சோழர் வரலாறு - மூன்றாம் குலோத்துங்கன்
பாண்டி நாட்டுப் போர் : இவ்வரசன் கல்வெட்டுகளில் தென்னாட்டுப் போரே சிறந்து காணப்படுகிறது. இவன் (1) மதுரை கொண்டது, (2) பாண்டியன் முடித்தலை கொண்டது, (3) ஈழநாடு கொண்டது, (4) கருவூர் கொண்டது, (5) கச்சி கொண்டது, (6) மதுரையில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்துகொண்டமை ஆகிய செயல்கள் குறிக்கப்பட்டுள்ளன. ஆதலின், இவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
மதுரை கொண்டது : அண்ணன் பல்லவராயனிடம் தோற்றோடிய குலசேகர பாண்டியன் இறந்தான். அப்பொழுது மதுரையை ஆண்டு வந்தவன் வீரபாண்டி யன். குலசேகரன் மகனான விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோத்துங்கனை அடைக்கலம் புகுந்தான்.[2] இரண்டாம் இராசாதிராசனால் துரத்தப்பெற்ற குலசேகரன் மகனை அவனுக்குப் பின் வந்த குலோத்துங்கன் ஏன் சேர்த்துக் கொண்டான்? ஒன்று, வீரபாண்டியன் சோழனுக்கு எதிராக, இலங்கை அரசனுடன் நட்புக் கொண்டிருத்தல் வேண்டும்; அல்லது சோழனுக்கு மாறாக வேறு துறையில் நடந்திருத்தல் வேண்டும்; அல்லது வீரபாண்டியன் பாண்டிய அரசு பெறத் தகாதவனாக இருத்தல் வேண்டும். காரணம் யாதாயினும் ஆகுக. குலோத்துங்கற்கும் வீரபாண்டியற் கும் உதவியாக வந்த சிங்களவர் மூக்கறுப்புண்டு இறந்தவர் போக எஞ்சியவர் கடல் வழியே இலங்கை நோக்கி ஓடினர். இங்ஙனம் முதற்போர் கு லாத்துங்கற்கு வெற்றி அளித்தது. சோழன் மதுரையும் அரசும் கொண்டு வெற்றித் துரண் நாட்டினன், மதுரையும் அரசும் விக்கிரம பாண்டியற்கு அருளி மீண்டனன்.[3]
முடித்தலை கொண்டது : தோற்று ஒடிய வீரபாண்டியன் சேர நாட்டை அடைந்தான் சேரன் உதவியைப் பெற்று இழந்த நாட்டை மீட்க முயன்றான்; சிதறிக்கிடந்த தன் பழைய சேனையையும் திரட்டிச் சேரப் படையுடன் பாண்டி நாட்டிற்குள் நுழைந்தான்; இதனை அறிந்த குலோத்துங்கன் உருத்தெழுந்து தன் பெரும் படையுடன் சென்று நெட்டுரிற் பகைவனைச் சந்தித்தான். இருதிறப் படைகட்கும் போர் நடந்தது. முடிவென்ன? வீரபாண்டியன் தோற்றான்; அவன் படைவீரர் நாலாப் பக்கங்களிலும் ஒடலாயினர். அவனது முடி சோழன் கைப்பட்டது. அவன் கோப்பெருந்தேவியும் சிறைப்பட்டாள்.குலோத்துங்கன் அவனைத் தன் வேளத்திற்கு[4] அனுப்பிவிட்டான். வீரபாண்டியன் பொறுக்க இயலாத அவமானத்துடன் சேரநாட்டை அடைந்தான். சேரன் தான் பாண்டியனுக்கு உதவிபுரிந்த தவற்றை உணர்ந்து, வீரபாண்டியனுடன் வந்து குலோத்துங்கனைச் சரண் அடைந்தான். பெருந்தகையான குலோத்துங்கன் அவ்விருவரையும் அரசர்க்குரிய முறையில் வரவேற்றுச் சிறப்புச் செய்தான்;[5] வீரபாண்டியற்குப் பாண்டிய நாட்டில் ஒரு பகுதியை ஆள உரிமை அளித்து முடியும் ஈந்தான். வீரபாண்டியன் தான் ஈன்ற மைந்தற்குப் பரிதி குலபதி (சோழர்குலத் தலைவன்) என்ற குலோத்துங்கன் விருதுப் பெயரினை இட்டுச் சோழன் முன் நிறுத்த, குலோத்துங்கன் மகிழ்ந்து அவற்குச் சிறப்புப் பல செய்தான்.[6] இதுகாறும் கூறிய செய்திகள் இரண்டாம் பாண்டிப்போர் ஆகும். பாண்டியனது முடித்தலை கொண்ட களம் ஆதலின் மதுரை, ‘முடித்தலை கொண்ட சோழபுரம் எனப்பட்டது. இவ்விரு போர்களும் இவன் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகட்குள் நடந்தனவாகும். இது, இவனது இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்றில் (திருவக்கரையில்) இவை குறிக்கப்பட்டிருந்ததால் என்க. இச்செயல்களையே இவன்மீது பாடப்பெற்ற ‘குலோத்துங்கன் கோவை'யும் புகழ்ந்து பாராட்டியுள்ளது.
