முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » கம்பர் நூல்கள் » கம்ப இராமாயணம் » 11. இராவணன் வானரத் தானை காண் படலம்
கம்ப இராமாயணம் - 11. இராவணன் வானரத் தானை காண் படலம்
கோபுரத்தின் மேல் இராவணன் நின்ற நிலை
|
கவடு உகப் பொருத காய் களிறு அன்னான், அவள் துயக்கின் மலர் அம்பு உற வெம்பும் சுவடுடைப் பொரு இல் தோள்கொடு, அனேகம் குவடுடைத் தனி ஒர் குன்று என, நின்றான். | 1 |
|
பொலிந்தது ஆங்கு மிகு போர் எனலோடும், நலிந்த நங்கை எழிலால் வலி நாளும் மெலிந்த தோள்கள் வட மேருவின் மேலும் வலிந்து செல்ல, மிசை செல்லும் மனத்தான். | 2 |
|
செம் பொன் மௌலி சிகரங்கள் தயங்க, அம் பொன் மேரு வரை கோபுரம் ஆக, வெம்பு காலினை விழுங்கிட, மேல்நாள், உம்பர் மீதில் நிமிர் வாசுகி ஒத்தான். | 3 |
|
தக்க பூதம் அவை ஐந்தொடு துன்னிட்டு ஒக்க நின்ற திசை ஒன்பதொடு ஒன்றும், பக்கமும், நிழல் பரப்பி, வியப்பால் மிக்கு நின்ற குடை மீது விளங்க, | 4 |
|
கைத் தரும் கவரி வீசிய காலால், நெய்த்து இருண்டு உயரும் நீள் வரை மீதில் தத்தி வீழ் அருவியின் திரள் சால, உத்தரீகம் நெடு மார்பின் உலாவ, | 5 |
|
வானகத்து உறும் உருப்பசி, வாசத் தேன் அகத் திரு திலோத்தமை, செவ் வாய் மேனகைக் குல அரம்பையர், மேல் ஆம் சானகிக்கு அழகு தந்து, அயல் சார, | 6 |
|
வீழியின் கனி இதழ், பணை மென் தோள், ஆழி வந்த அர மங்கையர், ஐஞ்ஞூற்று - ஏழ் இரண்டினின் இரட்டி பயின்றோர், சூழ் இரண்டு புடையும் முறை சுற்ற, | 7 |
|
முழை படிந்த பிறை முள் எயிறு, ஒள் வாள் இழை படிந்த இள வெண் நிலவு ஈன, குழை படிந்தது ஒரு குன்றில், முழங்கா மழை படிந்தனைய தொங்கல் வயங்க, | 8 |
|
ஓத நூல்கள் செவியின்வழி, உள்ளம் சீதை சீதை என ஆர் உயிர் தேய, நாத வீணை இசை நாரதனார் தம் வேத கீத அமுது அள்ளி விழுங்க, | 9 |
|
வெங் கரத்தர், அயில் வாளினர், வில்லோர், சங்கரற்கும் வலி சாய்வு இல் வலத்தோர், அங்கு அரக்கர் சதகோடி அமைந்தோர், பொங்கு அரத்த விழியோர் புடை சூழ, | 10 |
|
கல்லில் அம் கை உலகம் கவர்கிற்போர், நல் இலங்கை முதலோர், நவை இல்லோர், சொல்லில் அங்கு ஓர் சதகோடி தொடர்ந்தோர், வில் இலங்கு படையோர், புடை விம்ம, | 11 |
|
பார் இயங்குநர், விசும்பு படர்ந்தோர், வார் இயங்கு மழையின் குரல் மானும் பேரி, அங்கண் முருடு, ஆகுளி, பெட்கும் தூரியம், கடலின் நின்று துவைப்ப, | 12 |
|
