கம்ப இராமாயணம் - 35. இராவணன் தேர் ஏறு படலம்
எஞ்சிய சேனையைத் திரட்டுமாறு மகோதரனுக்கு இராவணன் கூறுதல்
|
பூதரம் அனைய மேனி, புகை நிறப் புருவச் செந் தீ, மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி, '"ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை யாதையும் எழுக!" என்று, ஆனை மணி முரசு எற்றுக!' என்றான் | 1 |
சேனைகள் திரளுதலும், இராவணன் பூசனை செய்து, தானம் முதலிய நல்குதலும்
|
எற்றின முரசினோடும் ஏழ்-இரு நூறு கோடி கொற்ற வாள் நிருதர் சேனை குழீஇயது; கொடித் திண் தேரும், சுற்றுறு துளைக் கைம் மாவும், துரகமும், பிறவும் தொக்க, வற்றிய வேலை என்ன, இலங்கை ஊர் வறளிற்று ஆக. | 2 |
|
ஈசனை, இமையா முக் கண் இறைவனை, இருமைக்கு ஏற்ற பூசனை முறையின் செய்து, திரு மறை புகன்ற தானம் வீசினன் இயற்றி, மற்றும் வேட்டன வேட்டோ ர்க்கு எல்லாம் ஆசு அற நல்கி, ஒல்காப் போர்த் தொழிற்கு அமைவது ஆனான் | 3 |
இராவணன் போர்க்கோலம் பூணுதல்
|
அருவி அஞ்சனக் குன்றிடை ஆயிரம் அருக்கர் உருவினோடும் வந்து உதித்தனர் ஆம் என ஒளிர, கருவி நான்முகன் வேள்வியில் படைத்ததும், கட்டிச் செருவில் இந்திரன் தந்த பொன் கவசமும், சேர்த்தான். | 4 |
|
வாள் வலம் பட, மந்தரம் சூழ்ந்த மாகணத்தின் தாள் வலந்து ஒளிர் தமனியக் கச்சொடும் சார்த்தி; கோள் வலந்தன குவிந்தன ஆம் எனும் கொள்கை மீள்வு இல் கிம்புரி மணிக் கடி சூத்திரம் வீக்கி; | 5 |
|
மறை விரித்தன்ன ஆடுறு மான மாக் கலுழன் சிறை விரித்தன்ன கொய்சகம் மருங்கு உறச் சேர்த்தி; முறை விரித்தன்ன முறுக்கிய கோசிக மருங்கில் பிறை விரித்தன்ன வெள் எயிற்று அரவமும் பிணித்து; | 6 |
|
மழைக் குலத்தொடு வான் உரும் ஏறு எலாம் வாரி இழை தொடுத்தன அனைய வாள் உடை மணி ஆர்த்து; முழைக் கிடந்த வல் அரி இனம் முழங்குவ போல்வ தழைக்கும் மின் ஒளிப் பொன் மலர்ச் சதங்கையும் சாத்தி; | 7 |
|
உரும் இடித்த போது அரவு உறு மறுக்கம், வான் உலகின் இரு நிலத்திடை, எவ் உலகத்திடை, யாரும் புரிதரப் படும் பொலங் கழல் இலங்குறப் பூட்டி; சரியுடைச் சுடர் சாய் வலம் சார்வுறச் சாத்தி; | 8 |
|
நால்-அஞ்சு ஆகிய கரங்களில் நனந் தலை அனந்தன் ஆலம் சார் மிடற்று அருங் கறை கிடந்தென, இலங்கும் கோலம் சார் நெடுங் கோதையும் புட்டிலும் கட்டி; தாலம் சார்ந்த மாசுணம் எனக் கங்கணம் தழுவ; | 9 |
|
கடல் கடைந்த மால் வரையினைச் சுற்றிய கயிற்றின் அடல் கடந்த தோள் அலங்கு போர் வலயங்கள் இலங்க; உடல் கடைந்த நாள் ஒளியவன் உதிர்ந்த பொன் கதிரின் சுடர் தயங்குற, குண்டலம் செவியிடைத் தூக்கி; | 10 |