வேள் நாட்டுப் போர்: மேற் கூறப்பெற்ற போர்கட்குப் பிறகு வேள் நாட்டை ஆண்ட வீரகேரளன் என்பவன் குலோத்துங்கனைப் பகைத்துக் கொண்டான். அதனால் இருவர்க்கும் போர் நிகழ வேண்டியதாயிற்று. அப்போரில் வீரகேரளன் தன் கைவிரல்கள் தறிக்கப் பட்டுத் தோற்றான்; வேறு வழியின்றிச் சோழனிடமே அடைக்கலம் புகுந்தான். அடைந்தார்க்கு எளியனான அண்ணல் குலோத்துங்கன் அவனை வரவேற்றுத் தன்னுடன் இருந்து உண்ணுமாறு உபசரித்து, அவனது நாட்டை அவனுக்கே அளித்து மகிழ்ந்தான்.[7]
ஈழம் கொண்டது : இராசாதிராசன் காலம் முதலே சோழர் செல்வாக்கை ஒழிக்க முயன்று முடியாது தவித்த முதலாம் பராக்கிரமபாகு, குலோத்துங்கன் காலத்திலும் ஈழத்தரசனாக இருந்தான். இவன் முன் போலவே மதுரையிற் பூசல் விளைக்க முனைந்தான். இதனை உணர்ந்த குலோத்துங்கன் கி.பி. 1888 அல்லது 1889 இல் படை ஒன்றை ஈழத்திற்கு ஏவினான். அப்படை சென்று சிங்களரைப் புறங்காட்டி ஒடச் செய்து மீண்டது. இக்குலோத்துங்கன் ‘ஈழவேந்தன் முடிமீது தன் அடியினைச் சூடியவன்’ என்று திருமாணிக்குழி கல்வெட்டுக்[8] கூறலால், ஈழத்தரசன் இவனைப் பேரரசனாக ஒப்புக்கொண்டு அடங்கி விட்டான் என்று கோடல் தகும்.
- ↑ 2. S.I.I, Vol.3, No.86.
- ↑ 3. 94 of 1918; S.I.I. Vol.3, p.212
- ↑ 4. ‘வேளம்’ என்பது அரண்மனையில் அரசரிடமும் அரசியரிடமும் இருந்த பணியாளர் படை. அரசியர்க்குப் பணிப்பெண்கள் படை’ உண்டு.
- ↑ 5. 254 of 1925, 42 of 1906.
- ↑ 6. S.I.I. Vol, 3, No.88
- ↑ 7. V.R.R. Dikshitar's ‘Kulothunga Chola III, p.45
- ↑ 8. S.I.I. Vol.7, No.797 (170 of 1902)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் குலோத்துங்கன் - History of Chola - சோழர் வரலாறு - குலோத்துங்கன், கொண்டது, வீரபாண்டியன், நாட்டை, போர், சோழன், அடைந்தான், வேண்டும், அல்லது, இரண்டாம், இவன், மதுரை, பாண்டியன், முடித்தலை