நற்றிணை - 376. குறிஞ்சி

முறஞ்செவி யானைத் தடக் கையின் தடைஇ இறைஞ்சிய குரல பைந் தாட் செந் தினை, வரையோன் வண்மை போல, பல உடன் கிளையோடு உண்ணும் வளைவாய்ப் பாசினம்! குல்லை, குளவி, கூதளம், குவளை, |
5 |
இல்லமொடு மிடைந்த ஈர்ந் தண் கண்ணியன், சுற்று அமை வில்லன், செயலைத் தோன்றும் நல் தார் மார்பன், காண்குறின், சிறிய நன்கு அவற்கு அறிய உரைமின்; பிற்றை அணங்கும் அணங்கும் போலும்? அணங்கி, |
10 |
வறும் புனம் காவல் விடாமை அறிந்தனிர்அல்லிரோ, அறன் இல் யாயே? |
முறம்போலுஞ் செவியையுடைய யானையினது வளைந்த கைபோல வளைந்து தலைசாய்ந்த கதிர்களையும் பசிய அடித்தண்டினையும் உடைய செவ்விய தினையை; வரையாது கொடுப்பவனது கைவண்மைக்கு ஈண்டும் பரிசிலர்போலப் பலவாகிய சுற்றத்தொடு நெருங்கிவந்து உண்ணாநின்ற வளைந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டமே!; தலைவனை முன்பு முயங்கி அவனை நீங்கிய பின்னர் அறநெறியிலே நில்லாத எம் அன்னை எம்மை வருத்தி; காவலின்றி அழிகின்ற தினைப்புனத்தினை யாங் காவல்செய்யவிடாது இல்வயிற் செறித்திருப்பதனை நீயிர் அறிந்தீரன்றே; இதன்பின்பு வெறியெடுத்தலாலே முருகவேளும் எம்மை வருத்தும் போலும்; ஆதலின் குல்லை மலைப்பச்சை கூதாளி குவளை தேற்றா என்பனவற்றின் மலராற் புனைந்த மிகக் குளிர்ந்த பூமாலையை யுடையவனும்; வரிந்து கட்டிய அமைந்த வில்லையுடையவனுமாகி அசோகமரத்தின்கீழ் வந்துநிற்கும் நல்ல மாலையணிந்த மார்புடைய அவனை நீயிர் காண்பீராயின்; இங்கு நிகழ்ந்த எல்லாவற்றினையும் கூறாது விடினும் சிறிய சிலவற்றையேனும் அறிந்து கொள்ளுமாறு நன்றாக அவனுக்கு உரையுங்கோள்!
தோழி, கிளிமேல் வைத்துச் சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது. - கபிலர்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 374 | 375 | 376 | 377 | 378 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - பசிய, அவனை, எம்மை, நீயிர், வளைந்த, போலும், குவளை, சிறிய, அணங்கும், குல்லை