நஞ்சும் அஞ்சும் விழி நாரியர், நாகர் வஞ்சி அஞ்சும் இடை மங்கையர், வானத்து அம் சொல் இன் சுவை அரம்பையர், ஆடி, பஞ்சமம் சிவணும் இன் இசை பாட, | 13 |
|
நஞ்சு கக்கி எரி கண்ணினர், நாமக் கஞ்சுகத்தர், கதை பற்றிய கையர், மஞ்சு உகக் குமுறு சொல்லினர், வல் வாய்க் கிஞ்சுகத்த கிரி ஒத்தனர், கிட்ட. | 14 |
|
கூய் உரைப்ப குல மால் வரையேனும், சாய் உரைப்ப அரியவாய தடந் தோள் - வாய் உரைத்த கலவைக் களி வாசம், வேய் உரைப்பது என, வந்து விளம்ப, | 15 |
|
வேத்திரத்தர், எரி வீசி விழிக்கும் நேத்திரத்தர், இறை நின்றுழி நில்லாக் காத்திரத்தர், மனை காவல் விரும்பும் சூத்திரத்தர், பதினாயிரர் சுற்ற, | 16 |
இராவணன் இராமனைக் காணலும், துன்னிமித்தம் தோன்றுதலும்
|
தோரணத்த மணி வாயில்மிசை, சூல் நீர் அணைத்த முகில் ஆம் என நின்றான், ஆரணத்தை அரியை, மறை தேடும் காரணத்தை, நிமிர் கண் எதிர் கண்டான். | 17 |
|
மடித்த வாயினன்; வயங்கு எரி வந்து பொடித்து இழிந்த விழியன்; அது போழ்தின், இடித்த வன் திசை; எரிந்தது நெஞ்சம்; துடித்த, கண்ணினொடு இடத் திரள் தோள்கள். | 18 |
|
ஆக, ராகவனை அவ்வழி கண்டான்; மாக ராக நிறை வாள் ஒளியோனை ஏக ராசியினின் எய்தி எதிர்க்கும் வேக ராகு என, வெம்பி வெகுண்டான். | 19 |
இராவணன் வினாவும், சாரனது விடையும்
|
'ஏனையோன் இவன் இராமன் எனத் தன் மேனியே உரைசெய்கின்றது; வேறு இச் சேனை வீரர் படையைத் தெரி' என்னத் தான் வினாவ, எதிர், சாரன் விளம்பும்: | 20 |
|
'இங்கு இவன், "படை இலங்கையர் மன்னன் தங்கை" என்றலும், முதிர்ந்த சலத்தால், அங்கை வாள்கொடு அவள் ஆகம் விளங்கும் கொங்கை, நாசி, செவி, கொய்து குறைத்தான். | 21 |
|
'அறக்கண் அல்லது ஒரு கண் இலன் ஆகி, நிறக் கருங் கடலுள் நேமியின் நின்று, துறக்கம் எய்தியவரும் துறவாத உறக்கம் என்பதனை ஓட முனிந்தான். | 22 |
|
'கை அவன் தொட அமைந்த கரத்தான், ஐய! வாலியொடு இவ் அண்டம் நடுங்கச் செய்த வன் செருவினின் திகழ்கின்றான் வெய்யவன் புதல்வன்; யாரினும் வெய்யான். | 23 |
|
'தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர் அந்தரத்தர் அமுது ஆர்கலி காண, மந்தரத்தினொடும் வாசுகியோடும், சுந்தரப் பெரிய தோள்கள் திரித்தான். | 24 |
|
'நடந்து நின்றவன், நகும் கதிர் முன்பு தொடர்ந்தவன்; உலகு, சுற்றும் எயிற்றின் இடந்து எழுந்தவனை ஒத்தவன்; வேலை கடந்தவன் சரிதை கண்டனை அன்றே? | 25 |
|
