சோழர் வரலாறு - முதற் குலோத்துங்கன்
அரசியல் : குலோத்துங்கன் சிறந்த அரசியல் நிபுணன், குடிகள் உள்ளத்தைத் தன்பால் ஈர்த்தலே தன் கடமை என்பதை நன்குணர்ந்தவன்; ஆதலின் முதலில் ஒவ் வொருவரும் அரசர்க்கு ஆண்டுதோறும் செலுத்திவந்த சங்கம் நீக்கினான். இச்சுங்கம் ஏற்றுமதிப் பொருள்கட்கு இடப்படும் தீர்வையாகும். இச் செயலால் மக்கள் இவனைச் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ எனப் பாராட்டினர்; ‘தவிராத சுங்கம் தவிர்த்தோன்’ எனப் பரணி பாடிய சயங்கொண்டார் இவனை வாயாரப் புகழ்ந்தனர். இச்சுங்கம் தவிர்த்தமை சோழநாட்டளவே இருந்தது போலும்! கி.பி.194-இல் வெளிப்பட்ட கல்வெட்டு ஒன்று, ‘சோழ நாட்டில் சுங்கம் வசூலிப்பதில்லை’ என்பதைக் சுட்டுகிறது[55]. தஞ்சாவூரைச் சேர்ந்த கருந்திட்டைக் குடி ‘சுங்கம் தவிர்த்த சோழநல்லூர்’ எனப் பெயர் பெற்றது[56]
குலோத்துங்கன் தன் 17-ஆம் ஆட்சி ஆண்டிலும் 40-ஆம் ஆட்சி ஆண்டிலும் நிலத்தை அளக்குமாறு கட்டளையிட்டான் அளந்து முடிந்த பிறகு குடிகளிடம் ஆறில் ஒரு கடமை வாங்கினான். குலோத்துங்கன் ஆட்சியில் வரி விதிக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட நிலங்களும் உண்டு. இவையே இவனது ஆட்சியின் சிறந்த செயல்கள். ஏனையவை ‘சோழர் அரசியல்’ என்னும் பிற்பகுதியில் விளக்கம் பெறும் ஆண்டுக் காண்க.
அரசன் : குலோத்துங்கன் சிறந்த கல்விமான். இவன் வேங்கி நாட்டிற் பிறந்தவன்; நன்னைய பட்டனைக் கொண்டு தெலுங்கில் பாரதம் பாடச் செய்த இராசராச நரேந்திரன் செல்வமகன் ஆதலின் இவன் தெலுங்கு மொழியில் வல்லவனாக இருந்தான்; வடமொழி அறிவும் பெற்றிருந்தான் என்பது கூறப்படுகிறது. தமிழில் சிறந்த அறிவுடையவன் என்று பரணி ஆசிரியர் குறித்துள்ளார். இவன் கலையினொடும் கவிவாணர் கவியி னொடும் இசையினொடும், பொழுது போக்கியவன்[57]. கவிவாணர் என்றமையால், இவனது அவைக்களத்தில் இருந்த சயங்கொண்டார் தவிர வேறு புலவர் பலரும் இவனை அடிக்கடி சென்று கண்டனர் போலும் இவன் புலவர் பலரை ஆதரித்தான் போலும் இவன் சிறந்த வீரன்! கலக்க முற்றுக் குழம்பிய நிலையில் இருந்த பெருநாட்டைத் தான் பட்டம் ஏற்றவுடன் அமைதிக்குக் கொணர்ந்த அரசியல் நிபுணன், சுங்கம் தவிர்த்துக் குடிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன், கடாரம், சீனம், கன்னோசி முதலிய வெளி நாடுகளு டன் அரசியல் உறவுகொண்டு, வாணிகத்தைப் பெருக்கிய அறிஞன் இழந்த ஈழநாட்டை மீட்கும் முயற்சியில் உயிர்களைப் பலியிடாத உத்தமன். சுருங்கக் கூறினால், இராசராசன், இராசேந்திரன் போன்ற பேரரசருள் இவனும் ஒருவன் ஆவன் என்னல் மிகையாகாது.
