சோழர் வரலாறு - மூன்றாம் குலோத்துங்கன்
கங்கர் : இம் மரபினர் கங்கபாடியை ஆண்ட சிற்றரசர் இவர்கள் சங்க கால முதல் கங்கபாடியை ஆண்டு வந்தவர்; பல்லவர் காலத்தில் அவர் உதவிபெற்றுக்கதம்பருடன் அடிக்கடி போரிட்டவர்; பிற்காலச் சோழர் ஆட்சியில் சோழர்க்கு அடங்கிய சிற்றரசராக வாழ்ந்துவந்தனர். இவர் தம் தலைநகரம் கோலார் எனப்படும் ‘குவலாளபுரம்’ என்பது, இந்நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்க்குட்பட்ட கங்கபாடியை ஆண்டவருள் ‘பங்களநாட்டுப்பிருதிவி கங்கன் அழகிய சோழன்’ ஒருவன்; ‘உத்தம சோழ கங்கன்’ ஒருவன்; மற்றொருவன் மராபர ணன் சீயகங்கன் என்பவன்[33]. இவன் 33 ஆண்டுகள் அரசாண்டவன். இவன் மனைவி பெயர் அரிய பிள்ளை[34] என்பது. இவன் கல்வெட்டுகள் எல்லாம் தமிழில் உள்ளன. இவன் தமிழ்நாட்டுக் கோவில்கட்கே நிபந்தங்கள் விடுத்துள்ளான்; தமிழ்ப் புலவர்களையே ஆதரித் துள்ளான். பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல் செய்வித்தவன் இவனே. கங்க நாட்டு அரசனான இவன் கன்னடம் அல்லது துளுவத்தைப் போற்றி வளர்க்காமல் தமிழை வளர்த்ததும் தமிழிலே பெயர்கள் கொண்ட மையும் தமிழ்நாட்டுத் தலங்கட்கே நிபந்தங்கள் விடுத்ததும் பாராட்டற்பாலனவே ஆகும்.இத் தமிழ்ப்பற்று, அருங்கலை விநோதனான மூன்றாம் குலோத்துங்கன் தொடர்பால் உண்டாயிற்று எனின், மிகையாமோ?
சீயகங்கனைத் தவிர அம்மரபைச் சேர்ந்த பிறருள் பிருதிவிகங்கன் அழகிய சோழன் என்பவன் ஒருவன்.இவன் பங்களநாடு ஆண்டவன். இவன் திருவண்ணாமலைக் கோவிலுக்குப் பல நிபந்தங்கள் விடுத்துள்ளான்[35], உத்தம சோழ கங்கன் என்ற செல்வகங்கன் மற்றொருவன். இவன் மனைவி வட ஆர்க்காடு கோட்டத்தில் அகத்தியமலையில் திருநாவுக்கரசதேவர் படிமம் செய்துவைத்தாள்[36].
தெலுங்குச் சோடர்: இவர்கள் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு ஆகியவற்றின் வட பகுதியையும் சித்துர், நெல்லூர், கடப்பை முதலிய கோட்டங்களையும் சிறு நாடுகளாகப் பகுத்து ஆண்டவர். இவர்கள் தங்களைக் ‘கரிகாலன் மரபினர்’ என்று கூறிக்கொண்டனர்; பொத்தப்பியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர் ‘பொத்தப்பிச் சோடர்’ எனப் பட்டனர். தெல்லுரைத் தலைநகராகக் கொண்டு ‘சோடா சித்தரசர்’ என்பார் ஆண்டுவந்தனர். இம் மரபினர் அனைவரும் காளத்தி முதலிய இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் மிகப்பலவாக விடுத்துள்ளனர். இவருள் குலோத்துங்கன் காலத்தவர் - மதுராந்தக பொத்தப்பிச் சோழன், நல்ல சித்தரசன், சோடன் திருக்காளத்தி தேவன் என்பவராவர்[37].
