சேர மன்னர் வரலாறு - சேரநாடு
திருச்சிற்றம்பலம்.
நீலத் திரைக்கட லோரத்திலே நின்று
நித்தம் தவஞ்செய் குமரியெல்லை-வட
மாலவன் குன்றம் இவற்றிடையே புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு- பாரதியார்
பண்டை நாளைத் தமிழகம், “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் என்பவராற் சிறப்பித்துக் கூறப்படுவது. வடவேங்கட மலைத்தொடர் வடக்கே வட பெண்ணை யாற்றங்கரை வரையில் தொடர்ந்து தமிழகத்துக்கு வடவெல்லையாய் நிற்பது. தென்குமரி யென்பது தென்கோடியிலுள்ள குமரிமலையாகிய தென்னெல்லை. கிழக்கிலும் மேற்கிலும் கடலாதலால் அவை குறிக்கப்படவில்லை.
பண்டை நாளில் இத் தமிழகம் சேர சோழ பாண்டியரென்ற மூவேந்தருக்கு உரியதாய், முறையே, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என மூன்று பெரும் பிரிவுற்று விளங்கிற்று. பண்டைத் தமிழாசிரியன்மாரும் “பொதுமை சுட்டிய மூவருலகம்[1]” என்றும், “வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு[2]” என்றும் கூறியுள்ளனர். வடக்கே வேங்கடம் முதல் தெற்கே புதுக்கோட்டைக்கு அண்மையிலோடும் வெள்ளாறு வரையிற் சோழ நாடும், வெள்ளாற்றுக்கும் தென்குமரிக்கும் இடைப்பகுதி பாண்டிய நாடும், மேலைக் கடலுக்கும் மேலை மலைத் தொடருக்கும் இடையிலுள்ள நிலப்பகுதி சேர நாடு மாகும் ஆயினும், ஏனைச் சோழ பாண்டிய நாடுகளைப் போலாது தனது மொழியும் பண்பாடும் தொன்மை வரலாறும் இழந்து, முற்றிலும் வேறு நாடாகக் காட்சி யளிக்கும் வகையில், சேர நாடு தமிழ் நலம்குன்றி விட்டமையின், அதன் பண்டைய எல்லை நன்கு ஆராய்ந்தல்லது வரையறுத்துக் கூற முடியாத நிலையில் உளது.
இங்கே பண்டை நாள் என வழங்குவது கடைச்சங்க காலமாகும். அக் காலத்தே சேர நாடு செந்தமிழ் நலம் சிறந்து தமிழ் கூறும் நல்லுலகமாக விளங்கிற்று. சங்ககால நூல்களை நன்கு பயின்றால் அன்றிச் சேர நாட்டின் பண்டைநாளை நிலையினை அறிவது அரிது; அது பற்றியே சோழர்களைப்பற்றியும், பாண்டியர்களைப் பற்றியும் வரலாற்று நூல்கள் (History) உண்டானது போலச் சேர நாட்டுக்கு வரலாறொன்றும் தோன்றவில்லை. சேர நாடு பிற்காலத்தே கேரள நாடென வழங்கத் தலைப்பட்டது. அதன்பின், கேரளோற்பத்தி, கேரளமான்மியம் என்ற வரலாற்றுப் போலிகள் உண்டாயின. சேர நாடென்பது கேரள நாடானதற்கு முந்திய நிலையாதலால், அதன் தொன்மைநிலை அறிதற்குச் சேர மன்னர்களையும் சேரநாட்டு மக்களையும் பற்றிக் கூறும் சங்க இலக்கியங்கள் சான்றாகின்றன.
இச் சங்க இலக்கியங்கள் பலவும் தொகைநூல்களாதலால், இவற்றில் சேர நாட்டின் வடக்கும் தெற்குமாகிய எல்லைகள் இவையென வரையறுத்தறிதற்குரிய குறிப்புகள் விளக்கமாக இல்லை. ஆயினும், தென் கன்னடம் மாவட்டத்திலுள்ள குதிரை மலையும், ஏழில் மலையும், குடகு நாட்டிலுள்ள நறவுக்கல் பெட்டா மலையும். நீலகிரியிலுள்ள உம்பற் காடும், மலையாள மாவட்டத்திலுள்ள வயநாட்டுப் (Wynad) பாயல் மலையும், குறும்பர் நாடு தாலூகாவிலுள்ள தொண்டியும், கொச்சி நாட்டிலுள்ள கருவூர்ப்பட்டினமும், திருவஞ்சைக்களமும் கொடுங்கோளூரும், பேரியாறும் பிறவும் சேரர்க்குரியவாகக் கூறப்படுகின்றன. மேலை மலைத் தொடரின் தென்கோடியில் நிற்கும் பொதியிலும் தென்குமரியும் பாண்டியர்க் குரியவாகக் குறிக்கப் படுகின்றன.
