கம்ப இராமாயணம் - 32. வேல் ஏற்ற படலம்
வானரத் தலைவர்களைத் தொடர்ந்து, குரக்குச் சேனை களத்திற்கு மீண்டு வருதல்
|
'பெரும் படைத் தலைவர் யாரும் பெயர்ந்திலர்; பெயர்ந்துபோய், நாம் விரும்பினம் வாழ்க்கை என்றால், யார் இடை விலக்கற்பாலார்; வரும் பழி துடைத்தும்; வானின் வைகுதும், யாமும்' என்னா, இருங் கடல் பெயர்ந்தது என்ன, தானையும் மீண்டது, இப்பால். | 1 |
சேனைகள் புடை சூழ, இராவணன் போர்க்களம் செல்லுதல்
|
சில்லி ஆயிரம், சில் உளைப் பரியொடும் சேர்ந்த, எல்லவன் கதிர் மண்டிலம் மாறு கொண்டு இமைக்கும், செல்லும் தேர்மிசைச் சென்றனன் - தேவரைத் தொலைத்த வில்லும், வெங் கணைப் புட்டிலும், கொற்றமும், விளங்க. | 2 |
|
நூறு கோடி தேர், நொறில் பரி நூற்று இரு கோடி, ஆறு போல் மத மா கரி ஐ-இரு கோடி, ஏறு கோள் உறு பதாதியும் இவற்று இரட்டி, சீறு கோள் அரிஏறு அனானுடன் அன்று சென்ற. | 3 |
|
'மூன்று வைப்பினும், அப் புறத்து உலகினும், முனையின் ஏன்று கோளுறும் வீரர்கள் வம்மின்!' என்று இசைக்கும் ஆன்ற பேரியும், அதிர் குரல் சங்கமும், அசனி ஈன்ற காளமும், ஏழொடு ஏழ் உலகினும் இசைப்ப. | 4 |
இராவணனையும் அரக்கர் தானையையும் கண்ட வானரர் ஆரவாரித்தல்
|
அனைய ஆகிய அரக்கர்க்கும் அரக்கனை, அவுணர் வினைய வானவர் வெவ் வினைப் பயத்தினை, வீரர் நினையும் நெஞ்சினைச் சுடுவது ஓர் நெருப்பினை, நிமிர்ந்து கனையும் எண்ணையும் கடப்பது ஓர் கடலினை, கண்டார். | 5 |
|
கண்டு, கைகளோடு அணி வகுத்து, உரும் உறழ் கற்கள் கொண்டு, கூற்றமும் நடுக்குறத் தோள் புடை கொட்டி, அண்ட கோடிகள் அடுக்கு அழிந்து உலைவுற, ஆர்த்தார்- 'மண்டு போரிடை மடிவதே நலம்' என மதித்தார். | 6 |
அரக்கன் சேனையும் குரக்குச் சேனையும் கைகலத்தல்
|
அரக்கன் சேனையும், ஆர் உயிர் வழங்குவான் அமைந்த குரக்கு வேலையும், ஒன்றொடு ஒன்று, எதிர் எதிர் கோத்து, நெருக்கி நேர்ந்தன; நெருப்பு, இடை பொடித்தன; நெருப்பின் உருக்கு செம்பு என, அம்பரத்து, ஓடினது உதிரம். | 7 |
|
அற்ற வன் தலை அறு குறை எழுந்து எழுந்து, அண்டத்து ஒற்ற, வானகம் உதய மண்டிலம் என ஒளிர, சுற்றும் மேகத்தைத் தொத்திய குருதி நீர் துளிப்ப, முற்றும் வையகம் போர்க் களம் ஆம் என முயன்ற. | 8 |
|
தூவி அம் பெடை அரி இனம் மறிதர, சூழி தூவி, அம்பு எடை சோர்ந்தன, சொரி உடல் சுரிப்ப, மே வியம் படை படப்படர் குருதியின் வீழ்ந்த, மேவி அம் படைக் கடலிடை, குடரொடு மிதந்த. | 9 |