|
உதயக் குன்றத்தோடு அத்தத்தின் உலாவுறு கதிரின் துதையும் குங்குமத் தோளொடு தோளிடைத் தொடர; புதை இருள் பகைக் குண்டலம் அனையவை பொலிய; சிதைவு இல் திங்களும் மீனும்போல், முத்துஇனம் திகழ; | 11 |
|
வேலைவாய் வந்து, வெய்யவர் அனைவரும் விடியும் காலை உற்றனர் ஆம் எனக் கதிர்க் குலம் காலும் மாலை பத்தின்மேல், மதியம் முன் நாளிடைப் பலவாய் ஏல முற்றிய அனைய முத்தக் குடை இமைப்ப; | 12 |
|
பகுத்த பல் வளக் குன்றினில் முழை அன்ன பகு வாய் வகுத்த வான் கடைக் கடை தொறும் வளை எயிற்று ஈட்டம், மிகுத்த நீல வான் மேகம் சூழ் விசும்பிடை, தசும்பூடு உகுத்த செக்கரின் பிறைக் குலம் முளைத்தன ஒக்க; | 13 |
|
ஒத்த தன்மையின் ஒளிர்வன, தரளத்தின் ஒக்கத் தத்துகின்றன, வீர பட்டத் தொகை தயங்க; முத்த ஓடைய முரண் திசை முழு மத யானை பத்து நெற்றியும் சுற்றிய பேர் எழில் படைக்க; | 14 |
|
புலவி மங்கையர் பூஞ் சிலம்பு அரற்று அடி போக்கி, தலைமை கண்ணினர்த் தாழ்கிலா மணி முடித் தலங்கள் உலகம் ஒன்றினை விளக்குறும் கதிரினை ஓட்டி, அலகு இல் எவ் உலகத்தினும் வயங்கு இருள் அகற்ற; 15 |
|
நாகம் நானிலம் நான்முகன் நாடு என நயந்த பாகம் மூன்றையும் வென்று கொண்டு, அமரர் முன் பணித்த வாகை மாலையும் மருங்கு உற, வரி வண்டொடு அளவி; தோகை அன்னவர் விழி தொடர் தும்பையும் சூட்டி; | 16 |
|
அகழும் வேலையை, காலத்தை, அளக்கர் நுண் மணலை, நிகழும் மீன்களை, விஞ்சையை, நினைப்பது என்? நின்ற இகழ்வு இல் பூதங்கள் இறப்பினும், இறுதிசெல்லாத் தன் புகழ் என, சரம் தொலைவு இலாத் தூணி பின் பூட்டி; | 17 |
|
'வருக, தேர்!' என, வந்தது-வையமும் வானும் உரக தேயமும் ஒருங்கு உடன் ஏறினும், உச்சிச் சொருகு பூ அன்ன சுமையது; துரகம் இன்று எனினும், நிருதர் கோமகன் நினைந்துழிச் செல்வது, ஓர் இமைப்பில். | 18 |
|
ஆயிரம் பரி அமுதொடு வந்தவும், அருக்கன் பாய் வயப் பசுங் குதிரையின் வழியவும், படர் நீர் வாய் மடுக்கும் மா வடவையின் வயிற்றின், வன் காற்றின் நாயகற்கு, வந்து உதித்தவும், பூண்டது நலத்தின். | 19 |
|
பாரில் செல்வது, விசும்பிடைச் செல்வது; பரந்த நீரில் செல்வது; நெருப்பிடைச் செல்வது; நிமிர்ந்த போரில் செல்வது; பொன் நெடு முகட்டிடை விரிஞ்சன் ஊரில் செல்வது; எவ் உலகினும் செல்வது, ஓர் இமைப்பின். | 20 |
|
எண் திசைப் பெருங் களிற்றிடை மணி என இசைக்கும் கண்டை ஆயிர கோடியின் தொகையது; கதிரோன் மண்டிலங்களை மேருவில் குவித்தென வயங்கும் அண்டம் விற்கும் நன் காசுஇனம் குயிற்றியது, அடங்க. | 21 |
