சேர மன்னர் வரலாறு - சேரநாடு
மேனாட்டவர் முதற்கண் அப் பகுதிக்கு வந்த போது, அங்கே துளுவும் கன்னடமும் கலந்து தமிழ் தனது செந்நிலை வழுவி வந்த காலமாகும். அதனால் அவர்கள் ஏழில்மலை யென்னாது எலிமலை யென்றும், அங்கே எலிகள் மிக நிறைந்திருந்தன என்றும் தவறு கூறியிருக் கின்றனர். அது கேட்ட அம் மேனாட்டவர் தம் குறிப்பில் ஏழில்மலையை எலிமலை யென்றே குறித்துள்ளனர். இன்றும் அஃது ஆங்கிலத்தில் எலிமலை யென்றே வழங்குகிறது. பின்வந்த கொரீஇயா (Correa) என்பவர் அங்கு வாழ்ந்தவருள் கற்றோர் சிலரை யுசாவினாராக, அவர்க்கு அவர்கள் ஏழில்மலையைச் சப்த சயிலம் என்று வடமொழிப்படுத்துக் கூறினர். ஆயினும், அது பெருவழக்கில் இல்லை. அவர்க்குப் பின்னே வந்த மார்க்கோ போலோ , ஏழில்மலை நாட்டை எலிமலை நாடென்றும், இபன்பாதுதா, இலி யென்றும் குறித் துள்ளனர். கேரளாத்திரி வேந்தர்களின் அரண்மனை யொன்று ஏளி கோயிலகம் என்ற பெயரால் இவ்வேழில் மலையின் வடபுறத்தடியில் உளது. இதனடியில் இதன்கண் ஒழுகும் அருவிகள் கூடிச்செல்லும் சிற்றாறு நலம் சிறந்து சென்று கடலோடு கலக்கின்றது. அக் கலப்பால் உப்புக்கரிக்கும் கரிய நீரில் முதலையின் பேரினங்கள் வாழ்கின்றன; அவற்றால் அங்கு வாழும் மக்கட்கும் விலங்குகட்கும் உயிர்கேடு உண்டாவது இயல்பு.
தென் கன்னட மாவட்டத்துக்கும் மைசூர் நாட்டுக்கும் எல்லையாய் நிற்கும் மலைத்தொடரில் உள்ள முடிகளுள் ஒன்று குதிரை மலை யென்பது. இதன் உயரம் 6215 அடி : இதனை இப்போது சஞ்ச பருவதம் (சம்ச பருவதம்) என வடமொழியாளர் வழங்குவராயினும், பண்டைத் தமிழகத்துக்கு உரியதென உரிமை காட்டும், தமிழ்ப் பெயரைக் கைவிடாது அங்கு வாழும் பொது மக்கள் குதிரை மூக்கு மலை (Gudramukh) என்றே வழங்குகின்றார்கள். இதன் மேற் பொழியும் மழைநீர் ஒருபால் கிருட்டினையாற்றையும் ஒருபால் காவிரி யாற்றையும் அடைகிறது. கடலிலிருந்து காண்போர்க்கு இது குதிரை முகம் போல் காட்சியளித்தலால் இப் பெயர் பெறுவதாயிற்று.[33]
தென்னம் பொருப்பு எனப்படும் தென்மலைத் தொடர் 200கல் நீளமுள்ளது; இது கொங்கு நாட்டிற்கும் பாண்டி நாட்டிற்கும் மேலெல்லையாய் நிற்கிறது. இதன்கட் காணப்படும் முடிகளுள் திருவிதாங்கூர் நாட்டுக் கோட்டையம் பகுதியில் நேரிமலையும் அயிரைமலையும் பேரியாற்றின் கரையில் நிற்கின்றன. கொச்சி நாட்டை அடுத்து வடகீழ்ப் பகுதியில் நிற்கும் நெல்லியம்பதி மலைகளுள் பாதகிரி என்பது ஒன்று; இதனை மிதியாமலா என்றும் மியான்முடி யென்றும் கூறுவர். இதன் உயரம் 5200 அடி. இதன் அடியிலுள்ள நாட்டவர், குறு முனிவர் பொதிய மலைக்கு வந்தபோது அவருடைய செருப்படி அழுந்தியதனால் அம் முடி செருப்புப் போலாயிற்றென்றும், இது சித்தர் வாழிட மாதலால் யாரும் இதன் மேல் கால் வைத்து ஏறக் கூடா தென்பது பற்றி மிதியாமலையென இதற்குப் பெயரெய் திற்றென்றும் உரைக்கின்றனர். செருப்பென்பதன் பொதுமை நீக்கி மலையைச் சிறப்பாக உணர்த்தல் வேண்டிச் சங்கச் சான்றோர், “மிதியல் செருப்பு” என்றும், அது பூழி நாட்டுக்குரியதென்பது தோன்ற “மிதியல் செருப்பின் பூழியர்[34]” என்றும் இசைத்துள்ளனர்.
