முகலாயரின் கீழ் இந்தியா
முகலாயர் காலத்தில் நடைபெற்ற சமூக, பொருளாதார வளர்ச்சிகள் குறிப்பிடத்தக்கவை. அக்காலத்தில், பல ஐரோப்பியர் பயணிகளும் வணிகர்களும் இந்தியாவிற்கு வந்தனர். இந்தியாவில் நிலவிய சமூக, பொருளாதார நிலைமைகள் பற்றி அவர்கள் ஏராளமான தகவல்களை விட்டுச் சென்றுள்ளனர். பொதுவாக, அவர்கள் இந்தியாவின் செல்வச் செழிப்பையும் செல்வந்தர்களின் ஆடம்பரமான வாழ்க்கையையும் விவரித்துள்ளனர். மறுபுறம் குடியானவர்கள், கைவினைஞர்கள் போன்ற சாதாரண மக்களின் வறுமையையும் அவர்கள் பட்ட துயரங்களையும் கூட எடுத்துக் கூறியுள்ளனர்.
முகலாய உயர்குடியினர்
முகலாயர் காலத்தில் உயர்குடியினர் பல சலுகைகள் பெற்று வாழ்ந்த வர்க்கத்தினராவர். அவர்களின் பெரும்பாலோர் துருக்கியர் மற்றும் ஆப்கன்கள் போன்ற அயல் நாட்டினர். ஆனால் அக்காலம் முழுவதும் அவர்களுக்கிடையே கடும்பூசல்கள் நிலவின.
அவர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலேயே குடியமர்ந்து இந்தியாவையே தாய் நாடாக வரித்துக் கொண்டனர். இந்திய சமூகத்திலும் பண்பாட்டிலும் இரண்டறக் கலந்தனர். அதே சமயம் தங்களது ஒரு சில பழக்க வழக்கங்களையும் விட்டுவிடாமல் பின்பற்றிவந்தனர். அக்பர் காலம் தொடங்கி, இந்துக்களும், குறிப்பாக ராஜபுத்திரர்களும், உயர்குடியினரின் வர்க்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். எடுத்துக்காட்டாக, ராஜா மன்சிங், ராஜா பீர்பால், ராஜா தோடர்மால் போன்றோரைக் குறிப்பிடலாம். பின்னர், மராட்டியர்களும் முகலாயரிடம் பணியில் சேர்ந்து உயர் குடியினராக ஏற்றம் பெற்றனர்.
முகலாய உயர்குடியினர் அதிக ஊதியங்களைப் பெற்ற போதிலும் அவர்களது செலவுகளும் அதிகமாகவே இருந்தன. உயர் குடியினர் ஒவ்வொருவரும், ஏராளமான பணியாளர்கள், குதிரைகள், யானைகள் போன்ற பரிவாரங்களை பராமரிக்க வேண்டும். முகலாயப் பேரரசர்களைப் போலலே அவர்களும் ஆடம்பர வாழ்க்கையை நடத்த முயற்சித்தனர். உயர்ந்த வகை ஆடைகளை அணிந்தனர். பழங்கள்கூட இறக்குமதி செய்து புசித்தனர். விலையுயர்ந்த அணிகலன்களை ஆண், பெண் இருபாலரும் அணிந்தனர். பேரரசர்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களையும் அவ்வப்போது வழங்கினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முகலாயரின் கீழ் இந்தியா , வரலாறு, இந்தியா, இந்திய, முகலாயரின், ராஜா, உயர்குடியினர், சமூக, பொருளாதார, கீழ், விலையுயர்ந்த, உயர், அணிந்தனர், பெரும்பாலோர், முகலாயர், இந்தியாவின், காலத்தில், ஏராளமான, முகலாய