சோழர் வரலாறு - மூன்றாம் குலோத்துங்கன்
கருவூர் கொண்டது : கருவூர் சேர நாட்டின் தலைநகராக ஒரு காலத்தில் இருந்தது; கொங்கு மண்டலத்தின் கோநகரமாகவும் இருந்தது. இதனைத் தலைநகராகக் கொண்டுசேரர் மரபினர் சோழர்க்கு அடங்கி ஆண்டுவந்தனர். அவருள், குலோத்துங்கன் காலத்தில் அரசனாக இருந்தவன் தன் மனம் போனவாறு சோழனை மதியாது நாட்டை ஆண்டு வந்தான். அதனால், குலோத்துங்கன் அவனை அடக்கப் படையெடுத்தான். போர் மிகவும் கடுமையாக நடந்தது; சேரன் படுதோல்வி அடைந்தான். போரில் தோற்ற சேரன் குலோத்துங்கனைச் சரணடைந்தான். இதனால், கருவூர் சோழன் கைப்பட்டது. இவன் அந்நகருள் நுழைந்து சோழ கேரளன்’ என்று மன்னர் தொழ வெற்றிமுடி சூடி விளங்கினான். அன்றுமுதல் குலோத்துங்கன் ‘சோழகேரளன்’ எனப்பட்டான்; கொங்குமண்டலம் ‘சோழ கேரள மண்டலம்’[9] எனப்பட்டது.ஆயினும், பெருந்தன்மை பெற்ற குலோத்துங்கன், தன்னைச் சரண்புக்க சேரனுக்கே நாடாளும் உரிமை அளித்து மீண்டான். அதுமுதல் சேரன் பேரரசற்கு அடங்கித் தன் நாட்டை அமைதியுற ஆண்டுவந்தான். இங்ஙனம் அவனுக்குக் கருவூரில் முடிவழங்கினமையின், அந்நகரம் ‘முடிவழங்கு சோழபுரம்’ எனப் பெயர் பெற்றது.[10] இக் கொங்குப் போர் இவனது 16-ஆம் ஆண்டிலிருந்து புறப்பட்ட கல்வெட்டுகளிற் குறிப்பிடப்படலால், இப்போர் ஏறத்தாழக் கி.பி.194-இல் நடந்ததாதல் வேண்டும் எனக் கொள்ளலாம்.
கச்சி கொண்டது : கருவூரும் கச்சியும் கொண்டருளிய என்பது இவனது கல்வெட்டுகளிற் பயின்று வரலால், கருவூர் வெற்றிக்குப் பிறகு அடுத்து நடந்த செயல் கச்சி கொண்டதாகும் எனக் கோடல் தவறாகாது. இச்செயலைப் பற்றிய விவரம் உணரக்கூடவில்லை. மகாராசப்பாடி ஏழாயிரம் ஆண்ட தெலுங்கு சோடனான ‘நல்லசித்தன் தேவன்’ என்பவன் கச்சியிலிருந்து தான் திறைபெற்று வந்ததாகக் கூறிக்கொள்கிறான்.[11] அதனால், அவன், குலோத்துங்கன் தென்னாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த போது, கச்சியைத் திடீரெனத் தாக்கிக் கைப்பற்றி இருக்கலாம். உடனே குலோத்துங்கன் வடக்கு நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றி இருக்கலாம். குலோத்துங்கன் இங்ஙனம் கி.பி.196-இல் கச்சியைக் கைப்பற்றியதோடு நல்ல சித்தனது தனிப்போக்கையும் அடக்கி ஒடுக்கி இருக்க வேண்டும். என்னை? சித்தரசன் குலோத்துங்கன் ஆட்சி முழுவதிலும் அவனுக்கு அடங்கிய சிற்றரசனாகவே இருந்து வந்தனன் ஆதலின் என்க.
மூன்றாம் பாண்டிப் போர் : கி.பி. 1202-க்குச் சிறிது முன் குலோத்துங்கன் மதுரையில் வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டதாக இவனுடைய 26ஆம் ஆண்டுக் கல்வெட்டுக் குறிக்கிறது. இதன் விவரம் குடுமியான் மலைக்கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது:
குலோத்துங்கனால் சிறப்புப்பெற்ற விக்கிரம பாண்டியன் மகனான ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டி நாட்டைக் கி.பி. 1190 முதல் ஆண்டு வந்தான். இவன் சில ஆண்டுகளுக்குள் செருக்குற்றுச் சோழற்கு அடங்காமல் (தன் மனம் போனவாறு) நாட்டை ஆண்டுவந்தான் குலோத்துங்கற்கு மாறான செயல்களையும் செய்து வந்தான். அவனுடைய மெய்ப்புகழ்கள் அவன் வெறுப்புற்ற மனப்பான்மையை நன்கு உணர்த்துகின்றன.