|
கண் திறந்தனர் கணவர்தம் முகத்த அவர் முறுவல் கண்டு இறந்தனர் மடந்தையர், உயிரொடும் கலந்தார்- பண்டு இறந்தன பழம் புணர்வு அகம் புக, பன்னி, பண் திறந்தன புலம்பு ஒலி, சிலம்பு ஒலி பனிப்ப. | 10 |
|
ஏழும் ஏழும் என்று உரைக்கின்ற உலகங்கள் யாவும் ஊழி பேர்வதே ஒப்பது ஓர் உலைவுற, உடற்றும் நூழில் வெஞ் சமம் நோக்கி, அவ் இராவணன் நுவன்றான் - 'தாழ் இல் என் படை தருக்கு அறும்' என்பது ஓர் தன்மை. | 11 |
அனுமனும் இலக்குவனும் அரக்கர் படையைச் சிதைத்தல்
|
மரமும் கல்லுமே, வில்லொடு வாள், மழு, சூலம், அரமும், கல்லும், வேல், முதலிய அயில் படை அடக்கி, சிரமும் கல் எனச் சிந்தலின், சிதைந்தது, அச் சேனை; உரமும் கல்வியும் உடையவன் செரு நின்றது ஒரு பால். | 12 |
|
அழலும் கண் களிற்று அணியொடும், துணி படும்; ஆவி சுழலும் பல் பரித் தேரொடு புரவியும், சுற்ற, கழலும் சோரி நீர் ஆற்றொடும் கடலிடைக் கலக்கும்- குழலும் நூலும்போல் அனுமனும் தானும் அக் குமரன். | 13 |
|
'வில்லும் கூற்றுவற்கு உண்டு' என, திரிகின்ற வீரன் கொல்லும் கூற்று எனக் குறைக்கும், இந் நிறை பெருங் குழுவை; ஒல்லும் கோள் அரி, உரும், அன்ன குரங்கினது உகிரும் பல்லும் கூர்க்கின்ற; கூர்க்கில அரக்கர்தம் படைகள். | 14 |
இராவணன் கொதித்து, அம்பு தொடுக்க குரக்குச் சேனை நிலைகெடுதல்
|
'கண்டு நின்று, இறைப் பொழுது, இனிக் காலத்தைக் கழிப்பின், உண்டு கைவிடும் கூற்றுவன், நிருதர் பேர் உயிரை; மண்டு வெஞ் செரு நான் ஒரு கணத்திடை மடித்தே கொண்டு மீள்குவென், கொற்றம்' என்று இராவணன் கொதித்தான். | 15 |
|
ஊதை போல்வன, உரும் உறழ் திறலன, உருவிப் பூதலங்களைப் பிளப்பன, அண்டத்தைப் பொதுப்ப, மாதிரங்களை அளப்பன, மாற்ற அருங் கூற்றின் தூது போல்வன, சுடு கணை முறை முறை துரந்தான். | 16 |
|
ஆளி போன்று உளன் எதிர்ந்த போது, அமர்க் களத்து அடைந்த ஞாளி போன்று உள என்பது என்? நள் இருள் அடைந்த காளி போன்றனன் இராவணன்; வெள்ளிடைக் கரந்த பூளை போன்றது, அப் பொரு சினத்து அரிகள்தம் புணரி. | 17 |
இலக்குவன் - இராவணன் பொருதல்
|
இரியல் போகின்ற சேனையை இலக்குவன் விலக்கி, 'அரிகள்! அஞ்சன்மின், அஞ்சன்மின்' என்று அருள் வழங்கி, திரியும் மாருதி தோள் எனும் தேர்மிசைச் சென்றான்; எரியும் வெஞ் சினத்து இராவணன் எதிர் புகுந்து ஏற்றான். | 18 |
|