|
முனைவர் வானவர் முதலினர், அண்டத்து முதல்வர் எனைவர் ஈந்தவும், இகலினில் இட்டவும், இயம்பா வினையின் வெய்யன படைக்கலம், வேலை என்று இசைக்கும் சுனையின் நுண் மணல் தொகையன சுமந்தது, தொக்க. | 22 |
|
கண்ணன் நேமியும், கண்ணுதல் கணிச்சியும், கமலத்து அண்ணல் குண்டிகைக் கலசமும், அழியினும், அழியாத் திண்மை சான்றது; தேவரும் உணர்வு அருஞ் செய்கை உண்மை ஆம் எனப் பெரியது, வென்றியின் உறையுள். | 23 |
|
அனைய தேரினை அருச்சனை வரன்முறை ஆற்றி, இனையர் என்பது ஓர் கணக்கு இலா மறையவர் எவர்க்கும் வினையின் நல் நிதி முதலிய அளப்ப அரும் வெறுக்கை நினையின் நீண்டது ஓர் பெருங் கொடை அருங் கடன் நேர்ந்தான் | 24 |
|
ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய இமையோர் தேறினார்களும் தியங்கினார், மயங்கினார், திகைத்தார்; வேறு தாம் செயும் வினை இலை, மெய்யின் ஐம் புலனும் ஆறினார்களும் அஞ்சினார், உலகு எலாம் அனுங்க. | 25 |
இராவணனின் சபதம்
|
'மன்றல் அம் குழல் சனகி தன் மலர்க் கையான் வயிறு கொன்று, அலந்தலைக் கொடு, நெடுந் துயரிடைக் குளித்தல்; அன்று இது என்றிடின், மயன் மகள் அத் தொழில் உறுதல்; இன்று, இரண்டின் ஒன்று ஆக்குவென், தலைப்படின்' என்றான் | 26 |
இராவணன் தோள் புடைத்து ஆர்த்து, வில் நாணைத் தெறித்தல்
|
பல களம் தலை மௌலியோடு இலங்கலின், பல் தோள் அலகு அளந்து அறியா நெடும் படைகளோடு அலங்க, விலகு அளம் தரு கடல் தரை விசும்பொடு வியப்ப, உலகு அளந்தவன் வளர்ந்தனன் ஆம் என உயர்ந்தான். | 27 |
|
விசும்பு விண்டு இரு கூறுற, கல் குலம் வெடிப்ப, பசும் புண் விண்டெனப் புவி பட, பகலவன் பசும் பொன் தசும்பின் நின்று இடை திரிந்திட, மதி தகை அமிழ்தின் அசும்பு சிந்தி நொந்து உலைவுற, தோள் புடைத்து ஆர்த்தான். | 28 |
|
'நணித்து வெஞ் சமம்' என்பது ஓர் உவகையின் நலத்தால், திணித் தடங் கிரி வெடித்து உக, சிலையை நாண் தெறித்தான்; மணிக் கொடுங் குழை வானவர், தானவர், மகளிர் துணுக்கம் எய்தினர், மங்கல நாண்களைத் தொட்டார். | 29 |
போர்க்களத்தில் இராவணன் தோன்றுதல்
|
சுரிக்கும் மண்டலம் தூங்கு நீர்ச் சுரிப்பு உற, வீங்க, இரைக்கும் பல் உயிர் யாவையும் நடுக்கமுற்று இரிய, 'பரித்திலன் புவி, படர் சுடர் மணித் தலை பலவும் விரித்து எழுந்தனன், அனந்தன்மீது' என்பது ஓர் மெய்யான். | 30 |
|
