கம்ப இராமாயணம் - 36. இராமன் தேர் ஏறு படலம்
இராமன் போர்க்கோலம் பூண்டு எழுதல்
|
தொழும் கையொடு, வாய் குழறி, மெய்ம் முறை துளங்கி, விழுந்து கவி சேனை இடு பூசல் மிக, விண்ணோர் அழுந்து பணிமீது அமளி, 'அஞ்சல்' என, அந் நாள், எழுந்தபடியே கடிது எழுந்தனன், இராமன். | 1 |
|
கடக் களிறு எனத் தகைய கண்ணன், ஒரு காலன் விடக் கயிறு எனப் பிறழும் வாள் வலன் விசித்தான், 'மடக்கொடி துயர்க்கும், நெடு வானின் உறைவோர்தம் இடர்க் கடலினுக்கும், முடிவு இன்று' என இசைத்தான். | 2 |
|
தன் அக வசத்து உலகு தங்க, ஒரு தன்னின் பின்னக அசத்த பொருள் இல்லை; பெரியோனை மன்ன கவ சத்து உற வரிந்தது என என்கோ? இன்ன கவசத்தையும் ஒர் ஈசன் எனலாமால். | 3 |
|
புட்டிலொடு கோதைகள், புழுங்கி எரி கூற்றின் அட்டில் எனலாய மலர் அங்கையின் அடக்கிக் கட்டி, உலகின் பொருள் எனக் கரை இல் வாளி வட்டில், புறம் வைத்து, அயல் வயங்குற வரிந்தான். | 4 |
இராமனுக்குத் தேர் அனுப்புமாறு, சிவபெருமான் தேவருக்கு கட்டளையிடல்
|
'மூண்ட செரு இன்று அளவில் முற்றும்; இனி, வெற்றி ஆண் தகையது; உண்மை; இனி அச்சம் அகல்வுற்றீர், பூண்ட மணி ஆழி வய மா நிமிர் பொலந் தேர் ஈண்ட விடுவீர், அமரில்' என்று, அரன் இசைத்தான். | 5 |
இந்திரன் கூற மாதலி தேரைக் கொணர்தல்
|
தேவர் அது கேட்டு, 'இது செயற்கு உரியது' என்றார்; ஏவல் புரி இந்திரனும், 'அற்று' என இசைத்தான்; 'மூஉலகும் முந்தும் ஒர் கணத்தின்மிசை முற்றிக் கோவில் புரிகேன்; பொரு இல் தேர் கொணர்தி' என்றான். | 6 |
மாதலி கொணர்ந்த தேரின் சிறப்பு
|
மாதலி கொணர்ந்தனன், மகோததி வளாவும் பூதலம் எழுந்து படர் தன்மைய பொலந் தேர்; சீத மதி மண்டலமும் ஏனை உளவும் திண் பாதம் என நின்றது, படர்ந்தது விசும்பில். | 7 |
|
குலக் கிரிகள் ஏழின் வலி கொண்டு உயர் கொடிஞ்சும், அலைக்கும் உயர் பாரின் வலி ஆழியினின் அச்சும், கலக்கு அற வகுத்தது; கதத்து அரவம் எட்டின் வலக் கயிறு கட்டியது; முட்டியது வானை. | 8 |
|
ஆண்டினொடு நாள், இருது, திங்கள், இவை என்று மீண்டனவும் மேலனவும் விட்டு, விரி தட்டில் பூண்டு உளது; தாரகை மணிப் பொரு இல் கோவை நீண்ட புனை தாரினது; நின்றுளது குன்றின். | 9 |
|
மாதிரம் அனைத்தையும் மணிச் சுவர்கள் ஆகக் கோது அற வகுத்தது; மழைக் குழுவை எல்லாம் மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப் பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா! | 10 |
|
மரத்தொடு தொடுத்த துகில் யாவும் உள வாரித் தரத்தொடு தொடுத்த கொடி தங்கியது; சங்கக் கரத்தொடு தொடுத்த கடல் மீது நிமிர் காலத்து, உரத்தொடு கடுத்த கதழ் ஓதை அதன் ஓதை. | 11 |
|
பண்டு அரிதன் உந்தி அயன் வந்த பழ முந்தைப் புண்டரிக மொட்டு அனைய மொட்டினது; பூதம் உண்டன வயிற்றிடை ஒடுக்கி உமிழ்கிற்போன், அண்டச மணிச் சயனம் ஒப்பது, அகலத்தின். | 12 |
|
வேதம் ஒரு நாலும், நிறை வேள்விகளும், வெவ் வேறு ஓதம் அவை ஏழும், மலை ஏழும், உலகு ஏழும், பூதம் அவை ஐந்தும், எரி மூன்றும், நனி பொய் தீர் மா தவமும், ஆவுதியும், ஐம் புலனும், மற்றும், | 13 |
|
அருங் கரணம் ஐந்து, சுடர் ஐந்து, திசை நாலும், ஒருங்கு அரணம் மூன்றும், உழல் வாயு ஒரு பத்தும், பெரும் பகலும், நீள் இரவும், என்று இவை பிணிக்கும் பொரும் பரிகள் ஆக நனி பூண்டது, பொலந் தேர். | 14 |
மாதலி இராமனிடம் தேர் கொணர்ந்து அதன் சிறப்பைச் செப்புதல்
|
வந்ததனை வானவர் வணங்கி, 'வலியோய்! நீ எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்; தந்தருள்வை வென்றி' என நின்று, தகை மென் பூச் சிந்தினர்கள்; மாதலி கடாவி, நன் சென்றான். | 15 |