ஏற்றுக் கோடலும், இராவணன் எரி முகப் பகழி நூற்றுக் கோடியின்மேல் செலச் சிலைகொடு நூக்க, காற்றுக்கு ஓடிய பஞ்சு எனத் திசைதொறும் கரக்க, வேற்றுக் கோல்கொடு விலக்கினன், இலக்குவன் விசையால். | 19 |
|
விலக்கினான் தடந் தோளினும் மார்பினும், விசிகம் உலக்க உய்த்தனன், இராவணன்; ஐந்தொடு ஐந்து உருவக் கலக்கம் உற்றிலன் இளவலும், உள்ளத்தில் கனன்றான், அலக்கண் எய்துவித்தான், அடல் அரக்கனை, அம்பால். | 20 |
|
காக்கல் ஆகலாக் கடுப்பினில் தொடுப்பன கணைகள் நூக்கினான்; கணை நுறுக்கினான், அரக்கனும், 'நூழில் ஆக்கும் வெஞ் சமத்து அரிது இவன்தனை வெல்வது; அம்மா! நீக்கி, என் இனிச் செய்வது?' என்று இராவணன் நினைந்தான். | 21 |
இராவணன் மோகப் படையை விட, வீடணன் கூற இலக்குவன் ஆழிப்படையை விடல்
|
'கடவுள் மாப் படை தொடுக்கின், மற்று அவை முற்றும் கடக்க விடவும் ஆற்றவும் வல்லனேல், யாரையும் வெல்லும்; தடவும் ஆற்றலைக் கூற்றையும்; தமையனைப் போலச் சுடவும் ஆற்றும் எவ் உலகையும்; எவனுக்கும் தோலான். | 22 |
|
'மோக மாப் படை ஒன்று உளது; அயன் முதல் வகுத்தது; ஆகம் அற்றது; கொற்றமும் சிவன் தனை அழிப்பது; ஏகம் முற்றிய விஞ்சையை இவன்வயின் ஏவி, காகம் உற்று உழல் களத்தினில் கிடத்துவென் கடிதின்'- 23 |
|
என்பது உன்னி, அவ் விஞ்சையை மனத்திடை எண்ணி, முன்பன்மேல் வரத் துரந்தனன்; அது கண்டு முடுகி, அன்பின் வீடணன், 'ஆழியான் படையினின் அறுத்தி' என்பது ஓதினன்; இலக்குவன் அது தொடுத்து எய்தான். | 24 |
வீடணன் உபாயத்தால் படை வலி அழிய, இராவணன் அவன் மேல் வேல் எறிதல்
|
வீடணன் சொல, விண்டுவின் படைக்கலம் விட்டான், மூடு வெஞ் சின மோகத்தை நீக்கலும், முனிந்தான், 'மாடு நின்றவன் உபாயங்கள் மதித்திட, வந்த கேடு நம்தமக்கு' என்பது மனம்கொண்டு கிளர்ந்தான். | 25 |
|
மயன் கொடுத்தது, மகளொடு; வயங்கு அனல் வேள்வி, அயன் படைத்துளது; ஆழியும் குலிசமும் அனையது; உயர்ந்த கொற்றமும் ஊழியும் கடந்துளது; உருமின், சயம்தனைப் பொரும் தம்பியை, உயிர் கொளச் சமைந்தான். | 26 |
|
விட்ட போதினின் ஒருவனை வீட்டியே மீளும், பட்ட போது அவன் நான்முகன் ஆயினும் படுக்கும், வட்ட வேல் அது வலம்கொடு வாங்கினன், வணங்கி, எட்ட நிற்கலாத் தம்பிமேல் வல் விசைத்து எறிந்தான். | 27 |
'ஈது என் உயிர் அழிக்கும்' என்று வீடணன் உரைக்க, இலக்குவன் 'இதைப் போக்குவேன்; அஞ்சல் நீ' எனல்
|