குலசேகரன் செய்து வந்தது ரோகச்செயல்கள் சோழற்கு எட்டின. அவன் அரும்பாடுபட்டு அமைதி நிலவச் செய்த பாண்டிநாடு குலசேகரன் ஆட்சியால் பாழாவதை அறிந்து சீற்றங்கொண்டான் அவனைத் துரத்திவிட்டுப் பாண்டிய நாட்டைச் சோழர் அரசியற் பார்வையில் வைத்தலே நேர்மையானது எனத் துணிந்தான். உடனே பெரும் படையுடன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான். உடனே மட்டியூர், கழிக்கோட்டை என்ற இடங்களிற் கடும்போர் நடந்தது. அதிகம் அறைவதேன்? குலசேகரன் படை அழிந்தது. அவன் காடுகளிற் புக்கு ஒளித்தான். உடனே சோழப்படை மதுரையைக் கைப்பற்றியது: அரண்மனையுள் முடிசூட்டு மண்டபம் முதலியவற்றை இடித்து அழித்தது; அவ்விடங்களைக் கழுதை ஏர் கொண்டு உழுது வரகு விதைத்துப் பாழ் படுத்திவிட்டது. இங்ஙனம் மதுரை பாழானது. குலோத்துங்கன் சீற்றமும் தணிந்தது. இப்பெருமகன் மதுரையில் சோழ பாண்டியன்’ என்ற பட்டமும், வீரமாமுடியும் தரித்து வெற்றித்துரண் நாட்டினான்; இங்ஙனம் பாண்டியனையும் சேரனையும் வென்றமையால் திரிபுவன வீரன் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றான். இப்போருக்குப் பின்னர்ப் பாண்டி மண்டலம் சோழபாண்டிமண்டலம்’ எனப்பெயர்பெற்றது:சோழரது நேர் ஆட்சியில் அடங்கி விட்டது. மதுரை ‘முடித்தலைகொண்ட சோழபுரம்’ எனப்பட்டது; மதுரை அத்தாணி மண்டபம் சேர பாண்டியர் தம்பிரான் எனப் பெயர் பெற்றது. இங்ஙனம் பெரு வெற்றி பெற்ற குலோத்துங்கன் மதுரையில் விசய அபிடேகமும் வீர அபிடேகமும் செய்துகொண்டான் என்று அவன் புதுக்கோட்டைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.[12] குலோத்துங்கன் கொண்ட இப்பெரு வெற்றி கி.பி. 1201ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில் இவன் ‘திரிபுவன வீரதேவன் எனக் கூறப்பட்டிருத்தலின் என்க.
வட நாட்டுப் போர் : குலோத்துங்கன் ஏழு கலிங்கமும் கொல்லாபுரமும் உரங்கை, (ஓரங்கல்) பொருதோன்’ என்று இவனது கோவை கூறுகிறது. இவனைப் பற்றிய புதுக் கோட்டைக் கல்வெட்டுகள் இரண்டும் இச்செய்தியைக் குறிக்கின்றன. ஆயின், அவ்விடங்களில் இவனது, கல்வெட்டு ஒன்றும் இல்லை. மேலும், காகதீயப் பேரரசனான கணபதி கி.பி.1799-இல் பட்டம் பெற்று, மேலைச் சாளுக்கியரை அடக்கிப் பெரு நாட்டை ஆண்டு வந்தான். அக்காலத்தில் சோழன் வடநாடு சென்று வெற்றி கொண்டான் என்பதற்கு வடநாட்டில் ஒரு கல்வெட்டும் சான்றில்லை. ஆதலின், இது புகழ்ச்சி மொழி எனக் கோடலே நன்று.[13] கம்பர் பெருமான் இக் குலோத்துங்கன் அவைப் புலவர் என்பது அறிஞர் ஒப்புக் கொண்டதே ஆகும். அவர் இச் சோழனிடம் மனம் வேறுபட்டவராய் ஓரங்கல்லைக் கோநகராகக் கொண்டு பெருநாட்டை ஆண்ட காகதீய முதற் பிரதாபருத்திரன் (கி.பி. 162-1197) என்பவனிடம் சென்று தங்கியிருந்தார் என்பது உண்மை ஆயின் கம்பர் சோழற்குப் பகைவனான காகதீய அரசனிடம் சென்றிருந்தார் எனக் கோடலே பொருத்தமாகும். இது பொருத்தமாயின், சோழனுக்கும் பிரதாபருத்திரற்கும் பகைமை அல்லது பேரரசர் என்ற முறையில் பொறாமை இருந்திருத்தல் வேண்டுமன்றோ? பகைமை ஆயின், புதுக்கோட்டைக் கல்வெட்டுகளிற் குறித்த குலோத்துங்கன் செய்த வடநாட்டுப் போர்கள் உண்மையெனக் கோடவில் தவறில்லை அன்றோ? கோவையும் கல்வெட்டுகளும் சேர்ந்து கூறும் வடநாட்டுப் போர் ‘நடந்திராது’ என்று ஒதுக்கி விடுவதற்கில்லை. உண்மை மேலும் ஆராயற்பால தேயாம்.
- ↑ 9. M.E.R. 75 of 1925; 126, 127, of 1900.
- ↑ 10. S.I.I. Vol.3, No.23. 3. 483 of 1906.
- ↑ 11. 483 of 1906.
- ↑ 12. 163, 166 of Pudukkota Inscriptions.
இங்ஙனமே பிற்காலத்தில் வீரபாண்டியன் என்பவன் சோணாட்டைக் கைப்பற்றித் தில்லையில் இவ்விரு அபிடேகங்களையும் செய்து கொண்டான். சுந்தரபாண்டியன்பிற்காலத்தில் இக் குலோத்துங்கன் செய்தவை அனைத்தும் சோணாட்டில் செய்தான். - ↑ 13. K.A.N. Sastry’s ‘Cholas’ Vol.2, p.141-42
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் குலோத்துங்கன் - History of Chola - சோழர் வரலாறு - குலோத்துங்கன், போர், எனக், அவன், இங்ஙனம், உடனே, கருவூர், இவனது, வந்தான், நாட்டை, மதுரையில், மதுரை, வெற்றி, ஆயின், சென்று, மனம், கல்வெட்டுகளிற், ஆண்டு, என்பது, இவன், சேரன்