|
'வினைப் பகை விசைக் கொடு விசும்பு உருவி, மான மனத்தின் விசை பெற்றுளது வந்தது' என, வானொடு அனைத்து உலகமும் தொழ, அடைந்தது, அமலன்பால்; நினைப்பும் இடை பிற்பட, நிமிர்ந்தது நெடுந் தேர். | 16 |
தேரினை வியந்த இராமன், தேர் கொணர்ந்தது குறித்து மாதலியை வினாவுதல்
|
'அலரி தனி ஆழி புனை தேர் இது எனில், அன்றால்; உலகின் முடிவில் பெரிய ஊழ் ஒளி இது அன்றால்; நிலைகொள் நெடு மேரு கிரி அன்று; நெடிதுஅம்மா; தலைவர் ஒரு மூவர் தனி மானம் இதுதானோ? | 17 |
|
'என்னை இது நம்மை இடை எய்தல்?' என எண்ணா, மன்னவர்தம் மன்னன் மகன், மாதலியை, 'வந்தாய், பொன்னின் ஒளிர் தேர் இது கொடு, ஆர் புகல?' என்றான்; அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்: | 18 |
மாதலியின் மறுமொழி
|
'முப் புரம் எரித்தவனும், நான்முகனும், முன்நாள், அப் பகல் இயற்றி உளது; ஆயிரம் அருக்கர்க்கு ஒப்பு உடையது; ஊழி திரி நாளும் உலைவு இல்லா இப் பொரு இல் தேர் வருவது இந்திரனது;-எந்தாய்! | 19 |
|
'அண்டம் இது போல்வன அளப்பு இல அடுக்கிக் கொண்டு பெயரும்; குறுகும்; நீளும்; அவை கோளுற்று உண்டவன் வயிற்றினையும் ஒக்கும், உவமிக்கின்; புண்டரிக! நின் சரம் எனக் கடிது போமால். | 20 |
|
'கண்ணும் மனமும் கடிய காலும் இவை கண்டால், உண்ணும் விசையால்; உணர்வு பின் படர ஓடும்; விண்ணும் நிலனும் என விசேடம் இலது; அஃதே, எண்ணும் நெடு நீரினும், நெருப்பிடையும்-எந்தாய்! | 21 |
|
'நீரும் உளவே, அவை ஒர் ஏழு? நிமிர்கிற்கும் பாரும் உளவே, அதின் இரட்டி? அவை பண்பின் பேரும் ஒரு காலை, ஒரு காலும் இடை பேராத் தேரும் உளதே, இது அலால்?-உலகு செய்தோய்! | 22 |
|
'தேவரும், முனித் தலைவரும், சிவனும், மேல்நாள், மூஉலகு அளித்த அவனும், முதல்வ! முன் நின்று ஏவினர்; சுரர்க்கு இறைவன் ஈந்துள இது' என்றான், மாவின் மனம் ஒப்ப உணர் மாதலி, வலித்தான். | 23 |
இராமன் அரக்கர் மாயையோ என ஐயமுற, மாதலி தேரில் பூட்டிய குதிரைகள் உண்மை என்பதை விளக்குதல்
|
ஐயன் இது கேட்டு, 'இகல் அரக்கர் அகல் மாயச் செய்கைகொல்?' எனச் சிறிது சிந்தையில் நினைந்தான்; மெய் அவன் உரைத்தது என வேண்டி, இடை பூண்ட மொய் உளை வயப் பரி மொழிந்த, முது வேதம். | 24 |
இராமன் ஐயம் நீங்கி, சாரதியின் பெயரைக் கூறு என, மாதலி தன் பெயரை வெளியிடுதல்
|
'இல்லை இனி, ஐயம்' என எண்ணிய இராமன், நல்லவனை, 'நீ உனது நாமம் நவில்க!' என்ன, 'வல் இதனை ஊர்வது ஒரு மாதலி எனப் பேர் சொல்லுவர்' எனத் தொழுது, நெஞ்சினொடு சொன்னான். | 25 |
மாருதியையும் இளவலையும் நோக்கி, 'உம் கருத்து யாது?' என, அவர்களும், 'இதில் ஐயம் இல்லை' என்றல்
|
மாருதியை நோக்கி, இள வாள் அரியை நோக்கி, 'நீர் கருதுகின்றதை நிகழ்த்தும்' என, நின்றான்; ஆரியனை வணங்கி, அவர், 'ஐயம் இலை, ஐயா! தேர் இது புரந்தரனது' என்றனர், தெளிந்தார். | 26 |
மாதலி கொணர்ந்த தேரில் இராமன் ஏறுதல்
|
விழுந்து புரள் தீவினை நிலத்தொடு வெதும்ப, தொழும் தகைய நல்வினை களிப்பினொடு துள்ள, அழுந்து துயரத்து அமரர் அந்தணர் கை முந்துற்று எழுந்து தலை ஏற, இனிது ஏறினன் - இராமன். | 27 |
மிகைப் பாடல்கள்
|
இத் தகையன் ஆகி, 'இகல் செய்து, இவனை இன்னே கொத்து முடி கொய்வென்' என, நின்று எதிர் குறிப்ப, தம்தம் முறுவல் செயல் தவிர்ந்தது என, வானில், சித்தர்கள், முனித் தலைவர், சிந்தை மகிழ்வுற்றார். | 4-1 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
36. இராமன் தேர் ஏறு படலம் - Kambar Books - கம்பர் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - இராமன், நோக்கி, நின்று, என்றான், இசைத்தான், தொடுத்த