எறிந்த காலையில், வீடணன் அதன் நிலை எல்லாம் அறிந்த சிந்தையன், 'ஐய! ஈது என் உயிர் அழிக்கும்; பிறிந்து செய்யல் ஆம் பொருள் இலை' என்றலும், பெரியோன், 'அறிந்து போக்குவல்; அஞ்சல், நீ!' என்று இடை அணைந்தான். | 28 |
வேலைத் தானே மார்பில் ஏற்க, இலக்குவன் எதிர்தல்
|
எய்த வாளியும், ஏயின படைக்கலம் யாவும், செய்த மா தவத்து ஒருவனைச் சிறு தொழில் தீயோன் வைத வைவினில் ஒழிந்தன; 'வீடணன் மாண்டான்; உய்தல் இல்லை' என்று, உம்பரும் பெரு மனம் உலைந்தார். | 29 |
|
'தோற்பென் என்னினும், புகழ் நிற்கும்; தருமமும் தொடரும்; ஆர்ப்பர் நல்லவர்; அடைக்கலம் புகுந்தவன் அழியப் பார்ப்பது என்? நெடும் பழி வந்து தொடர்வ தன் முன்னம்,- எற்பென், என் தனி மார்பின்' என்று, இலக்குவன் எதிர்ந்தான். | 30 |
வேலை ஏற்க பலரும் முந்த, இலக்குவன் அவ் வேலைத் தன் மார்பில் ஏற்றல்
|
இலக்குவற்கு முன் வீடணன் புகும்; இருவரையும் விலக்கி, அங்கதன் மேற்செலும்; அவனையும் விலக்கி கலக்கும் வானரக் காவலன்; அனுமன் முன் கடுகும்; அலக்கண் அன்னதை இன்னது என்று உரை செயல் ஆமோ? | 31 |
|
முன் நின்றார் எலாம் பின் உற, காலினும் முடுகி, 'நின்மின்; யான் இது விலக்குவென்' என்று உரை நேரா, மின்னும் வேலினை, விண்ணவர் கண் புடைத்து இரங்க, பொன்னின் மார்பிடை ஏற்றனன், முதுகிடைப் போக, | 32 |
வீடணன் தண்டு கொண்டு இராவணனது தேர்க் குதிரையையும் சாரதியையும் அழித்தல்
|
'எங்கு நீங்குதி நீ?' என வீடணன் எழுந்தான், சிங்கஏறு அன்ன சீற்றத்தான், இராவணன் தேரில் பொங்கு பாய் பரி சாரதியோடும் படப் புடைத்தான், சங்க வானவர் தலை எடுத்திட, நெடுந் தண்டால். | 33 |
இராவணன் வீடணன்மேலும், அனுமன்மேலும் கணை தொடுக்க, அவனை வீடணன் வெகுண்டு, பின் தொடர்தல்
|
சேய் விசும்பினில் நிமிர்ந்து நின்று, இராவணன் சீறி, பாய் கடுங் கணை பத்து அவன் உடல் புகப் பாய்ச்சி, ஆயிரம் சரம் அனுமன் தன் உடலினில் அழுத்தி, போயினன், 'செரு முடிந்தது' என்று, இலங்கை ஊர் புகுவான். | 34 |
|
'தேடிச் சேர்ந்த என் பொருட்டினால், உலகுடைச் செல்வன் வாடிப் போயினன்; நீ இனி வஞ்சனை மதியால் ஓடிப் போகுவது எங்கு? அடா! உன்னொடும் உடனே வீடிப் போவென்' என்று அரக்கன்மேல் வீடணன் வெகுண்டான். | 35 |
வீடணனைக் கொல்லாது இராவணன் இலங்கைக்கு மீள்தல்
|
'வென்றி என் வயம் ஆனது; வீடணப் பசுவைக் கொன்று, இனிப் பயன் இல்லை' என்று இராவணன் கொண்டான்; நின்றிலன், ஒன்றும் நோக்கிலன், முனிவு எலாம் நீத்தான்; பொன் திணிந்தன மதிலுடை இலங்கை ஊர் புக்கான். | 36 |
