சேர மன்னர் வரலாறு - சேரநாடு
இவ்வாற்றால் சேர நாட்டின் வடவெல்லை இன்றைய வட கன்னட நாட்டகத்தும் பரவியிருந்த தென்பது தெரிகிறது.
மேனாட்டறிஞரான பிளினி (Pliny) என்பாரது குறிப்பை ஆராயுங்கால், சேர நாட்டின் தென் னெல்லை இப்போதுள்ள கொல்லமும் கோட்டாற்றுக் கரையும் (Kottarakkara) எனத் தெரிகிறது. மேலும், திருவிதாங்கூரின் : தென் பகுதி முற்றும் பாண்டிய நாடாகவே இருந்ததென்றும் விளங்குகிறது. பெரிப்புளூஸ் நூலாசிரியர் குறிப்பும் இம் முடிபையே வற்புறுத்துகிறது.
இங்கே காட்டிய மேனாட்டறிஞர் குறிப்புகள் இப்போதைக்கு 1800 ஆண்டுகட்கு முற்பட்டன. அந் நாளில் விளங்கிய தமிழ்ச் சேர நாட்டின் தென் னெல்லை கொல்லத்தோடு நின்ற தென்பது தெளிவாம். அந்த அறிஞர்கள் குறிக்கும் தொண்டி, முசிறி முதலியன சேரர்களைப் பாடிய சங்க இலக்கியங்களிலும் காணப்படுவன. இவ்வாறே வட கன்னட நாட்டில் வழங்கும் செய்திகளால் பண்டைநாளைச் சேர நாடு கோகரணத்துக்கு வடக்கேயும் பரந்திருந்தமை தெளிவாய்த் தெரிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோரணத்தைப் பாடிய திருப்பதிகத்தால்[7] அஃது அவர் காலத்தே தமிழ் நலம் பெற்று விளங்கியதென்று தெரிகிறது. வட கன்னட நாட்டு ஹோனவார் பகுதியில் ஹோனவாருக்குத் தெற்கே 25கல் தொலைவில் இருக்கும் பாட்கல் (Bhatkal) என்னும் ஊரில் இருக்கும் கோயில்களில் இரண்டு தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன[8]. இக் குறிப்புகளால் சேர நாட்டின் வடவெல்லை வட கன்னடத்துக் கோகரணம் வரையில் பரவியிருந்ததென்ற கொள்கை மேற்கொள்ளத் தக்கதாகின்றது.
பிற்காலத்தே சேரநாட்டுக்கு எல்லை பலவகை யாகக் கூறப்படுவதாயிற்று. வடக்கிற் பழநாட்டுக்கும் கிழக்கிற் செங்கோட்டுக்கும், மேற்கிற் கோயிக் கோட்டுக்கும், தெற்கிற் கடற்கோட்டிக்கும் இடையில் கிடந்த சேர நாடு என்பது காவதம் பரப்புடையதென்பது ஒருவகை; எண்பது காவதப் பரப்புடைய சேரநாட்டுக்கு வடக்கிற் பழனியும் கிழக்கில் தென்காசியும் மேற்கில் கோயிக்கோடும் தெற்கிற் கடற்கோடியும் எல்லை யென்பது மற்றொரு வகை[9]; வடக்கிற் பழனியும் கிழக்கிற் பேரூரும் தெற்கிலும் மேற்கிலும் கடலும் எல்லையாகக் கொண்டு குறுக்கும் நெடுக்கும் என்பது காவதப் பரப்புடையது சேரநாடு எனக் கூறுவது வேறொருவகை[10]. பழனிக்குப் பண்டை நாளைப் பெயர் பொதினி[11] என்பது; ஆவி நன்குடி யென்பதும் ஒன்று[12]; எனவே, பழனியை எல்லையாகக் கூறும் கூற்றிரண்டும் பிற்காலத்தன என்பது தானே விளங்கும். மலையாளம் மாவட்டத்தில் குறும்பர் நாடு தாலூகாவைச் சேர்ந்த ஒரு பகுதிக்குப் பழநாடு என்று பெயர் உண்டு. அதன் வடவெல்லை வடகரை யென்றும் அதனருகே வந்து கடலில் கலக்கும் ஆறு சேரவாறு என்றும் பெயர் பெறும். வடகரை யென்னும் ஊர் படகரா (Badakara) என்றும், அந்த ஆறு தோன்றும் இடத்தருளேயுள்ள ஊர் சேரபுரம் என்றும் இப்போது வழங்குகின்றன. இதனால் ஒரு காலத்திற் சேர நாடு வடக்கிற் பழநாட்டோடு நின்றமை தெரிகிறது. இதற்கு வடக்கில் கோகர்ணத்தையும் பின்பு ஹோன வாற்றையும் எல்லையாகக் கொண்டு கொண்கான நாடு விளங்கிற்று.
