சோழர் வரலாறு - முதற் குலோத்துங்கன்
அரையன் மதுராந்தகன் ஆன குலோத்துங்க சோழ கேரளராசன் என்பவன் ஒருவன். இவன் சிறந்த சேனைத் தலைவன்; சோழ மண்டலத்து மண்ணி நாட்டில் உள்ள முழையூருக்குத் தலைவன்: ‘குலோத்துங்க சோழக் கேரள ராசன்’ என்ற பட்டம் பெற்றவன். இவன் சேரநாட்டுப் போரில் சேனையை நடத்திச் சென்று வெற்றி பெற்றதால் இப்பெயர் பெற்றவன். இவன், குலோத்துங்கன் கோட்டாற்றில் நிறுவிய நிலைப்படைக்குத் தலைவனாக இருந்தவன். இத்தலைவன் கோட்டாற்றில் இராசேந்திர சோழேச்சரம்” என்ற கோவிலைக் கட்டினான்[49]. அக்கோவிற்குக் குலோத்துங்கன் நிலதானம் செய்துள் ளான். இத் தலைவனும் சிறந்த சிவபக்தன் என்பது தெரிகிறது.
மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் பெருஞ் சிறப்புற்ற சேனைத் தலைவன் ஆவன். இவன் தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான ‘மணவில்’ என்ற ஊரின் தலைவன். இவன் குலோத்துங்கன் படைத்தலைவனாக அமர்ந்து, பாண்டி நாடு, வேணாடு, மலைநாடு முதலிய நாடுகளோடு போர் நடத்திப் புகழ் பெற்றவன்[50]. இவனால் சோழனுக்கு நிலைத்த புகழ் உண்டானது. இவனது திறமையைக் கண்டு பாராட்டிய குலோத்துங்கன் இவற்குக் ‘காலிங்க ராயன்’ என்னும் பட்டம் அளித்துச் சிறப்புச் செய்தான். இவன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் உயர்நிலையில் இருந்தான்[51].
இவன் சிறந்த சிவபக்தன். இவன் சிதம்பரம் கூத்தப் பிரானிடம் பேரன்பு பூண்டவன்; அங்குப் பல திருப்பணிகள் செய்தான், தில்லை அம்பலத்தைப் பொன் வேய்ந்தான்; நூற்றுக்கால் மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுவதற்குரிய மண்டபம், சிவகாம கோட்டம் முதலியன கட்டுவித்தான்; ‘தியாகவல்லி’ முதலிய சிற்றூர்களை இச் சிதம்பரம் கோவிலுக்குத் தேவதானமாக அளித்தான்; மூவர் தேவாரப் பதிகங் தளைச் செப்பேடுகளில் எழுதுவித்துத் தில்லையம் பதியிற் சேமித்து வைத்தான்[52]. இவ்வீரன் திருவதிகைக் கோவிலில் காமகோட்டம் எடுப்பித்துப் பொன் வேய்ந்தான்; அடரங்கு அமைத்தான்; வேள்விச் சாலை ஒன்றை அமைத்தான்; தேவதானமாக நிலங்களை விட்டான். இங்ஙனம் இப் பெரியோன் செய்த திருப்பணிகள் பல ஆகும். இவற்றை விளக்கக்கூடிய வெண்பாக்கள் சிதம்பரம் கோவிலிலும் திருவதிகைக் கோவிலிலும் வரையப்பட்டுள்ளன[53].
அரசன் விருதுப் பெயர்கள் : இராசகேசரி முதல் குலோத்துங்க சோழதேவன், திரிபுவன சக்கரவர்த்தி, இராசேந்திரன், விஷ்ணுவர்த்தனன், சர்வலோகாச்ரயன், பராந்தகன், பெருமான் அடிகள், விக்கிரம சோழன், குலசேகர பாண்டிய குலாந்தகன், அபயன், சயதரன் முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தான். திருநீற்றுச் சோழன் என்ற பெயரும் இவனுக்குண்டு. இப்பெயரால் ஒரு சிற்றூர் இருந்தது. ’சுங்கம் தவிர்த்த சோழன் என்றும் குலோத்துங்கன் பெயர் பெற்றான். ‘உலகுய்ய வந்தான், விருதராச பயங்கரன்’ என்பனவும் குலோத்துங்கன் சிறப்புப் பெயர்களே என்பது பரணியால் தெரிகிறது.