இச் சேரநாட்டு மேற்கு மலைத் தொடரில் தோன்றி இழிந்தோடும் ஆறுகள் பல. அவற்றுள், தமிழ்ச் சான்றோர் பரவும் புகழமைந்த பேராறுகளுள் காவிரியும் வையையும் தண்ணான் பொருநையும் பேரி யாறும் சிறப்புடையனவாம். இவற்றுட் காவிரியாறு, சேரரது குட நாட்டில் தோன்றித் தன்னைப்போல் தோன்றிவரும் ஏனைச் சிற்றாறுகளோடு கூடிக் கொங்கு நாடு கடந்து சோழ நாட்டிற் பாய்ந்து கடலிற் கலக்கும் சிறப்புடையது. இதனால் சோழநாடே பெரும்பயன் எய்துவது பற்றி, இது சோழர்க்குரியதாய் நிலவுகிறது; சோழ நாட்டுச் சோழ வேந்தரைப் பாடும் சான்றோர் காவிரிக்குச் சொன் மாலை சூட்டிச் சிறப்பிக்கின்றனர்; பாண்டியரது பாண்டி நாட்டு வையை யாறும் தென் மலையாளப் பொருப்பிலே தோன்றிப் பாண்டி நாட்டிற் படர்ந்து பயன்பட்டுக் கடலிற் கலந்து விடுகிறது. பாண்டி வேந்தரைப் பரவும் பாவலர் பலரும் இவ் வையை யாற்றை வான்புகழ் வயங்கப் பாடியுள்ளனர். தண்ணான் பொருநை, பொதியிலுக் கண்மைக் குன்றில் தோன்றித் தென்பாண்டி நாட்டிற் சிறந்து பரவித் தென்கடலிற் சென்று சேர்கிறது.
செந்தமிழ் நாட்டிற் சிறப்புடைய ஆறுகட்குத் தோற்றுவாயாய் விளங்குவது சேர நாடாயினும், அந்த நாட்டிலே தோன்றி அந் நாட்டிலேயே படர்ந்தோடி அந் நாட்டு மேலைக் கடலிற் கலக்கும் பெருமையாற் பிறங்குவது பேரி யாறாகும். இதுபற்றியே, சிலப்பதிகாரம் பாடிய சேரர் இளங்கோ சோழநாட்டுப் புகார்க் காண்டத்தில் காவிரியாற்றையும், மதுரைக் காண்டத்தில் வையை யாற்றையும் பாடிச் சேரர்க்குரிய வஞ்சிக் காண்டத்தில் பேரியாற்றைப் பெரிதும் புகழ்ந்து பாடியிருக்கின்றார்.