'நீலன், நின்றவன்; நெருப்பின் மகன்; திண் சூலமும் கயிறும் இன்மை துணிந்தும், ஆலம் உண்டவன் அடுந் திறல் மிக்கான்; "காலன்" என்பர், இவனைக் கருதாதார். | 26 |
|
'வேறாக நின்றான், நளன் என்னும் விலங்கல் அன்னான்; ஏறா, வருணன் வழி தந்திலன் என்று இராமன் சீறாத உள்ளத்து எழு சீற்றம் உகுத்த, செந் தீ ஆறாதமுன்னம், அகன் வேலையை ஆறு செய்தான். | 27 |
|
'முக் காலமும் மொய்ம் மதியால் முறையின் உணர்வான், புக்கு ஆலம் எழப் புணரிப் புலவோர் கலக்கும் அக் காலம் உள்ளான், கரடிக்கு அரசு ஆகி நின்றான், - இக் காலம் நின்றும் உலகு ஏழும் எடுக்க வல்லான். | 28 |
|
'சேனாபதிதன் அயலே, இருள் செய்த குன்றின் ஆனா மருங்கே, இரண்டு ஆடகக் குன்றின் நின்றார், ஏனோரில் இராமன் இலக்குவன் என்னும் ஈட்டார்; வானோர் தம் மருத்துவர் மைந்தர்; வலிக்கண் மிக்கார். | 29 |
|
'உவன்காண் குமுதன்; குமுதாக்கனும் ஊங்கு அவன்காண்; இவன்காண் கவயன்; கவயாக்கனும் ஈங்கு இவன்காண்; சிவன்காண் அயன்காண் எனும் தூதனைப் பெற்ற செல்வன் அவன்காண், நெடுங் கேசரி என்பவன், ஆற்றல் மிக்கான். | 30 |
|
'முரபன், நகு தோளவன், மூரி மடங்கல் என்னக் கர பல் நகம் அன்னவை மின் உகக் காந்துகின்றான்; வர பல் நகம்தன்னையும் வேரொடு வேண்டின் வாங்கும் சரபன் அவன்; இவன் சதவலி ஆய தக்கோன். | 31 |
|
'மூன்று கண் இலன் ஆயினும், மூன்று எயில் எரித்தோன் போன்று நின்றவன் பனசன்; இப் போர்க்கு எலாம் தானே ஏன்று நின்றவன் இடபன்; மற்று இவன் தனக்கு எதிரே தோன்றுகின்றவன் சுடேணன், மூதறிவொடு தொடர்ந்தோன். | 32 |
|
'வெதிர் கொள் குன்று எலாம் வேரொடும் வாங்கி, மேதினியை முதுகு நொய்து எனச் செய்தவன், கனலையும் முனிவோன், கதிரவன் மகற்கு இட மருங்கே நின்ற காளை, ததிமுகன்; அவன், சங்கன் என்று உரைக்கின்ற சிங்கம். | 33 |
|
'அண்ணல்! கேள்: இவர்க்கு உவமையும் அளவும் ஒன்று உளதோ? விண்ணின் மீனினைக் குணிப்பினும், வேலையுள் மீனை எண்ணி நோக்கினும், இக் கடல் மணலினை எல்லாம் கண்ணி நோக்கினும், கணக்கு இலை' என்றனன், காட்டி. | 34 |
இராவணன் வானரப் படையை இகழ்ந்து சிறு நகை செய்தல்
|
சினம் கொள் திண் திறல் அரக்கனும், சிறு நகை செய்தான், 'புனம் கொள் புன் தலைக் குரங்கினைப் புகழுதி போலாம்; வனங்களும் படர் வரைதொறும் திரிதரு மானின் இனங்களும் பல என் செயும், அரியினை?' என்றான். | 35 |
மிகைப் பாடல்கள்
|
'ஏறிட்ட கல்லு வீழும் இடம் அற, எண்கினாலே நாறு இட்டதென்ன ஒவ்வோர் ஓசனை நாலுபாலும் சூறிட்ட சேனை நாப்பண் தோன்றுவோன் இடும்பன் என்றே கூறிட்ட வயிரத் திண் தோள் கொடுந் தொழில் மடங்கல் போல்வான். | 27-1 |