சமயநிலை : இப்பேரரசன் சிறந்த சிவபக்தன். சோழர் வழிவழியாகவே சிவபக்தராவர். இவன் தில்லைப் பெருமானைப் பேரன்பு பொங்க வழிபட்ட துரயோன்; ஆயின், பிற சமயங்களையும் மதித்துவந்த பெரியோன். இவன் கல்வெட்டுகள் எல்லாச் சமயத்தார் கோவில்களிலும் இருக்கின்றன. மன்னார்குடியில் உள்ள பெருமாள் கோவில் இவன் பெயரால் எடுப்பித்ததே ஆகும். அதன் பழைய பெயர் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ என்பது. அஃதன்றி இப்பெரியோன் காலத்தில் இருந்த சிற்றரசர் பலர் வைணவக் கோவில்கள் பல எடுத்துள்ளனர், நிபந்தங்கள் விடுத்துளர். குலோத்துங்கன் கி.பி.1090-இல் நாகப்பட்டினத்தில் இருந்த இராசராசப் பெரும் பள்ளிக்கு (புத்த விஹாரத்திற்கு) நிலங்களைத் தானம் செய்துள்ளான். அதனைக் குறிக்கும் செப்பேடுகள் ஹாலந்து நாட்டு ‘லீடன்’ நகரப் பொருட்காட்சி சாலையில் உள்ளன. அவையே லீடன் செப்பேடுகள்’ எனப்படும். இவன் காலத்துச் சிற்றரசர் சிலரும் தனிப்பட்டார் சிலரும் சமணப் பள்ளிகட்கு நிபந்தங்கள் விடுத்துள்ளனர். எனவே குலோத்துங்கன் ஆட்சியில் எல்லாச் சமயங்களும் தத்தமக்குரிய சிறப்பைப் பெற்று வந்தன என்பது தெரியலாம். ஆயினும், அரசன் தன்னளவில் சிறந்த சிவபக்தனாகவே இருந்து வந்தான். தன்னைத் திருநீற்றுச் சோழன் என்று இவன் அழைத்துக் கொண்டமையே இவனது சிவநெறிப் பற்றை விளக்கப் போதியதன்றோ?
அரச குடும்பம்
மனைவியர் : குலோத்துங்க செப்புப் பட்டயங்கள், இவன் இராசேந்திரதேவன் மகளான மதுராந்தகியை மணந்தான் எனக் கூறுகின்றன. இவளுக்கு மக்கள் எழுவர் பிறந்தனர். இவர்கள் கி.பி.1017 முதல் வேங்கி இளவரசர் ஆயினர் என்பதைக் காணின், குலோத்துங்கன் கி.பி.1070இல் பட்டம் பெற்றதை எண்ணின், குலோத்துங்கன் ஏறத்தாழக் கி.பி.1060-இல் மதுராந்தகியை மணந்தான் என்னலாம். மதுராந்தகியே கோப்பெருந்தேவியாக இருந்தாள். அவள் புவன முழுதுடையாள், அவனிமுழுது டையாள் எனப்பட்டாள். அவள் தீனசிந்தாமணி என்னும் பெயரையும் உடையவள்.[58] அவள் குலோத்துங்கனது 30ஆம் ஆட்சி ஆண்டிற்கு முன்பு இறந்தனள். அதனால், தியாகவல்லி என்பவள் பட்டத்தரசி ஆனாள். மற்றொரு மனைவி ஏழிசை வல்லபி. இவள் ‘ஏழ் உலகுடையாள்’ பற்றி ‘ஏழிசை வல்லபி’ எனப்பட்டாள் போலும்! பிற அரச மாதேவியருள் திரைலோக்கிய மாதேவி ஒருத்தியாவாள். இவள் தன் தாயான உமைநங்கையின் நல்ம் கருதி ஆர்ப்பாக்கம் கோவிலில் கி.பி.1072-இல் விளக்கு ஒன்று எரிய ஏற்பாடு செய்தாள்.[59] சோழன்-சோறுடையான் ஆன காடவன் மாதேவி என்பவள் ஒரு மனைவி. இவள் பல்லவர் குலப்பாவை.[60] திரிபுவன மாதேவி என்ற கம்பமாதேவி ஒரு மனைவி. இவள் விஷ்ணுபக்தி உடையவள்[61]. ஆதித்தன் ஆண்ட குட்டியார்’ என்ற சோழகுல வல்லியார் ஒரு மனைவி[62]. இதுகாறும் கூறியவற்றால், இவனுக்கு (1) மதுராந்தகி (2) தியாகவல்லி (3) ஏழிசைவல்லபி (4) திரைலோக்கியமாதேவி (5) காடவன் மாதேவி (6) கம்ப மாதேவி (7) சோழகுலவல்லி என மனைவியர் எழுவர் இருந்தமை அறியக் கிடக்கிறது.
- ↑ 55. 288 of 1907
- ↑ 56. 374 of 1908
- ↑ 57. க பரணி, 263
- ↑ 58. S.I.I. Vol.3. No.72
- ↑ 59. 138 of 1923
- ↑ 60. 39 of 1921
- ↑ 61. 45 of 1921
- ↑ 62. 39,45 of 1921
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதற் குலோத்துங்கன் - History of Chola - சோழர் வரலாறு - இவன், குலோத்துங்கன், சிறந்த, மாதேவி, போலும், மனைவி, இவள், இருந்த, அவள், என்பது, ஆட்சி, இவனது, எனப், சுங்கம்