சோழர் வரலாறு - மூன்றாம் குலோத்துங்கன்
சோழப் பெருநாடு : மூன்றாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டுகள் வடக்கே நெல்லூர், கடப்பைக் கோட்டங்களிற் காண்கின்றன; தெற்கே திருநெல்வேலி முடியக் கிடைக்கின்றன; மேற்கே ஹேமாவதி, அவனி, எதுரூர் முதலிய மைசூர்ப் பகுதிகளிலும் கொங்கு மண்டலத்திலும் இருக்கின்றன. ஆதலின் வடக்கே கடப்பை முதல் தெற்கே கன்னி முனை வரையும், மேற்கே மைசூர் முதல் கீழ்க்கடல் வரையும் இவனது ஆட்சி பரவி இருந்ததென்பதை அறியலாம்.[14]
இவனது ஆட்சிக்குட்பட்ட மண்டலங்களுட் சிறந்தது சோழ மண்டலமே ஆகும். அது 9 வள நாடுகளாகவும் 79 நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ மண்டலம் ‘பெரியநாடு’ எனப் பெயர் பெற்றிருந்தது[15].
கோ நகரங்கள் : விசயாலயன் வழிவந்த சோழவேந்தர் காலங்களில் ஆயிரத்தளி, தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம்,இராசராசபுரம் என்பன அரசர் வசிப்பதற்கேற்ற கோ நகரங்களாக இருந்தன. ஆயிரத்தளி-நந்திபுரம், பழையாறை, முடிகொண்ட சோழபுரம் என்னும் பெயர்களைக் கொண்டது. மூன்றாம் குலோத்துங்கன் இறுதிக் காலத்தில் அல்லது அவனுக்கு அடுத்துவந்த மூன்றாம் இராசராசன் காலத்தின் தொடக்கத்தில் சோணாட்டை வென்ற சடாவர்மன் சுந்தர பாண்டியன் இந்த ஆயிரத்தளி நகரை அழித்து வீர அபிஷேகமும் விசய அபிஷேகமும் (குலோத்துங்கன் மதுரையிற் செய்தாற் போல) செய்து கொண்டான் என்பதிலிருந்து, மூன்றாம் குலோத்துங்கன் கோநகரமாக இருந்தது ஆயிரத்தளியே ஆகும் என்பது தெரிகிறது. இப்பிற்காலச் சோழர் காலத்திற் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது நாகப்பட்டினமாகும்.
அரசியல் : மூன்றாம் குலோத்துங்கனது நீண்ட அரசாட்சியில் நேர்மை மிக்கிருந்தது. அரசியல் அலுவலா ளராகப் பலர் இருந்தனர். அவருள் களப்பாளராயர், தொண்டைமான், நுளம்பாதிராசர், விழுப்பரையர், நந்தியராசர், வயிராதிராசர், வாணாதிராசர், காடவராயர், கொங்கராயர், சித்தரசர். விழிஞத்தரையர் என்போர் குறிப்பிடத் தக்கவராவர். இவர்கள் நடு அரசாங்கத்திற்கு வந்த வழக்குளை விசாரித்து வேண்டியன செய்தனர்[16]; சிற்றூர் அவைகள் செய்து வந்த வேலைகளைக் கண்காணித்து வேண்டியன செய்தனர்[17]. எனவே, நடு அரசாங்கம் இச் சோழன் காலத்தில் செம்மையாகப் பணி ஆற்றிவந்ததை நன்கறியலாம். இவனது 38-ஆம் ஆட்சி ஆண்டில் தஞ்சாவூரில் நிலம் அளக்கும் வேலை நடைபெற்றது[18]. அரசனுக்கு அந்தரங்கச் செயலாளராக இருந்து நாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிவித்தும், அரசன் ஆணைபெற்றுச் செயலாற்றலை மேற்கொண்டும் இருந்தவருள் இராசநாராயண மூவேந்தவேளான், மீனவன் மூவேந்த வேளான், நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் என்பவர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இங்கனம் திறமை பெற்ற அரசியல் உயர் அலுவலாளர் பலர் இருந்தமையால் பேரரசு நிலை தளராது நன்னிலையில் இருந்தது.
