சேர மன்னர் வரலாறு - சேரநாடு
கடலளவுக்கு 2800 அடி உயரத்தில் மலை முகட்டில் தோன்றி 60 கல் அளவு மலையிடையே நெளிந்து வளைந்து தவழ்ந்து தாவித் துள்ளிப் பரந்துவரும் பேரியாறு, அடர்ந்து படர்ந்து செறிந்து தழைத்து நிற்கும் பசுங்கானத்தால் திருமால் போல் இனிய காட்சி நல்கும். மேற்குமலைக் குவட்டில் அவன் மார்பிற் கிடந்து மிளிரும் முத்துமாலைபோல இனிய காட்சி நல்குகிறது. அதன் இரு கரையிலும் கோங்கமும் வேங்கையும் கொன்றையும் நாகமும் திலகமும் சந்தனமுமாகிய மரங்கள் வானளாவ ஓங்கி நிற்கின்றன. அவற்றின் பூக்களும் பசுந்தழைகளும் ஆற்றில் உதிர்ந்து அதன் நீரைப் புறத்தே தோன்றாதபடி மறைத்து விடுகின்றன. இவ்வியல்பை இளங்கோவடிகள்,
“கோங்கம் வேங்கை தூங்கிணர்க் கொன்றை நாகம் திலகம் நறுங்கா ழாரம் உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து மதுகரம் திமிறொடு வண்டினம் பாட நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாறு[36]” |
என எடுத்தோதுகின்றார்.
இச் சேரநாட்டு மலைத்தொடரிற் பாலைக்காட்டுக் கணவாயின் வடக்கிலுள்ள வடமலைத் தொடரிலும் தெற்கில் ஆனைமலை முதலாகவுள்ள தென்மலைத் தொடரிலும் ஆறுகள் பல உண்டாகின்றன. அவற்றுள், வடமலைத் தொடர் 800 கல் நீளமுடையது. அதன்கண் தோன்றும் சிறப்புடைய ஆறுகளை வானி யென்றும், தென்மலைத் தொடரில் தோன்றும் சிறப்புடைய ஆறுகளைப் பொருநை யென்றும் பண்டைத் தமிழ்ச் சான்றோர் பெயரிட்டிருக்கின்றனர். தென் கன்னடம் மாவட்டத்திற்கும் வட கன்னடம் மாவட்டத்திற்கும் எல்லையாய்க் கிழக்கு மேற்காக ஓடிக் கடலில் கலக்கும் ஆறு வானியாறு எனப்படும்; இப்போது அது கன்னடரால் ஹோனவாறு என்றும் சாராவதி யென்றும் சிதைக்கப் பெற்றுள்ளது. ஹோனவாறு, இன்று சாராவதி யாறு கடலோடு கலக்கும் இடத்து நகரத்துக்குப் பெயரளவாய் நின்றுவிட்டது. ஆறு மாத்திரம், சேர, வாறென நின்று பின்பு சாராவதியாகி விட்டது. இவ் வடமலைத் தொடரின் தென்னிறுதியில் தோன்றும் பொன்வானி பாலைக் காட்டுக் கருகில் பாரதப் புழையுடன் கூடி, மேலைக் கடலில் பொன்வானி நகர்க் கன்மையில் கடலோடு கலக்கின்றது. இப் பொன்வானி இப்போது பொன்னானி எனச் சிதைந்து வழங்குகிறது. வடமலைத் தொடரில் தோன்றிக் கிழக்கில் மைசூர் நாட்டில் ஓடிக் காவிரியோடு கலக்கும் ஆறு கீழ்ப்பூவானி யென்றும் உதகமண்டலத்தில் தோன்றிக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓடிக் காவிரியோடு கலக்கும் ஆறு பூவானி யென்றும் பண்டைச் சான்றோரால் வழங்கப் பெற்றன. இப்போது அவை கெப்பானி (Kebbani) என்றும் பவானி யென்றும் மருவி நிலவுகின்றன. கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் தாலூகாவில் இப் பூவானி யாற்றின் கரையில் பூவானி என்று பெயர் தாங்கிய ஊரொன்றிருப்பதும், அப் பகுதியை இடைக்காலக் கல்வெட்டுகள் பூவானி நாடெனக் குறிப்பதும் இம் முடிபுக்குச் சான்று பகர்கின்றன. கோயம்புத்தூர்க்கு உண்ணுநீர் நல்கும் ஆற்றுக்குச் சிறுவானி என்று பெயர்.
இவ் வடமலைத் தொடரில் தோன்றும் ஆறுகள் பலவும் வானியென்று பெயர் பெறுவதை நோக்கின், இம் மலைத் தொடர் வானமலை என்ற பெயர் கொண்டு ஒருகாலத்தே நிலவியிருந்த தென்பது நன்கு தெரிகிறது. இம் மலையின் வட பகுதியில் வானியாற்றின் கிழக்கில் உள்ள நாட்டுக்கு வானவாசி யென்று பெயர் கூறப்படுகிறது. அங்குள்ள அசோகன் கல்வெட்டுகள்[37] அதனை வானவாசி என்கின்றன. வாசி யென்பது பாசியென்னும் தமிழ்ச் சொல்லின் சிதைவு. பாசி, கிழக்கு என்னும் பொருளது; ஆகவே, வானவாசி வான மலைக்கும் கிழக்கிலுள்ளது என்றும், பொருள் படுமாறு காணலாம். இவ் வடமலையின் தென்பகுதி பாயல் மலையென வழங்குமாயினும் பொதுவாக மேற்கில் கொண்கானத்துக்கும் கிழக்கில் வான வாசிக்கும் இடை நிற்கும் மலைநாடு, வான நாடென வழங்கின்மை தேற்றம்.
தென்மலைப் பகுதியில் தோன்றும் பேரியாற்றின் கிளையைப் பொருநை என்றும், அது கடலோடு கலக்குமிடத்திலுள்ள ஊர்க்குத் திருப்பொருநைத்துறை யென்றும், கிழக்கில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாராபுரம் வழியாக ஓடிக் காவிரியோடு கலக்கும் ஆற்றுக்கு ஆன்பொருநையென்றும், திருநெல்வேலி வழியாக ஓடிக் கடலோடு கலக்கும் ஆற்றைத் தண்ணான் பொருநை யென்றும் பண்டையோர் பெயரிட்டுள்ளனர். அவற்றுள் திருப்பொருநைத்துறை திருப்புனித்துறா வானாற்போல், ஆன்பொருநை ஆம்பிராவதி யென்றும், அமராவதி யென்றும், தண்ணான் பொருநை தாம்பிரபரணி யென்றும் இப்போது மருவின் வாயினும், இப் பெயரளவே நோக்கின் பண்டைச் சேர நாட்டின் வட பகுதி வானவாசி நாடுவரையில் பரந்திருந்தமை இனிது தெளியப்படும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சேரநாடு - History of Chera - சேர மன்னர் வரலாறு - யென்றும், கலக்கும், வடமலைத், ஓடிக், பெயர், தோன்றும், பூவானி, வானவாசி, கிழக்கில், என்றும், பொருநை, கடலோடு, இப்போது, தொடரில், கோயம்புத்தூர், காவிரியோடு, பொன்வானி, மாவட்டத்தில்