இதுகாறும் கூறப்பெற்றவர் குறிப்பிடத்தக்க பெரிய சிற்றரசர் ஆவர். இவர்கள் சிற்றரசராகவும், அமைச்சர், படைத் தலைவர், நாடு பார்ப்போர், நாடு காப்போர், இறை பெறுவோர் என்ற பலதிற உயர் அலுவலாளராகவும் இருந்தவர் ஆவர். இவர் ஒவ்வொருவரிடமும் தனித்தனிப் படைஉண்டு. அப்படை பேரரசன் வேண்டும் போது உறுதுணை செய்ய விடப்படும். இச்சிற்றரசர் அன்றிப் பல்வேறு சிற்றூர்களையும் பேரூர்களையும் ஆண்டவர் பலராவர்; அவர்கள் பல அறப்பணிகள் செய்துள்ள மையால் கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளனர்.
சிற்றரசர் ஒப்பந்தம் : இத்தலைவர்கள் அடிக்கடி தங்கட்குள் கூடிப் பேரரசனுக்கு உண்மையுள்ளவர்களாக இருப்போம் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் உண்டு. இருவர்மூவராகக் கூடித் தமக்குள் ஒப்பந்தம் செய்தலும் உண்டு. குலோத்துங்கன் 27-ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1025-இல்) சிற்றரசர் பதின்மர்கூடிப் பேரரசர்க்கு மாறாக ஒர் ஒப்பந்தம் செய்து கொண்டனர். அது பின்வருமாறு[38]:-
‘இவ்வனைவோரும் எங்களில் இசைந்து கல்வெட்டின் படியாவது நாங்கள் ஒரு காலமும் இராச காரியத்துக்குத் தப்பாமே நின்று, சேதிராயர் அருளிச் செய்தபடியே பணி செய்யக் கடவோமாகவும். இப்படிச் செய்யுமிடத்து, மகதை நாடாள்வானான வாணகோவரையனும் குலோத்துங்க சோழர் வானகோவரையனும் இவர்கள் பக்கம் ஆளாதல்ஒலையாதல்போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் அறுதி செய்தல் செய்யக் கடவோம் அல்லாதோம் ஆகவும். இவர்களும் இவர்கள் அனுதாபத்துள்ளார் பக்கல் நின்றும் ஆளாதல்-ஒலையாதல் வந்துண்டாகில் தேவர் பூர் பாதத்திலே போகக் காட்டக் கடவோம் ஆகவும். எங்களில் ஒருவன் வேறுபடநின்று இராசகாரியத்துக்கும் சேதிராயர் காரியத்துக்கும் எங்கள் காரியத்துக்கும் விரோதமாகச் சில காரியம் செய்ததுண்டாகில். தேவரும் நாங்களும் இவனை. அறச் செய்யக்கடவோமாகவும். எங்களிலே ஒருவரை வாணகோவரையாராதல் இராசராசக் காடவராயனாதல் வினை செய்தார் உண்டாகில், படையும் குதிரையும் முதலுக்கு நேராகக் கொண்டு குத்தக் கடவோமாகவும். இப்படிச் செய்திலேமாகில் வாணகோவரையருக்குக் கடைகாக்கும் பறையருக்குச் செருப்பு எடுக்கிறோம்.”
இவ் வொப்பத்தத்தில் வாணகோவரையனும் காடவராயனும் பேரரசற்கு மாறுபட்டவர் என்பது அறியக் கிடத்தல் காண்க.
இங்ஙனமே தனிப்பட்ட சிற்றரசர் இருவர்-மூவர் கூடிச் செய்துகொண்ட ஒப்பந்தங்களும் உண்டு. அவற்றுள் ஒன்று குலோத்துங்கனது 15-ஆம் ஆண்டிற் செய்துகொண்டது. அதன் விவரம் காண்க[39] :
- ↑ 33. M.E.R. 1 16 of 1992
- ↑ 34. S.I.I. Vol.3, No.62
- ↑ 35. 546, 558 of 1902
- ↑ 36. 559 of 1906
- ↑ 37. K.A.N. Sastry's Chołas's. Voi, 2, pp. 134-140
- ↑ 38. S.I. Vol.8, No. 106
- ↑ 39. S.I.I. Vol. 7, No. 119.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மூன்றாம் குலோத்துங்கன் - History of Chola - சோழர் வரலாறு - இவன், இவர்கள், சிற்றரசர், கொண்டு, ஒப்பந்தம், நிபந்தங்கள், ஒருவன், என்பது, உண்டு, ஆண்டவர், ஆர்க்காடு, தலைநகராகக், குலோத்துங்கன், கங்கபாடியை