சிற்றரசர் :
மலையமான்கள் : இக் குலோத்துங்கன் காலத்தில் முன் பிருந்தவாறே சிற்றரசர் அனைவரும் இருந்துவந்தனர். இவருள் நெடுங்காலமாக வந்த மரபினர் சேதிராயர் என்ற மலையமான்கள் ஆவர். இவர்கள் சேதிராச மரபினர் என்று தம்மைக் கூறிக்கொண்டதால், ‘சேதிய ராயர்’ எனப்பட்டனர். இவர்கள் நடு மாகாணங்களில் இருந்த (சேதி நாட்டிலிருந்த) ஹெய் ஹெயர் மரபினர் என்று கூறிக்கொள்ள முயன்று இங்ஙணம் ‘சேதியராயர்’ எனக்கொண்டனர் போலும்! அந்தக் காலம், ஒவ்வொரு சிற்றரச மரபினரும் புராணத்துள் கூறப்பட்டுள்ள ஒரு மரபைச் சேர்ந்தவராகக் கூறிக்கொண்ட காலமாகும்[19]. இவர்கள் மலைநாட்டை ஆண்டவராதலின் ‘மலையர், மலையரையர், மலையகுலரயர், மலையமான்கள்’ எனப்பட்டனர்; கோவலூரைத் தலைநகராகக் கொண்டமையின் ‘கோவ்லராயர்’ எனப்பட்டனர். முதல் இராசராசனது தாய் இம்மலையர் மரபினளே ஆவள்[20], இம்மரபினர் திருக்கோவலூர், கிளியூர், ஆடையூர், ஆகியவற்றைத் தலைநகரங்களாகக் கொண்டு ஆண்டு வந்தனர். இவர்கள் சோழப் பேரரசன் ஒருவன் காலத்தில் இருவராகவும் மூவராகவும் இருத்தல் காண - இத்தலை நகரங்களைக் காண-இம்மரபினர் மலைநாட்டை இரண்டு மூன்று பிரிவுகளாகக் கொண்டு ஆண்டு வந்தனர் எனக் கோடல் பொருந்தும். நமது மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த இம்மரபரசருள் ‘மலையமான் பெரிய இராசராசச் சேதியராயன் ஒருவன்; ‘மலையமான் நரசிம்மவர்மன் கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்’ மற்றொருவன். இவருள்முதல்வற்குச்சேனை மீகாமன் என்ற சிறப்புப் பெயர் இருந்தது[21]. இதனால் சோழர் படைக்குச் சிறப்புடைத் தலைவனாக இவன் இருந்தான் என்பது தெரிகிறது. பின்னவன், இரண்டாம் ராசாதிராசன் காலத்தில் பெருமான் நம்பிப் பல்லவ ராயனுடன் பாண்டிய நாட்டுப் போரில் ஈடுபட்டு ஈழப்படையை வென்றவன் ஆவன். இவ்விருவரன்றி, ‘மலையமான் சூரியன் நீறேற்றான் இராசராச கோவல ராயன்’ என்பவனும் மலை நாட்டுச் சிற்றரசனாக இருந்தனன் என்பது கல்வெட்டுகளால் தெரிகிறது
- ↑ 14. K.A.N. Sastry’s ‘Cholas II, p. 155.
- ↑ 15. M.E.R. 521 of 1912
- ↑ 16. 83 of 1926
- ↑ 17. 113 of 1928
- ↑ 18. 188 of 1908
- ↑ 19. K.A.N. Sastry's ‘Cholas,’ Vol.2. p.164
- ↑ 20. S.I.I.Vol. 7, No.863
- ↑ 21. Ibid No.890
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் குலோத்துங்கன் - History of Chola - சோழர் வரலாறு - காலத்தில், மூன்றாம், இவர்கள், குலோத்துங்கன், வந்த, ‘மலையமான், மரபினர், எனப்பட்டனர், தெரிகிறது, இவனது, ஆயிரத்தளி, என்பது, அரசியல்