நற்றிணை - 206. குறிஞ்சி
'துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சி, தோடு அலைக் கொண்டன ஏனல் என்று, துறு கல் மீமிசைக் குறுவன குழீஇ, செவ் வாய்ப் பாசினம் கவரும்' என்று, அவ் வாய்த் தட்டையும் புடைத்தனை, கவணையும் தொடுக்க' என |
5 |
எந்தை வந்து உரைத்தனனாக, அன்னையும், 'நல் நாள் வேங்கையும் மலர்கமா, இனி' என என் முகம் நோக்கினள்; எவன்கொல்?- தோழி!- செல்வாள் என்றுகொல்? 'செறிப்பல்' என்றுகொல்? கல் கெழு நாடன் கேண்மை |
10 |
அறிந்தனள்கொல்? அஃது அறிகலென் யானே! |
தோழீ! பஞ்சு நுனிபோன்ற தலையையுடைய அப்பொழுது ஈன்ற தினைக் கதிர்கள் எல்லாம்; பால் நிறைந்து முற்றித் தலைசாய்த்து மேலேயுள்ள தோடுகள் அலைதல் கொண்டன. அவற்றை நோக்கி இனி உண்ணத்தகுமென்று கருதி; அக்கதிர்களைக் கொய்து போக வேண்டி; துறுகல்மீது சிவந்த வாயையுடைய பசிய கிளியின் கூட்டம் கூடி; இனிக் கவர்ந்து கொண்டே போய்விடுமாகலின் நீ ஆங்கே சென்று கிளியோப்புந் தட்டையைப் புடையிலுள்ள குற்றியிலேயே புடைத்து ஒலியெழுப்பினையாகிக் கவண் கல்லும் வீசுக என; எந்தை வந்து கூறினான்; அப்பொழுது எம் அன்னையும் இனி நல்ல நாளை அறிவுறுத்தும் வேங்கையும் மலர்க என்று கூறி என் முகத்தைக் குறிப்பாக நோக்கினள் கண்டாய்; என்னைத்தான் இவள் தினைப்புனம் காக்கச்செல்வாளென்றோ? அல்லது தன்னுள்ளத்தே தான் நின்னை (தலைவியை) இல்வயிற் செறிப்பலென எண்ணியோ? வேறு ஏதேனுங் கருதிய துண்டோ!; மலை பொருந்திய நாடன்பால் வைத்த நம்முடைய கேண்மையை அவ்வன்னைதான் அறிந்துகொண்டனளோ? யான் அஃது அறிகலேன் அவளது எண்ணம் இன்னதென்று நான் அறிந்திலேன்; நீ அறிந்தனையாயிற் கூறிக்காண்!
தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது. - ஐயூர் முடவனார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 204 | 205 | 206 | 207 | 208 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்று, தோழி, என்றுகொல், அஃது, நோக்கினள், அப்பொழுது, அன்னையும், கொண்டன, எந்தை, வந்து, பால், வேங்கையும்