|
'மற்று இவன் படையில் ஒன்னார் அன்றி, வானவர்களே வந்து உற்றனர் எனினும், பற்றி உயிர் உகப் பிசைந்திட்டு ஊத, கொற்றவன் அருளும் கொண்டோ ன்; குடாவடிக்கு இறைவன்; கூற்றம் பெற்றவன்; அடைந்தோர்தம்மை உயிர் எனப் பேணும் நீரான். | 27-2 |
|
'ஆங்கு அவன் எதிரே வேறு ஓர் ஆடகக் குன்றம் ஒன்றை வாங்கு நீர் மகரவேலை வந்து உடன் வளைந்ததென்ன, ஓங்கு மைம் முகத்தின் தானையுள் பொலிந்திடுவான், வெற்றி ஓங்கிய குவவுத் திண் தோள் வினதன் என்று உரைக்கும் வெய்யோன். | 27-3 |
|
'அன்னவன் தனக்கு வாமத்து ஐம்பது கோடி யூகம் தன்னை வந்து இடையில் சுற்ற, தட வரை என்ன நிற்பான், கொல் நவில் குலிசத்து அண்ணல் கொதித்து எதிர்கொடுக்குமேனும், வென்னிடக் குமைக்கும் வேகதெரிசி என்று உரைக்கும் வீரன். | 27-4 |
|
'பிளக்கும் மன்பதையும், நாகர் பிலனையும்; கிளக்கும் வேரோடு இளக்கும் இக் குடுமிக் குன்றத்து இனம் எலாம் பிடுங்கி, ஏந்தி, அளக்கர் கட்டவனும் மாட்டது அலக்கணுற்றிட விட்டு, ஆர்க்கும் துளக்கம் இல் மொய்ம்பர் சோதிமுகனும் துன்முகனும் என்பார். | 27-5 |
|
'குன்றொடு குணிக்கும் கொற்றக் குவவுத் தோள் குரக்குச் சேனை ஒன்று பத்து ஐந்தொடு ஆறு கோடி வந்து ஒருங்கு சுற்ற, மின் தொகுத்து அமைந்த போல விளக்கு எயிறு இலங்க, மேருச் சென்றென வந்து நிற்பான், திறல் கெழு தீர்க்கபாதன். | 27-6 |
|
'நூற்றிரண்டாய கோடி நோன் கவித் தாளை சுற்ற, காற்றின் மா மகற்குக் கீழ்பால் கன வரை என்ன நிற்பான், கூற்றின் மா மைந்தன்; கூற்றும் குலுக்கமுற்று அலக்கண் எய்தச் சீற்றமே சிந்தும் செங் கண் தெதிமுகன் என்னும் சீயம். | 27-7 |
|
'நாடில், இங்கு இவர் ஆதியாய் நவின்ற மூ-எழுவர் ஆடல் வெம் படைத் தலைவர்கள் ஆறுபத்து ஏழு கோடி வீரர்கள், குன்று எனக் குவவிய தோளாய்! கூடு சேனையும் எழுபது வெள்ளமாய்க் குறிப்பார். | 33-1 |
|
'அழிவு இலா வலி படைத்துள நம் படை அரக்கர் ஒழிவு இலாத பல் ஆயிர வெள்ளத்துக்கு உறை ஓர் துளியும் ஒவ்விடா எழுபது வெள்ளத்தின் தொகை சேர் எளிய புன் குரங்கு என் செயும்?' என்றனன், இகலோன். | 35-1 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
11. இராவணன் வானரத் தானை காண் படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - இராவணன், நின்றவன், நின்றான், என்னும், நிற்பான், தோள்கள், குன்று, இராமன்