வீடணன் துயரம் மிக்கவனாய், இலக்குவன் பாதத்தில் வீழ்ந்து, இறக்க முயல, சாம்பன் தடுத்தல்
|
அரக்கன் ஏகினன்; வீடணன் வாய் திறந்து அரற்றி, இரக்கம் தான் என இலக்குவன் இணை அடித் தலத்தில், கரக்கல் ஆகலாக் காதலின் வீழ்ந்தனன் கலுழ்ந்தான்; குரக்கு வெள்ளமும் தலைவரும் துயரிடைக் குளித்தார். | 37 |
|
'பொன் அரும்பு உறு தார்ப் புயப் பொருப்பினான் பொன்ற, என் இருந்து நான்? இறப்பென, இக் கணத்து; எனை ஆளும் மன் இருந்து இனி வாழ்கிலன்' என்றவன் மறுக, 'நில், நில்' என்றனன், சாம்பவன் உரை ஒன்று நிகழ்த்தும்: | 38 |
|
'அனுமன் நிற்க, நாம் ஆர் உயிர்க்கு இரங்குவது அறிவோ? நினையும் அத்துணை மாத்திரத்து, உலகு எலாம் நிமிர்வான், வினையின் நல் மருந்து அளிக்கின்றான்; உயிர்க்கின்றான், வீரன்; தினையும் அல்லல் உற்று அழுங்கன் மின்' என்று இடர் தீர்த்தான். | 39 |
சாம்பன் உரைப்படி அனுமன் மருந்து கொண்டு வந்து, இலக்குவனை உயிர்ப்பித்தல்
|
மருத்தின் காதலன் மார்பிடை அம்பு எலாம் வாங்கி, 'இருத்தியோ, கடிது ஏகலை? இளவலை இங்ஙன் வருத்தம் காணுமோ மன்னவன்?' என்னலும், அன்னான் கருத்தை உன்னி, அம் மாருதி உலகு எலாம் கடந்தான். | 40 |
|
உய்த்து ஒரு திசைமேல் ஓடி, உலகு எலாம் கடக்கப் பாய்ந்து, மெய்த் தகு மருந்துதன்னை, வெற்பொடும் கொணர்ந்த வீரன், பொய்த்தல் இல் குறி கெடாமே பொது அற நோக்கி, பொன்போல் வைத்தது வாங்கிக் கொண்டு வருதலில், வருத்தம் உண்டோ ? | 41 |
|
தந்தனன், மருந்து தன்னை; தாக்குதல் முன்னே யோகம் வந்தது, மாண்டார்க்கு எல்லாம்; உயிர் தரும் வலத்தது என்றால், நொந்தவர் நோவு தீர்க்கச் சிறிது அன்றோ? நொடிதல் முன்னே, இந்திரன் உலகம் ஆர்க்க, எழுந்தனன் இளைய வீரன். | 42 |
இலக்குவன் அனுமனைத் தழுவி, வீடணனின் நலத்தை உசாவல்
|
எழுந்து நின்று, அனுமன் தன்னை இரு கையால் தழுவி, 'எந்தாய்! விழுந்திலன் அன்றோ, மற்று அவ் வீடணன்!' என்று, விம்மித் தொழும் துணையவனை நோக்கி, துணுக்கமும் துயரும் நீக்கி, 'கொழுந்தியும் மீண்டாள்; பட்டான் அரக்கன்' என்று உவகை கொண்டான் | 43 |
வானரத் தலைவர்கள் இராமனிடம் சேர்ந்து வணங்க, இராமன், 'விளைந்தது என்ன?' என வினாவுதல்
|
'"தருமம்" என்று அறிஞர் சொல்லும் தனிப் பொருள் தன்னை இன்னே கருமம் என்று அனுமன் ஆக்கிக் காட்டிய தன்மை கண்டால், அருமை என் இராமற்கு? அம்மா! அறம் வெல்லும், பாவம் தோற்கும், இருமையும் நோக்கின்' என்னா, இராமன்பால் எழுந்து சென்றார். | 44 |
