத்துக்கு உள்ளாயினர். அவனும் அவரது செருக்கடக்கி உட்பகையைப் போக்கக் கருதி அவர்தம் நாட்டின் மேற் படை கொண்டு சென்றான். பகைத்த வேந்தருடைய மதிலும் காவற்காடும் அழிந்தன, நிரை நிரையாகச் சென்ற அவனது படைவெள்ளம் பகைவர் படை வலியைச் சிதைத்து அவரது செல்வத்தைச் சூறையாடிற்று. படைமறவர் அந் நாடுகளில் தங்கிப் பகைவர் வாழ்ந்த பகுதிகளைத் தீக்கிரையாக்கினர்; தீப் பரவாத இடங்களை உருவறக் கெடுத்தனர். பாழ்பட்ட இடங்களில் வேளையும் பீர்க்குமாகிய கொடிகள் வளர்ந்து படரலுற்றன. நீரின்றிப் புலர்ந்து கெட்ட புலங்களில் காந்தள் முளைத்து வளர்ந்து மலர்ந்தன. செல்வர் வாழ்ந்த இடங்களில் வன்கண்மை மிக்க மறவர் குடிபுகுந்தனர்; பனையோலை வேய்ந்த குடில்கள் பலப்பல உண்டாயின[21].
இந்நிலை உண்டாகக் கண்ட பகைவேந்தர் தாம் செய்த தவற்றை யுணர்ந்து இமயவரம்பனது அருளைப் பெறற்கு முயன்றனர். அவன் அவர்களை ஒறுப்பதே கருதி யொழுகினான். மறத்துறையால் எய்தும் புகழ் அறச்செய்கையாற்றான் நிலை பெறும் என்பதை மறந்து, இமயவரம்பன் மறமே நினைத்து ஒழுகுவது நன்றன்று எனக் கண்டார் கண்ணனார். சேரலாதனைக் கண்டு, “வேந்தே, நின் வலி அறியாது பொருது கெட்ட வேந்தர் நாடு எய்திய அழிவும் கண்டேன்; பின்னர் நீ காக்கும் நாட்டையும் கண்டேன்; நினது நாடு மலைபடு பொருளும் கடல்படு பொருளும் ஆறுபடு பொருளும் பெருகவுடையது; ஊர்களில் விழாக்கள் மிகுந்துள்ளன ; மூதூர்த் தெருக்களில் கொடி நுடங்கும் கடைகள் மலிந்துள்ளன ; நின் வயவர் பரிசிலர்க்குச் செல்வமும் யானைகளும் பரிசில் நல்குகின்றனர்; நெடுஞ்சேரலாதன் நீடு வாழ்க என்ற வாழ்த்து அவர் வாயில் மலர்ந்த வண்ணம் இருக்கிறது; பகையால் விளையும் வெய்துறவு அறியாத மக்கள் இன்ப வாழ்வில் திளைக்கின்றனர்; அறவோர் பலர் ஒன்று மொழிந்து அடங்கிய கொள்கையும் துறக்கம் விரும்பும் வேட்கையும் கொண்டு அறம் புரிகின்றனர்; நீ காத்தலால் அவரவரும் விரும்பியன விரும்பியவாறு பெற்று இனிது உறைகின்றனர்; நாட்டில் நோயில்லை; கள்ளுண்டு களிக்கும் இயவர், இவ்வுலகத்தோர் பொருட்டு நீ ‘வாழியர்’ என நின்னை நினைத்து இசைப்பது கண்டேன்[22]” என்று மொழிந்து “இத்தகைய இன்ப வாழ்வு இச் சேர நாடு முற்றும் நிலவச் செய்க” என்று வேண்டினர்.
- ↑ 19. “யோமிநாட்டுக் குமட்டூர்ப் பிறந்தான் காவுதி ஈதனுக்குச் சித்துப் போசில் இளையார் செய்த அதிட்டானம்” - சித்தன்னவாசல் கல்வெட்டுக்கள். Also vide Proceedings and transactions of the 3rd Oriental Conferance, Madras. p. 280 and 296.
- ↑ 20. அகம். 127.
- ↑ 21. பதிற். 15.
- ↑ 22. பதிற். 15.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - History of Chera - சேர மன்னர் வரலாறு - நாடு, வாழ்ந்த, குமட்டூர், அவன், இமயவரம்பன், என்றும், கொண்டு, பொருளும், பகைவர், கண்டேன், வேந்தர், புகழ், உமட்டூர், யவனர்