சோழர் வரலாறு - முதற் குலோத்துங்கன்
வெளிநாடுகளின் தொடர்பு : குலோத்துங்கன் ஆட்சிக்குட்பட்ட சோழப் பெருநாடு வெளிநாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. கடாரத்துடனும் சீனத்துடனும் கொண்டிருந்த தொடர்பு முன்னரே விளக்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்துக் கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் வடநாடுகளுடன் சோழப் பெருநாடு கொண்டிருந்த தொடர்பு குறிக்கப்பட்டுள்ளது. கன்னோசி அரசனான மதனபாலன் அல்லது அவன் மகனான கோவிந்த சந்திரனது மெய்ப்புகழ் அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் முதலில் குலோத்துங்கனது 41-ஆம் ஆட்சி ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது; பிறகு கன்னோசி அரசன் புகழ் பொறிக்கப்பட்டுள்ளது; பின்னர்க் கல்வெட்டின் காரணம் வரையப்பட்டுள்ளது. கன்னோசிக்கும் சோழ நாட்டிற்கும் என்ன தொடர்பு இருந்தது என்பது தெரியவில்லை. கன்னோசி நாட்டார் கதிரவன் வணக்கத்திற் கைதேர்ந்தவர். சோழ நாட்டில் குலோத்துங்கன் ஆட்சியில் அவ்வணக்கம் சிறப்பிடம் பெற்றிருந்தது[34]. சோழ நாட்டு வாகீசுவரரrவிதர் என்பவர் ஒரிஸ்ஸா நாட்டுச் சாக்கியரசுழிதர் மாணவராவர் என்பதைக் கோவிந்த சந்திரன் செப்புப்பட்டயம் கூறுகிறது. கோவிந்த சந்திரன் (கன்னோசி அரசன்) விட்ட கல்வெட்டின் காலம் கி.பி.1129 ஆகும்[35]. காம்போச நாட்டு அரசன் குலோத்துங்கனுக்கு விலை உயர்ந்த கல் ஒன்றைக் காட்டினான்; பிறகு அதனை அவனுக்குப் பரிசாக அளித்தான். குலோத்துங்கன் அதனைச் சிதம்பரம் உட்கோவிற்கு எதிரேயுள்ள சுவரிற் பதித்தான் என்று சிதம்பரம் கோவில் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. அதன் காலம் கி.பி.1114[36].
சோழப் பேரரசு : குலோத்துங்கன் ஆட்சியில் 45 ஆண்டுகள் வரை (கி.பி.1115 வரை) சோழப் பேரரசு முன்னோர் வைத்த அளவிலேயே இருந்தது. தெற்கே ஈழ மண்டலம் ஒன்றே ஆட்சியிலிருந்து பிரிந்துவிட்டது. கி.பி.1116-இல் கங்கபாடி பிரிந்தது. கி.பி.1118-இல் வேங்கி நாட்டின் பெரும் பகுதியும் சாளுக்கியர் ஆட்சிக்கு மாறிவிட்டது. குலோத்துங்கன் இறக்குந் தறுவாயில் கடப்பை, கர்நூல் கோட்டங்கனே வட எல்லையாக இருந்தன எனலாம். கடப்பைக் கோட்டத்தில் உள்ள நந்தலூர் குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலம்’ எனப் பெயர் பெற்றது[37].
தலைநகரங்கள் : (1) குலோத்துங்கனுடைய சிறப் புடைக் கோ நகர் கங்கை கொண்ட சோழபுரமே ஆகும். (2) அடுத்தது காஞ்சிபுரமாகும். அதில் இருந்த அபிஷேக மண்டபத்தில் இருந்தே அரசன் சிறப்புடைய பல பட்டயங்களை வெளியிட்டுள்ளான்[38]. (3) கங்கை கொண்ட சோழன் வளர்த்த சிறப்புடைய அரண்மனை யான ஆயிரத்தளி (பழையாறை)யில் இருந்த அரண்மனை ஒன்று[39] (4) திருமழபாடி அரசற்கு உகந்த சிறந்த நகரமாக இருந்தது[40].
சிற்றரசர் : குலோத்துங்கன் ஆட்சியில் வெளிப்பட்ட கல்வெட்டுகளில் சிற்றரசர் பலர் குறிக்கப்பட்டுள்ளனர். (1) தென் ஆர்க்காடு கோட்டத்தின் வடமேற்கு மலைப் பகுதியைச் சேதிராயர் என்னும் பெயர் கொண்ட சிற்றரசர் ஆண்டு வந்தனர். அவர் தலைநகர் கிளியூர் என்பது. (2) பெரிய உடையான் இராசராசன், சந்திரன் மலையனான இராசேந்திர சோழன் என்பவர் திருமுனைப்பாடிநாட்டில் பேரரசர். அவருக்கு அடங்கிய தலைவர் சிலர் இருந்தனர். அவர்கள் மலையகுலராசன் முதலியோர். (3) வட ஆர்க்காட்டில் மேற்குப் பகுதியும் மைசூரின் கிழக்குப் பகுதியும் சேர்ந்த நாடு முள்வாய் நாடு’ எனப்பட்டது. அதனைக் கங்க நுளம்பன் ஒருவன் ஆண்டு வந்தான்[41]. (4) வேங்கி நாட்டில் வெலனாண்டித் தலைவனான ‘கொங்கன் வடபகுதிச் சிற்றரசருட் சிறந்தவன். அவன் மரபினர் நீண்டகாலம் தம் நாட்டை அமைதியாக ஆண்டு வந்தனர்[42]. குலோத்துங்கன் இக்கொங்கன் மகனைத் தன் மைந்தன் போலக் கருதிச் சிறப்புச் செய்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. (5) கடப்பையை ஆண்ட சிற்றரசன் பொத்தப்பி - காம சோட மகாராசன் என்பவன். அவனுடைய சேனைத் தலைவர்கள் இராமண்ணன், பெக்கட பீமய்யன் என்பவர்[43]. (6) மற்றொரு தெலுங்கச் சிற்றரசன் பல்லவ மரபினன் ஆவன். அவன் தன்னை மகா மண்டலேசுவரன் என்றும் “காஞ்சிபுரேசுவரன் என்றும் கூறியுள்ளான்[44].