நாட்டுப் பிரிவுகள் : குலோத்துங்கன் ஆட்சியில் இருந்த சோழப் பெருநாடு பல மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அவை (1) சோழ மண்டலம் (2) சயங் கொண்ட சோழ மண்டலம் (3) இராசராசப் பாண்டிமண்டலம் (4) மும்முடிச் சோழ மண்டலம் (5) வேங்கை மண்டலம் (6) மலைமண்டலம் (7) அதிராசராச மண்டலம் என்பன. இவற்றுள் சோழ மண்டலம் என்பது தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளிக் கோட்டங்களும் தென் ஆர்க்காடு கோட்டத்தின் ஒரு பகுதியும் தன்னகத்தே கொண்டதாகும்; சயங்கொண்ட சோழமண்டலம் - தென் ஆர்க்காடு கோட்டத்தின் பெரும் பகுதியும் செங்கற்பட்டு, வட ஆர்க்காடு, சித்துர் ஆகிய கோட்டங்களையும் தன்னகத்துக் கொண்டதாகும். இராசராசப் பாண்டி மண்டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய கோட்டங்களைப் பெற்ற நிலப்பரப்பாகும். மும்முடிச் சோழமண்டலம் என்பது ஈழ நாட்டின் வடபகுதிகளாகும். வேங்கை மண்டலம் என்பது கீழைச் சாளுக்கிய நாடாகும். மலைமண்டலம் என்பது திருவாங்கூர், கொச்சி, சேலம் கோட்டத்தின் ஒரு பகுதி, மலையாளக் கோட்டம் ஆகியவை அடங்கிய நிலப்பரப்பாகும். அதிராசராச மண்டலம் என்பது கோயமுத்துார்க் கோட்டத்தையும் சேலம் கோட்டத்தின் பெரு பகுதியையும் கொண்ட கொங்குநாடு ஆகும்.
இவன் காலத்தும் மண்டலம் பல வளநாடுகளாகவும், வளநாடு பல நாடுகளாகவும் பிரிக்கப்பட்டன. குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்தில் இவ் வளநாடுகட்குரிய பெயர்களை நீக்கித் தன் பெயர்களை அவற்றுக்கு இட்டனன்; ‘ஷத்திரிய சிகாமணி வளநாடு’ என்பதைக் ‘குலோத்துங்க சோழ வளநாடு’ என மாற்றினான்; இராசேந்திர சிங்கவள நாட்டை இரண்டாகப் பிரித்தான்; மேற்குப் பகுதிக்கு ‘உலகுய்யவந்த சோழவளநாடு’ என்றும் கிழக்குப் பகுதிக்கு ‘விருதராச பயங்கர வளநாடு’ என்றும் பெயரிட்டான். இவ் வளநாடுகள் பெரும்பாலும் இரண்டு ஆறுகளையே எல்லையாகக் கொண்டிருந்தன என்பது கல்வெட்டுகளால் நன்கறியலாம். சயங்கொண்ட சோழ மண்டலமாகிய தொண்டை நாடு மட்டும் பல்லவர் காலத்தில் இருந்தாற் போலவே 24 கோட்டங்களைப் பெற்றே இருந்து வந்தது.[54]
- ↑ 49. S.I.I. 3, Vol. No.73
- ↑ 50. S.I.I. Vol. 4. No.225
- ↑ 51. V.Ula-K. 78,79.
- ↑ 52. S.I.I. Vol. 4, 225.
- ↑ 53. 369 of 1921; M.E.R. 1921; Vide ‘Sentamil’ Vol.23
- ↑ 54. S.I.I. Vol. II, No.4
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதற் குலோத்துங்கன் - History of Chola - சோழர் வரலாறு - மண்டலம், என்பது, இவன், குலோத்துங்கன், கோட்டத்தின், சோழன், சிறந்த, தலைவன், ஆர்க்காடு, வளநாடு’, முதலிய, பெற்றவன், சிதம்பரம், என்றும்