சோழர் வரலாறு - மூன்றாம் குலோத்துங்கன்
பிற மடங்கள் : ‘மாவிரதிகள்’ எனப்பட்ட காளாமுகரது ‘கோமடம்’ என்பது திருவானைக்காவில் இருந்தது. ‘சதுரானன பண்டித மடம்’ என்பது திருவொற்றியூரில் இருந்தது. ‘வாரணாசி பிக்ஷா மடம்’ என்பது பந்தணைநல்லூரில் இருந்தது. ‘வாரணாசிலக்ஷாத்யாய இராவாளரது கொல்லா மடம்’ என்பது திருப்பாசூரில் இருந்தது. இவை அனைத்தும் சைவ ஆசாரிய பீடங்களாகக் குலோத்துங்கன் ஆட்சியில் திகழ்ந்தன.[44]
அரசன் சைவத் திருப்பணிகள் : குலோத்துங்கன் செய்துள்ள கோவில் திருப்பணிகள் பல ஆகும்; அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இவை:-(1) இவன் தனது 26ஆம் ஆட்சி ஆண்டில் உத்தரமேரூர்ப் பிடாரியார்க்கும் ஏழு மாதர் இடங்கட்கும் பத்துவேலி நிலம் தேவதானமாக விடுத்துள்ளான்.[45] (2) அதே ஆண்டில் திருஒற்றியூர்ச் சிவபெருமானுக்குத் திரு அணிகலன்களும் திருவாடு தண்டும் இருமுறை அளித்துளன்; (3) மதுரை ஆலவாய்ப் பெருமானுக்குத் தன் பெயரால் திருவீதியும் திருநாளும் அமைத்தான்; தான் தென்னாட்டாரிடம் திறைகொண்ட பொன்னால் அக்கோவிலை வேய்ந்தான்; இறையிலி நிலங்கள் பல அளித்து, மகிழ்ந்தான்[46]: (1) திரிபுவனத்தில் ‘கம்பஹரேசுவரர்’ என்ற ‘திரிபுவனேசுவரர்’ கோவிலைக் கட்டி முடித்தான். இஃது இவனது ஆட்சியின் சிறந்த நினைவுக்குறியாக விளங்குகின்றது. இக்கோவிலின் திருமதில்கள் முழுவதும் அழகிய சிற்ப வேலைகளாலும் ஒவியங்களாலும் நிரப்பப்பட்டுள்ளன. இங்குள்ள இராமாயண வரலாறு உணர்த்தும் சிற்பங்கள் பார்க்கத் தக்கவை. (4) குலோத்துங்கன் தில்லை நடராசப் பெருமானது திருமுக மண்டபத்தையும் அம்மன் கோபுரத்தையும் கோவில் திருச்சுற்றையும் கட்டுவித்தான்;[47] ‘முடித்தலை கொண்ட பெருமாள் திருவீதி’ என்று மேற்குத்தெரு ஒன்றை எடுப்பித்தான். (5) திருவாரூரில் உள்ள சபாமண்டபமும் பெரிய கோபுரமும் இவன் முயற்சியால் இயன்றவை. இவன் கச்சி ஏகம்பர் கோவிலையும் புதுப்பித்தான்.[48]
வைணவத் திருப்பணிகள் : குலோத்துங்கன் தன் முன்னோரைப்போலவே சமய நோக்கில் விரிந்த மனப்பான்மை உடையவன். இவன், வேலூரில் உள்ள திருமால் கோவிலுக்கு மூன்று சிற்றூர்களை ஒன்றாக்கிக் ‘குலோத்துங்க சோழநல்லூர்’ எனத்தன் பெயரிட்டுத் தேவதானமாக அளித்தான்; அக்கோவிற்குக் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ எனப்பெயரிட்டான்.[49]இவன் இசைவு பெற்றுத் திருக்கோவலூர் மலையமான்கள் செய்த பெருமாள் திருப்பணிகள் பலவாகும். இங்ஙனமே பிறரும் செய்துள்ளனர்.