அமைச்சரும் தானைத் தலைவரும் : இவர் பலராவர். இவருட்சிறந்தவர் சிலரே. இவருள் ‘ஞானமூர்த்தி பண்டிதன் ஆன மதுராந்தகப் பிரமாதிராசன்’ என்பவன் ஒருவன். இவன் நாலூரைச் சேர்ந்தவன்; வத்ச கோத்திரத்தான். இவன் சோழன் தானைத் தலைவருள் ஒருவன்[45]. ‘பாரத்வாசன் மன்ற நாராயணன்’ என்பவன் ஒருவன். இவனுக்கு வீர சந்தோஷ பிரம சக்கரவர்த்தி என்ற பெயரும் இருந்தது. இவன் திருப்பத்துரை ஆண்ட சிற்றரசன் போலும் இவன் குலோத்துங்கன் அமைச்சருள் ஒருவன்[46]. கருணாகரத் தொண்டைமான் புகழ் பெற்ற சேனைத் தலைவனும் அமைச்சனும் ஆவன். இவன் பல்லவர் குலத் தோன்றல்; ‘வண்டையர் அரசன்-அரசர்கள் நாதன் - மந்திரி - உலகு புகழ் கருணாகரன்’ என்று சயங்கொண்டாரால் கலிங்கத்துப் பரணியிற் புகழப் பெற்றவன். இவன் விக்கிரம சோழனது ஆட்சியிலும் இருந்தான் என்பதை விக்கிரம சோழன் உலாகுறித்துள்ளது. இவனது ஊர் வண்டை என்பது. அது,சோழமண்டலத்தில் குலோத்துங்க சோழ வளநாட்டைச் சார்ந்த திருநறையூர் நாட்டில் உள்ள வண்டாழஞ்சேரி என்பதைக் கல்வெட்டு ஒன்று உணர்த்துகிறது[47]. அஃது இப்பொழுது ‘வண்டுவாஞ்சேர’ என்னும் பெயருடன் இருக்கிறது. இத்தொண்டைமான் மனைவி பெயர் ‘அழகிய மணவாளனி மண்டையாழ்வார்’ என்பது. அவள் சில கோவில்கட்கு நிபந்தங்கள் விடுத்துள்ளாள். கருணாகரத் தொண்டை மான் தமையன் ‘சேனாபதி-பல்லவராசர்’ என்பவன். அவன் கொடி, பழைய பல்லவர் கொடியாகிய நந்திக் கொடியாகும்[48]. அவனும் கலிங்கப் போரிற் கலந்து கொண்டவன் என்பதைப் பரணி பகர்கிறது. கருணாகரன் திருவாரூர்ச் சிவபிரானிடம் நீங்காத பேரன்பு உடையவன்; அக்கோவிலில் பல திருப்பணிகள் செய்தவன்; அக்கோவிற் பெருமான் திருவடிகளிற் கலந்தவன், தியாகேசர் பெயர்களுள் கருணாகரத் தொண்டைமான் என்பதும் ஒன்றாகும். அப்பெயர் இவனாற்றான் உண்டானது என்று திருவாரூர் உலா குறிக்கின்றது. இக்குறிப்பால் இவன் சிறந்த சிவபக்தன் என்பது விளக்கமாகின்றது.
- ↑ 34. A.R.E. 1927, Vol.II, 19-21.
- ↑ 35. Ep. Ind VI. II, No.3.
- ↑ 36. 29 of 1908; A.R.E. 1908, Vol.II, 58-60.
- ↑ 37. 600 of 1907
- ↑ 38. S.I.I. Vol.3, No.73; M.E.R. 1917, pp. 42-44
- ↑ 39. A.S of S.I. Vol. 4, 224
- ↑ 40. 231 of 1916
- ↑ 41. 568 of 1906
- ↑ 42. A.R.E. 1917, Vol. II, 27
- ↑ 43. 262, 263 of 1905
- ↑ 44. 405 of 1893
- ↑ 45. 119 of 1912
- ↑ 46. 519 of 1022; A.R.E. 1923, II. 33,
- ↑ 47. S.I.I. Vol.4, No.862
- ↑ 48. 46 of 1914.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதற் குலோத்துங்கன் - History of Chola - சோழர் வரலாறு - குலோத்துங்கன், இவன், தொடர்பு, ஒருவன், அரசன், என்பது, சோழப், கொண்ட, சோழன், ஆண்டு, என்பவன், கன்னோசி, அவன், பெயர், சிற்றரசர், சிற்றரசன், பகுதியும், கருணாகரத், கங்கை, என்பவர், புகழ், உள்ள, கோவிந்த, நாட்டில், ஆட்சியில், சந்திரன், கல்வெட்டு, ஒன்று