|
ஒன்று அல பல என்று ஓங்கும் உயர் பிணத்து உம்பர் ஒன்று குன்றுகள் பலவும், சோரிக் குரை கடல் அனைத்தும், தாவிச் சென்று அடைந்து, இராமன் செம் பொன் திருவடி வணக்கம் செய்தார், வென்றியின் தலைவர்; கண்ட இராமன், 'என் விளைந்தது?' என்றான். | 45 |
இராமன் அனுமனைத் தழுவி ஆசி கூறுதல்
|
உற்றது முழுதும் நோக்கி, ஒழிவு அற, உணர்வு உள் ஊற, சொற்றனன் சாம்பன், வீரன் அனுமனைத் தொடரப் புல்லி, 'பெற்றனன் உன்னை; என்னை பெறாதன? பெரியோய்! என்றும் அற்று இடையூறு செல்லா ஆயுளை ஆக!' என்றான். | 46 |
இலக்குவனை இராமன் பாராட்டி உரைத்தல்
|
புயல் பொழி அருவிக் கண்ணன், பொருமலன் பொங்குகின்றான், உயிர் புறத்து ஒழிய நின்ற உடல் அன்ன உருவத் தம்பி, துயர் தமக்கு உதவி, மீளாத் துறக்கம் போய், வந்த தொல்லைத் தயரதற் கண்டால் ஒத்த தம்முனைத் தொழுது சார்ந்தான். | 47 |
|
இளவலைத் தழுவி, 'ஐய! இரவிதன் குலத்துக்கு ஏற்ற அளவினம்; அடைந்தோர்க்கு ஆகி, மன் உயிர் கொடுத்த வண்மைத் துளவு இயல் தொங்கலாய்! நீ அன்னது துணிந்தாய் என்றால், அளவு இயல் அன்று; செய்தற்கு அடுப்பதே ஆகும் அன்றே? | 48 |
|
புறவு ஒன்றின் பொருட்டா யாக்கை புண் உற அரிந்த புத்தேள் அறவனும், ஐய! நின்னை நிகர்க்கிலன்; அப்பால் நின்ற பிற வினை உரைப்பது என்னே? பேர் அருளாளர் என்பார் கறவையும் கன்றும் ஒப்பார், தமர்க்கு இடர் காண்கில்' என்றான். | 49 |
இராமன் இளைப்பாறுதல்
|
சாலிகை முதல ஆன போர்ப் பரம் தாங்கிற்று எல்லாம் நீல் நிற ஞாயிறு அன்ன நெடியவன் முறையின் நீக்கி, கோல் சொரி தனுவும் கொற்ற அனுமன் கைக் கொடுத்து, கொண்டல் மேல் நிறை குன்றம் ஒன்றில் மெய்ம் மெலிவு ஆற்றலுற்றான். | 50 |
மிகைப் பாடல்கள்
|
அரக்கர் சேனை ஓராயிர வெள்ளத்தை, 'அமரில் துரக்க, மானுடர்தம்மை' என்று, ஒருபுடை துரந்து, வெருக் கொள் வானரச் சேனைமேல் தான் செல்வான் விரும்பி, இருக்கும் தேரொடும் இராவணன் கதுமென எழுந்தான். | 2-1 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
32. வேல் ஏற்ற படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - இராவணன், வீடணன், இலக்குவன், அனுமன், இராமன், கொண்டு, என்பது, நோக்கி, அரக்கன், எழுந்து, எல்லாம், மருந்து, என்றான், அனுமனைத், சாம்பன், நின்று, கொற்றமும், என்றால், அரக்கர், சேனையும், விலக்கி, குரக்குச், நீக்கி

