சோழர் வரலாறு - முதற் குலோத்துங்கன்
உடன் பிறந்தார் : இவனுக்குக் குந்தவ்வை, மதுராந்தகி என்ற உடன் பிறந்த பெண்மணிகள் இருவர் இருந்தனர் என்பது சிதம்பரம் கல்வெட்டுகளால் தெரிகிறது.[63]
மக்கள் : குலோத்துங்கற்கும் மதுராந்தகிக்கும் பிறந்த ஆண்மக்கள் எழுவர், பெண்மக்கள் இருவர். ஆடவருள் இராசராசன், வீர சோழன், சோழகங்கன், விக்கிரம சோழன் ஆகியவரே கல்வெட்டுகளில் இடம் பெற்றுள் ளனர். இவருள் மூத்தவன் சோழகங்கன்; அவற்கு இளையவன் இராசராசன், அவற்கு இளையவன் வீரசோழன்; நான்காம் மகன் விக்கிரம சோழன்[64]. இவருள் குலோத்துங்கன் உள்ளம் கவர்ந்த மகன் விக்கிரம சோழனே ஆவன். இவனே தந்தைக்குப் பின் அரசு கட்டில் ஏறியவன். குலோத்துங்கன் வீரசோழனையும் மிக்க அன்புடன் நேசித்து வந்தான்; அவனை இருமுறை வேங்கியை ஆளுமாறு அனுப்பினான்[65].
குலோத்துங்கன் பெண்மக்களில் மூவர் பெயர்களே கல்வெட்டுகளில் அறியக் கிடக்கின்றன. அவை இராசசுந்தரி, சூரியவல்லி, அம்மங்கை என்பன. இப் பெண்மணிகளுள் இராசசுந்தரி கலிங்க அரசனான இராசராசனை மணந்தவள். சூரியவல்லி இலங்கை இளவரசன் ஒருவனை மணந்தவள். பிள்ளையார் அம்மங்கை ஆழ்வார் என்பவளைப் பற்றிய குறிப்புத் தெரியவில்லை; பெயர் மட்டுமே தெரிகிறது[66].
இராசகேசரி முதற் குலோத்துங்கன் கி.பி. 1022 வரை சோழப் பேரரசை (52 ஆண்டுகள்) அரசாண்டான் என்பது அறிந்து இன்புறத்தக்கது[67]. இவனுக்குப்பின் விக்கிரமசோழன் சோழப் பேரரசன் ஆனான். இக்குலோத்துங்கன் கல்வெட்டுகள், திருமன்னி வளர’, ‘திருமன்னி விளங்க’, ’பூமேல் அரிவையும்', ‘பூமருவிய திருமடந்தையும், புகழ் மாதுவிளங்க', ‘புகழ் சூழ்ந்த புணரி’, ‘பூமேவி வளர முதலிய தொடக்கங்களை உடையன.
- ↑ 63. 117,119 of 1888
- ↑ 64. Ep.Ind.Vol. 6.p.335; S.S.I.I. Vol. 3.p. 179, K.A.N. Sastry's ‘Cholas’, Vol 2, p.52.
- ↑ 65. Ep. Ind. 5, No.10
- ↑ 66. S.I.I. Vol.4, No.226
- ↑ 67. K.A.N Sastry’s ‘Cholas’.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதற் குலோத்துங்கன் - History of Chola - சோழர் வரலாறு - குலோத்துங்கன், விக்கிரம, சோழன்