முகலாயரின் கீழ் இந்தியா
செல்வச்சீமான்கள் பட்டு மற்றும் பருத்தி ஆடைகளை அணிந்தனர். ஆனால் ஏழை மக்கள் உடுக்க உடையின்றி குறைந்தபட்ச உடையிலேயே காலம் கழித்தனர். குளிர்காலங்களில்கூட அவர்களுக்கு போதுமான உடைகள் இருப்பதில்லை. தக்காணத்தில் வாழ்ந்த மக்கள் காலணியேதுமின்றி காணப்பட்டதாக நிகிடின் என்ற அயல்நாட்டுப் பயணி குறிப்பிட்டுள்ளார். தோல்பொருட்களின் உயர்ந்தவிலையே அதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும். அரிசி, தினை, பருப்பு வகைகள் போன்றவை சாதாணமக்களின் முக்கிய உணவாகும். கடற்கரைப்பகுதிகளில் மீன் உணவு தாரளமாகக் கிடைத்தது. நெய், எண்ணெய் விலை மலிவாகவும் உப்பு, சர்க்கரை விலை அதிகமாகவும் இருந்தன. கிராமப்புற மக்கள் ஏராளமான கால்நடைகளை வளர்த்து வந்தமையினால், பால் மற்றும் பால்பொருட்கள் தாரளமாகக் கிடைத்தன.
வேளாண்மை
பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் மக்கள் தொகை 125 மில்லியனாக இருந்திருக்கவேண்டும் என ஒரு மதிப்பீடு கூறுகிறது. பயிரிடுவதற்கு ஏராளமான நிலங்கள் இருந்தமையால் வேளாண்மை தழைத்திருந்தது. கோதுமை, நெல், பருப்பு வகைகள், பார்லி போன்ற பல வகைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. பருத்தி, அவுரி, கரும்பு, எண்ணெய் வித்துக்கள் போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டன. பதினேழாம் நூற்றாண்டில் புகையிலை, மக்காச்சோளம் என்ற இரண்டு புதிய பயிர்வகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. உருளைக்கிழங்கு, சிகப்பு மிளகாய் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் அறிமுகமாயின. ஆனால் இக்காலத்தில் புதிய வேளாண் தொழில் நுட்பங்கள் ஏதும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இருப்பினும், இந்தியாவினால் அரிசி, சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது.
வாணிப வளர்ச்சி
இந்தியாவிலிருந்து பல்வேறு வணிகவர்க்கத்தினர் நாடு முழுவதும் பரவியிருந்தனர். அவர்கள் உயர்ந்த தொழிலறிவைப் பெற்றிருந்ததோடு அமைப்பு ரீதியாகவும் செயல்பட்டுவந்தனர். சேத் மற்றும் போரா வணிகர்கள் தொலைதூர வர்த்தகத்தில் ஈடுபட்டனர். உட்பகுதி வணிகர்கள் பானிக் எனப்பட்டனர். பஞ்சாராக்கள் என்று அழைக்கப்பட்ட மற்றொரு வணிகப் பிரிவினர் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டனர். எருதுகளின் மீது பொதிகளை ஏற்றிக் கொண்டு தொலைதூரம் சென்றுகூட அவர்கள் வர்த்தகம் செய்தனர். ஆறுகளில் படகுகள் மூலமாகவும் மொத்த வியாபாரத்துக்கான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன. வணிகர்கள் ஒரு குறிப்பிட்ட வகுப்பை அல்லது சமயத்தை மட்டுமே சார்ந்தவர்களாக இருக்கவில்லை. குஜராத்தி வணிகர்களில் இந்துக்கள், சமணர்கள், முஸ்லிம்கள் ஆகியோர் இருந்தனர். ஆஸ்வால்கள், மகேஷ்வரிகள், அகர்வால்கள் அனைவரும் ராஜஸ்தானில் மார்வாரிகள் என்று அழைக்கப்பட்டனர். முல்தானிகள், கத்ரிகள், ஆப்கானிகள் மத்திய ஆசியப்பகுதிகளுடன் வாணிகத் தொடர்பு வைத்திருந்தனர். தென்னிந்தியாவில் சோழ மண்டலக் கடற்கரைப்பகுதியில் செட்டியார்களும், மலபார் கடற்கரைப் பகுதியில் முஸ்லிம்களும் முக்கிய வணிகப் பிரிவினராகத்திகழ்ந்தனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயரின் கீழ் இந்தியா , வரலாறு, இந்தியா, மக்கள், இந்திய, முகலாயரின், கீழ், வணிகர்கள், வேளாண்மை, சாகுபடி, பதினேழாம், வணிகப், மொத்த, ஏராளமான, ஈடுபட்டனர், செய்யப்பட்டன, தாரளமாகக், அரிசி, பருத்தி, இந்தியாவின், பருப்பு, வகைகள், விலை, எண்ணெய், முக்கிய, சர்க்கரை