சேர மன்னர் வரலாறு - சேரநாடு
இவ் வகையில் தமிழ் மக்களும் தமிழ் நூல்களும் மேனாட்டறிஞர்களும் கூறுவனவற்றைக் கொண்டு நோக்கின், மேலைக் கடற்கரைப் பகுதி, தென்பாண்டி நாடு , வேணாடு, குட்ட நாடு, குட நாடு, பூழி நாடு, கற்கா நாடு என்ற ஆறு நாடுகளாக விளங்கியிருந்ததாம். கற்காநாடு கொண்கான நாடெனவும் வழங்குதலால், இவற்றை வடக்கிலிருந்து முறையே கொண்கான நாடு, குடநாடு, குட்டநாடு, வேணாடு, தென் பாண்டி நாடு, (குட்ட நாட்டைச் சேர்ந்திருப்பதாகக் கூறப்படும்) பூழிநாடு என்ற ஆறுமாகக் கோடல் வேண்டும்.
இனி, இப் பகுதிகளைத் தனித் தனியே எல்லை கண்டு தெளியுமுன், இந் நாட்டின் வழங்கும் நூல்களைக் காண்பது முறை. கொண்கான நாடு கன்னட மொழி
வழங்கும் நிலமாகவும், வேணாடும் குட்டநாடும் குடநாடும் மலையாள மொழி வழங்கும் நிலமாகவும் மாறிவிட்டன. தென்பாண்டி நாட்டுப்பகுதி மலையாள வேந்தர் அரசியற் கீழ் அகப்பட்டிருந்து இப்போது தமிழக அரசில் பண்டு போல் சேர்ந்துவிட்டது. ஏனைப் பகுதி முற்றும் இப்போது கேரள நாடு என்ற பெயர் தாங்கி நிலவுகிறது. இப் பகுதியின் தொன்மை கூறுவனவாகக் கேரளாற்பத்தி கேரள மான்மியம் என்ற இரு நூல்கள் உள்ளன. இவற்றின் அடிப்படை இக்கேரள பகுதி, தமிழ் கூறும் நல்லுலகத்தின் ஒரு கூறு என்பதை மறந்து நிற்கிறது; கேரளரென்பது சேரலர் என்ற தமிழ் மொழியின் சிதைவென்பதை யறியாது தனித் தோற்ற மென்னும் மயக்கத்தில் இவை முளைத்து உருவாகி இருக்கின்றன.
கேரளோற்பத்தி, கேரள மான்மியம் என்ற இவ்விரு நூல்களும் கேரள நாட்டை நான்காக வகுத்துத் துளுநாடு, கூபகநாடு, கேரளநாடு , மூசிக நாடு என்று கூறுகின்றன. கோகரணம் முதல் பெரும்புழையாறு வரையில் உள்ளது குளுநாடு; பெரும்புழையாறு என்பது ஏழில்மலைப் பகுதியில் ஓடும் பழையனூராறாக இருக்கலாம் என்பர். பெரும்புழையாறு முதல் புதுப்பட்டினம் வரையில் உள்ளது கூபக நாடு என்றும், புதுப்பட்டினத்திலிருந்து கன்னெற்றி வரையில் உள்ளது கேரள நாடென்றும், கன்னெற்றிக்கும் தென்குமரிக்கும் இடையில் கிடப்பது மூசிக நாடென்றும் கூறப்படு கின்றன. மூசிக நாடு கூசல நாடெனவும் பெயர் கூறப்படும். கன்னெற்றி யென்பது தென்கொல்லமா மென இராபர்ட்டு சூவெல் கூறுகின்றார்[18]. இவை பெரும்பாலும் நூல் வழக்கமாய் நின்றெழிந்தனவே யன்றி, இடைக்காலச் சோழ பாண்டிய கொங்கு கன்னட வேந்தர் காலத்தும் நடைமுறையில் இருந்ததில்லை; இச் செய்தி இந் நாட்டுக் கல்வெட்டுகளால் விளங்குகிறது[19]. இவற்றுள் துளு நாடென்பது கோசர்கள் வாழும் நாடு[20] என்று மாமூலனாரால் அகநானூற்றிற் குறிக்கப்பெறுகிறது. வானவாற்றுக்கு அண்மையில் இருக்கும் பாழி நகரம் வேளிர்க்குரியதெனப் பரணர் கூறுகின்றார்[21]. இப்பாழிநகர் இப்போது பாட்கல் (பாழிக்கல்) என வழங்குவதால், கொண்கானத்தின் வடக்கில் இருந்த நாடு வேளரிது வேளகம் (Belgaum) என்னும் வேணாடு என்பது இனிது காணப்படும். பிற்காலத்தே வேணாட்டின் வட பகுதி வேளகமென்றும் தென்பகுதி வானவாசி யென்றும் வழங்கலாயின. கொண்கான நாட்டிலுள்ள ஏழில்மலை பிற்காலத்தே எலிமலை யெனக் குழறிக் கூறப்படுகிறது. இக்குழறுபடையை அடிப்படையாகக் கொண்டு கேரள நாட்டு வடமொழியாளர் மூசிக நாடு என்று ஏழில் மலைப் பகுதிக்குப் பெயர் வழங்கியிருக்கின்றனர்[22].
இனி, இடைக்காலத்தும் பிற்காலத்தும் வாழ்ந்த திருவிதாங்கூர் வேந்தர்கள் தம்மை வேணாட்டடிகள் என்று கூறிக் கொள்வதை அவர் தம் கல்வெட்டுகள்[23] வேணாடென்பது வானவநாடு[24] என்பதன் திரிபு எனக் கூறுகின்றனர். திருவிதாங்கூர் உள்ள பகுதியை மேனாட்டு யவனர் ஆய் (Ave) நாடென்றதும், ஆய் என்பான் தமிழில் வேளிருளொருவன் என்பதும், எனவே, அப் பகுதி வேணாடமென்பதும் அறியாமை யால், கேரள வரலாறுடையார் இவ்வாறு கூறலாயினர் எனக் கொள்ளல் வேண்டும்.
- ↑ 18. Archeological Survey of South India Vol. ii P. 196.
- ↑ 19. T.A.S. Vol. ii. p. 106.
- ↑ 20. அகம், 15.
- ↑ 21. ஷை 258
- ↑ 22. T.A.S 11 பக். 87-113.
- ↑ 23. A.R. No 39-41 of 1936-7.
- ↑ 24. K.P.P. Menon’s History of Kerala Vol. ii P.5.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரநாடு - History of Chera - சேர மன்னர் வரலாறு - நாடு, கேரள, பகுதி, தமிழ், கொண்கான, மூசிக, பெரும்புழையாறு, உள்ளது, வரையில், இப்போது, வேணாடு, வழங்கும், பெயர்