தோன்றினான் வந்து-சுரர்களோடு அசுரரே தொடங்கி மூன்று நாட்டினும் உள்ளவர் யாவரும் முடிய, 'ஊன்றினான் செரு' என்று உயிர் உமிழ்தர, உதிரம் கான்று, நாட்டங்கள் வட அனற்கு இரு மடி கனல. | 31 |
உலகில் தோன்றிய நிலைகுலைவைச் சுக்கிரீவன் முதலியோர் கண்டு, துணுக்கமுற்று எழுதல்
|
உலகில் தோன்றிய மறுக்கமும், இமைப்பிலர் உலைவும், மலையும் வானமும் வையமும் நடுக்குறும் மலைவும், அலை கொள் வேலைகள் அஞ்சின சலிக்கின்ற அயர்வும், தலைவனே முதல் தண்டல் இலோர் எலாம் கண்டார். | 32 |
|
'பீறிற்றாம் அண்டம்!' என்பது ஓர் ஆகுலம் பிறக்க, வேறிட்டு ஓர் பெருங் கம்பலை பம்பி மேல் வீங்க, 'மாறிப் பல் பொருள் வகுக்குறும் காலத்து மறுக்கம் ஏறிற்று; உற்றுளது என்னைகொலோ?' என எழுந்தார். | 33 |
இராவணன் வருகையை அவர்கள் உணர்தல்
|
கடல்கள் யாவையும், கல் மலைக் குலங்களும், காரும், திடல் கொள் மேருவும், விசும்பிடைச் செல்வன சிவண, அடல் கொள் சேனையும், அரக்கனும், தேரும், வந்து ஆர்க்கும் கடல் கொள் பேர் ஒலிக் கம்பலை என்பதும் கண்டார். | 34 |
இராவணனது வருகையை வீடணன் இராமனுக்குக் கூறுதல்
|
'எழுந்து வந்தனன் இராவணன்; இராக்கதத் தானைக் கொழுந்து முந்தியது உற்றது; கொற்றவ! குலுங்குற்று அழுந்துகின்றது, நம் பலம்; அமரரும் அஞ்சி, விழுந்து சிந்தினர்' என்றனன், வீடணன், விரைவான். | 35 |
மிகைப் பாடல்கள்
|
ஏழ்-இரு நூறு கோடி எனும் படைத் தலைவரோடும் ஆழியின் வளைந்த சேனை ஐ-இருநூறு வெள்ளம் ஊழியின் எழுந்த ஓதத்து ஒலித்தலும், அரக்கர் வேந்தன், 'வாள் அமர் முடிப்பென் இன்றே' என மணித் தவிசு நீத்தான். | 2-1 |
|
உரை செயற்கு அருந் தவத்தினுக்கு உவந்து, உமை கேள்வன் அருள உற்றது, அங்கு அவன் மழுக் குலிசமோடு ஆழி முரிய, மற்றவை முனை மடித்து, ஒன்றினும் முடியா விரவு வச்சிரக் கவசத்தை மேற்படப் புனைந்தான். | 4-1 |
|
அண்ட கோடிகள் எவற்றினும் தன் அரசு உரிமை கண்டு போய் வரும் காட்சியின், கண்ணுதற் பரமன், பண்டு அவன் செய்யும் தவத்தினின் பரிந்து, இனிது அளிக்கக் கொண்ட வானகத் தேரது; குதிரையைக் குறிக்கின், | 18-1 |
|
ஐம் முகம் பயின்று இரட்டி, அங்கு அடல் புயன் நால்-ஐந் தும், ஐந் நான்கு எனும் கரத்தொடும், உமையவள் ஒழிய இம்மை இவ் உரு இயைந்து, எழில் கயிலையோடு ஈசன் வெம்மை ஆடு அமர்க்கு எழுந்தென, தேர்மிசை விரைந்தான். | 27-1 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
35. இராவணன் தேர் ஏறு படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - செல்வது, இராவணன், என்பது, விரித்தன்ன, முதலிய, பெருங்