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் மேலைக் கடற்கரைப் பகுதிக்கு வந்து சென்ற யவன அறிஞரான தாலமியென்பவரது குறிப்பால், அப்போது சேர நாட்டுக்கு வடக்கில் வானவாறும் (Honawar), கிழக்கில் மலையும், தெற்கில் கொல்லத்து ஆறும், மேற்கில் கடலும் எல்லைகளாக இருந்தன என ஆராய்ச்சியாளர்[3] உரைக்கின்றனர். வானவாறென்பது வட கன்னட நாட்டின் தென்கோடியில் இருக்கும் கடற்கரையூர்; வட கன்னடத்தையும் தென் கன்னடத்தையும் எல்லையாய் நின்று பிரிக்கும் ஆறு கடலோடு கலக்குமிடத்தில் வட கரையிலேயே இருக்கிறது. அந்த ஆற்றுக்கும் வானவாறென்பது பெயர். வானவாறு தோன்றும் இடம் வானவாசி நாட்டைச் சேர்ந்தது. அதனால் சேர நாட்டின் வடக்கில் வானவாசி நாடு உளது என்றற்குப் போதிய இடமுண்டாகிறது.
இனி, எழு கொங்கணத்துக்கும் கேரள நாட்டுக்கும் கோகரணம் எல்லை என்று சிலர் கூறுவர். வேறு சிலர், கொங்கணம் ஏழனையும் தன்னகப்படுத்தி வடக்கிற் சூரத்து வரையில் சேர நாடு பரவியிருந்தது என்பர்[4]. கொங்கணம் ஏழாவன: கிராத நாடு, விராத நாடு, மராட்ட நாடு, கொங்கண நாடு, கூபக நாடு, ஐவ நாடு, துளு நாடு என்பன. அவற்றுள் கொங்கணம் சங்க இலக்கியங்களில் கொண்கானம் என வழங்கும்; அஃதாவது, தென் கன்னட மாவட்டத்தின் பெரும் பகுதியெனக் கொள்க. கொண்கானம் வேறு, கொங்கு நாடு வேறு. கொண்கான மென்பது மேலே மலைத் தொடர்க்கு மேற்கில் கடல் சார்ந்து மலைக்கும் கடலுக்கும் இடையிற் கிடப்பது. கொங்கு நாடு மேலே மலைத் தொடர்க்குக் கிழக்கில் உள்ள உண்ணாட்டுப் பகுதி. ஐவ நாடென்பது நாக நாடெனவும் வழங்கும்; அஃது இப்போதுள்ள குடகு நாட்டின் ஒரு பகுதி; அந் நாட்டிலுள்ள சோமவாரப்பேட்டை யென்னும் ஊர்க்குப் பழம் பெயர் நாகரூர் என்பது[5]. வட கன்னட மாவட்டத்தையும் ஐவ நாடு என்பர். அப்பகுதியில் தோன்றி மைசூர் நாட்டிலோடு நாக நதியின் பெயர் இதனை வற்புறுத்துகிறது. மணிமேகலை ஆசிரியர், “நக்க சாரணர் நாகர்வாழ் மலைப்பக்கம்[6]” என்று குறிப்பது இந்த நாக நாடாகலாம் என அறிஞர் சிலர் கருதுகின்றனர்.
- ↑ 1. புறம். 357
- ↑ 2. தொல். செய். 78
- ↑ 3. William Logan’s Malabar. P. 254
- ↑ 4. Wilke’s south of India. P. 1-15.2. Buchana’s Mysore and canara Vol.iii. P. 348. Bombay Gazetteer Vol, XV, Partii. P.75.
- ↑ 5. Imperial gazetteer: Mysore and coorg. P. 331.
- ↑ 6. மணி. xvi 15-16.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரநாடு - History of Chera - சேர மன்னர் வரலாறு - நாடு, மலையும், நாட்டின், வேறு, மலைத், கன்னட, நாட்டிலுள்ள, பெயர், கொங்கணம், சிலர், கேரள, கூறும், தமிழ், பாண்டிய, பண்டை, சங்க, தென்