சமணத் திருப்பணி : இவனது ஆட்சியில் மண்டியங் கிழான் குலோத்துங்கசோழக் காடுவெட்டி என்பவன் ஒர் உயர்அலுவலாளன் ஆவன். இவன் சமணப் பற்றுடையவன் ஆவன். இவன் வேண்டுகோளின்படி குலோத்துங்கன், சைனக் கோவில் ஒன்றுக்கு 20 வேலி நிலம் பள்ளிச் சந்தமாக விட்டான், சமண குருவான ‘சந்திரகிரி தேவர்’ என்பார்க்குக் கொட்டையூர் ஆசிரியப்பட்டம் கொடுத் தருளி, அம்பையிலே 20 வேலி நிலம் தானமாக அளித்தான்.[50] இப்பெருந்தகையாளன் இவற்றுடன் நிற்கவில்லை; திருநறுங்கொண்டைச் சமணப் பெரும் பள்ளிக்கு வேண்டிய நிபந்தங்களுக்கும் அமணப் பிடாரர்க்கும் பத்துவேலி நில வருவாயை இறையிலி செய்துள்ளான்; ‘இந்நிலத்துக்கு அமணப்பிடாரர் சொன்னவாறு செய்வது; இவர் வசமே இருக்க’ எனத் திருவாணையும் பிறப்பித்தான்; அப்பெரும் பள்ளியிற் கோவில் கொண்டிருந்த அப்பாண்டார் வைகாசித் திருநாளுடனே தன் பெயராலேயும் (‘இராசாக்கள் நாயன் திருநாள்’ என்பது) ஒரு திருநாள் நடத்த ஏற்பாடு செய்து, அவ்விழாவிற்காகத் தனியே நிலம் அளித்துள்ளான்.[51]
சுருங்கக்கூறின், இவனது ஆட்சியில் எல்லாச்சமய நிலையங்களும் சிறப்புப்பெற்றன எனலாம்; கோவில்கள் செம்மையாக மேற்பார்வை இடப்பட்டன; விழாக்கள் நன்முறையில் நடைபெற்றன; கோவில் கண்காணிப்பு வேலை செவ்வனே நடந்தன; குற்றவாளிகள் அவ்வப்போது தண்டிக்கப்பெற்றனர்.[52]
அரசன் சிறப்புப் பெயர்கள் : இவன் பரகேசரி குலோத்துங்க சோழ தேவன் எனப்பட்டான். ‘திரிபுவன சக்கரவர்த்தி என்ற பெயரும் இருந்தது. இவற்றுடன் இவன் வீ ரராசேந்திரன், குமார குலோத்துங்கன், முடிவழங்கு சோழன், திரிபுவன வீரதேவன், முடித்தலை கொணட பெருமான், உலகுடைய நாயனார், உலகுடைய பெருமான், உலகுய்ய வந்த நாயனார், இராசாக்கள் தம்பிரான், இராசாக்கள் நாயன்,தனிநாயகன், தியாக விநோதன் முதலியன பெற்றிருந்தான். இவை அனைத்தும் இவனுடைய எண்ணிறந்த கல்வெட்டுகளில் பயின்றுள்ளன. இவற்றுடன் இவனுக்குக் கோனேரின்மை கொண்டான்’ என்றதொரு சிறப்புப் பெயரும் இருந்தது. ‘கோனேரின்மை கொண்டான் வீரராசேந்திரன் திரிபுவன வீரதேவன்’ என்பது இவனது கல்வெட்டு.[53]
- ↑ 44. M.E. R. 357 of 1911, 72 of 1931, III. of 1930.
- ↑ 45. S.I. IV. 849.
- ↑ 46. 163, 166 of Pudukkottai Ins
- ↑ 47. A.R.E. 1908, II. 64, 65.
- ↑ 48. 163, 166 of Pudukkottai Ins.
- ↑ 49. M.E.R. 114 of 1919.
- ↑ 50. S.I.I. Vol. 4, No.366
- ↑ 51. S.I.I. Vol. 7, 1011-1014
- ↑ 52. 80 of 1925 of 1929.
- ↑ 53. இதனுடன் வீரராசேந்திரன் கல்வெட்டுத் தொடக்கத்தைக் குழப்பலாகாது.அது ‘வீரசோழ கரிகால சோழ வீரராசேந்திர இராசகேசரி பன்மரான கோனேரின்மை கொண்டான்’ என வரும்.
Vide M.E.R. 51 of 1931.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் குலோத்துங்கன் - History of Chola - சோழர் வரலாறு - இவன், என்பது, குலோத்துங்கன், கோவில், இவனது, நிலம், திருப்பணிகள், இவற்றுடன், மடம்’, ஆட்சியில்