ஏனைக் காவிரியையும் வையையும் போலப் பேரி யாற்றைப் பற்றித் தமிழ் மாணவர் நன்கறியும் வாய்ப்பு இலராதலால், அவர் பொருட்டு அதன் தோற்ற வொடுக்கத்தைக் கூறுதும்: மேலை மலைத் தொடரின் தென்மலைப் பகுதியில் சிவகிரிக் காட்டின் இடையே யுள்ள ஏரியினின்றும் வழிந்தோடுவது பேரியாறு. தொடக்கத்தில் பேரியாறு வடக்கு நோக்கி 10கல் அளவு சென்று முல்லை யாற்றோடு கூடிக்கொண்டு, மேற் சென்று, இரண்டு பெருமுடிகட்கிடையே அவற்றின் அடியைக் குடைந்து செல்லுகிறது. அவ்விடத்தே சென்னை யரசியலார் 1200 அடி நீளமும் 160 அடி உயரமுமுள்ள அணை யொன்று கட்டித் தேக்கி அதன் பெருக்கின் பெரும் பகுதியை வையை யாற்றிற் கலக்கும் சிற்றாறொன்றில் திருப்பிவிட்டனர். அவ்வணையின் கீழ்ச் செல்லும் பேரியாறு, மலைப்பிளவுகளின் வழியாய் மேலைக் கடற்கரைப் பக்கம் இறங்கத் தலைப்பட்டுச் சிறிது சென்றதும், அங்கே வந்து சேரும் பெருந்துறை யாற்றோடு கூடுகிறது; பின்பு அவ்விடத்தினின்றும் இறங்கி வருகையில் சிறுதாணி யெனப்படும் சிற்றாறு வந்து சேருகிறது. சிறிது தூரம் சென்றதும், முதற்கண் குடவாறு வந்து கூடப்பெற்றுச் சிறிது சென்றதும், கொடை வள்ளலான குமணனுக்குரிய முதிர மலையில் தோன்றிவரும் முதிரப்புழையாற்றை வரவேற்றுத் தழீஇக் கொண்டு வட மேற்கு மூலையாகச் சென்று கோகரணிப் பாறை யென்னுமிடத்தே நூறடி யாழத்திற் குதித்து எட்டுக் கல் தொலையில் வீழ்ந்து கிடக்கும் பெரும் பாறையின் அடியிலுள்ள முழைஞ்சினுட் புகுந்து மறைந்து நெடிது சென்று தலை காட்டுகிறது. நீர் மிகப் பெருகி வருங்காலத்தில் அப் பாறைமேல் வழிந்தோடுவது பேரியாற்றுக்கு இயல்பு. இவ் வண்ணம் வெளிப்பட்டு வரும் பேரியாறு வரவர வாயகன்று ஆழம் சிறந்து காட்டு மரங்களைச் சுமந்து செல்லும் பெருக் குடையதாகி, நேரிமங்கலத் தருகில் தேவி யாற்றோடும் அதற்குப் பின் எட்டுக் கல் தொலையில் இடியாறெனப் படும் இடைமலை யாற்றோடும் கூடி 1200 அடி அகலமுடையதாய் இயங்குகிறது. அவ்வளவில் பல குன்றுகட்கிடையே வளைந்தும் நெளிந்தும் செல்லும் இப் பேரியாறு ஆலப்புழையை நெருங்கியதும் இரு கிளையாய்ப் பிரிகிறது. ஒரு கிளை ஆலப்புழையின் வடமேற்கில் சென்று அங்குள்ள காயலில் விழுகிறது; மற்றொன்று தெற்கில் வந்து பல கிளைகளாகப் பிரிந்து வீரப்புழைக் காயலிலும் திருப்பொருநைத் துறைக் காயலிலும் வீழ்ந்து விடுகிறது. வீரப்புழை வீரப்பொலி யெனவும் திருப்பொருநைத் துறை திருப்புனித்துறா எனவும் சிதைந்து வழங்குகின்றன. இதன் நீளம் 142 கல் என்று கணக்கிட்டுள்ளனர்[35].
- ↑ 33. Imp. Gezet. Mysore & Coorg P. 233 & 109
- ↑ 34. பதிற் 21.
- ↑ 35. 1.Nagam Iyer’s Travancore Manual Vol i P. 17-3.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரநாடு - History of Chera - சேர மன்னர் வரலாறு - சென்று, இதன், பேரியாறு, வையை, வந்து, என்றும், எலிமலை, நாட்டிற், பாண்டி, கலக்கும், காண்டத்தில், கடலிற், சென்றதும், சிறிது, செல்லும், பகுதியில், அங்கு, யென்றும், அங்கே, சிறந்து, குதிரை, சான்றோர், வந்த, பேரி