இங்கே கண்ட பழநாடு பிற்காலத்தே ஓர் அரச குடும்பத்தினர் ஆட்சியிலிருந்தது; அவர்கள் பின்னர்க் கிழக்கில் மைசூர் நாட்டையடைந்து, அங்கே அஸ்ஸன் மாவட்டத்தில் மஞ்சரபாது தாலூகாவைச் சேர்ந்த அயிகூர் என்னுமிடத்தேயிருந்து இறுதியில் மைசூர் வேந்தர்க்கு அடங்கி யொடுங்கினர்[13]. இந்தப் பழநாட்டு வேந்தர் தம்மை நாயக்க மன்னர் என்பதனால் அவரது தோற்றவொடுக்கங்கள் பண்டை நாளைச் சேர நாட்டைக் காண்டற்குத் துணையாகாமையால் அதனை இம்மட்டில் நிறுத்தி மேலே செல்வாம்.
இனி, “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்[14]” என வரும் தொல்காப்பிய நூற்பாவொன்றுக்கு உரை கண்ட தொல்லாசிரியர்கள், அப் பன்னிரண்டையும், பொங்கர் நாடு, ஒளி நாடு, தென்பாண்டிய நாடு, குட்ட நாடு, குட் நாடு, கற்கா நாடு, பண்ணி நாடு, அருவா நாடு, அருவாவடதலை, சீத நாடு, பூழி நாடு, மலாடு என்று குறிக்கின்றனர். பிற்காலத்தறிஞர் பொங்கர் நாடு ஒளி நாடு என்ற இரண்டையும் விலக்கி, வேணாடு, புன்னாடு என்ற இரண்டையும் பெய்து கூறுவர். இவற்றுள் தென்பாண்டி, குட்டம், குடம் என்பன நன்கு தெரிகின்றன. தொண்டை நாட்டின் தென்பகுதியின் கடல் சார்ந்த நிலம் அருவா நாடெனக் கல்வெட்டுக்களால் குறிக்கப்படுவதால், அருவா நாடும் அருவா வடதலையும் தொண்டை நாட்டைக் குறிக்கின்றமை பெறப்படும். கற்கா நாடென்பது இந் நாளைக்கு குடகு நாட்டைக் குறிக்கிறதென்பது அந்த நாட்டு நூல் வழக்கால் இனிது தெரிகிறது. திண்டுக்கல்லுக்கு மேற்கிலுள்ள பண்ணிமலை பன்றிமலை யென்று பெயர் வழங்கினும் அப் பகுதியைப் பண்ணிநாடெனக் கொள்ளலாம். இப்போது, தேனி, சின்னமனூர், கம்பம், கூடலூர் என்ற ஊர்களிருக்கும் நாட்டுக்குச் சிலர் பூழி நாடெனப் பெயர் கூறுவராயினும், அங்குள்ள கல்வெட்டுகள் அப் பகுதியை அளநாடு எனக் குறிக்கின்றன[15]. இனி, மலபார் மாவட்டத்தில் பொன்னானி தாலூகாவின் தென் பகுதி இன்றும் பூழி நாடு எனப்படுகிறது[16]. மலாடென்பது திருக்கோயில் லூர் தாலூகாவின் மேலைப் பகுதியென்று கல்வெட்டுக் களால் தெரிகிறது. காவிரி பாயும் நீர் நாடு சீதநாடு எனப்பட்டதெனக் கொள்ளினும், பொங்கர் நாடு, ஒளி நாடு என்பன இவையெனத் தெரியவில்லை. ஆனால், பொங்கர் நாட்டைத் தெய்வச்சிலையார் வையையாற்றின் தென்கிழக்கிலுள்ள பகுதி யென்பர். வேணாடென்பது, மேனாட்டு யவனர் குறிப்புகளால் தெற்கெல்லை (தெக்கலை)க்கும் வடக்கெல்லை (வக்கலை)க்கும் இடைப் பகுதி யென்று அறிகின்றோம். புனனாடென்பதைத் புன்னாடெனக் கொள்ளின், அது, கொங்கு நாட்டின் வட பகுதியிலுள்ள நாட்டைக் குறிப்பதாம்; அப் பகுதி புன்னாடென்றே அங்குள்ள கன்னட நூல்களில் குறிக்கப் பெறுகிறது.[17]
- ↑ 7. திருஞான: 337-2
- ↑ 8. Bombay Graze:. Kanara part II P. 266-71
- ↑ 9. பெருந்தொகை 2091
- ↑ 10. W.L. Mala. p. 255
- ↑ 11. அகம், 61
- ↑ 12. முருகு. 176.
- ↑ 13. L. Rice: Mysore Vol. ii p361 and Vol i p 419
- ↑ 14. தொல். சொல். தெய்வச் . 295
- ↑ 15. M. Ep. A.R. No 428 of 1907
- ↑ 16. Malabar Manual Volip. 647, 666.
- ↑ 17. Heritage of Karnataka P. 10
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரநாடு - History of Chera - சேர மன்னர் வரலாறு - நாடு, தெரிகிறது, நாட்டின், பெயர், பகுதி, நாட்டைக், அருவா, பொங்கர், என்பது, வடக்கிற், தென், கன்னட, பூழி, வடவெல்லை, என்றும், அந்த, மாவட்டத்தில், எல்லையாகக்