சோழர் வரலாறு - முதற் குலோத்துங்கன்
சயங்கொண்டார் புலவர் முறையில் சில இடங்களில் செய்திகளை மிகுத்துக் கூறி இருப்பினும், படையெடுப்பு, வெற்றி என்பவை உண்மைச் செய்திகளே என்பது கல்வெட்டுகளால் உறுதிப்படுகிறது. கலிங்க அரசனான அனந்தவர்மன் யாவன்? இராசராச கங்கனுக்கும் குலோத்துங்கன் மகளான இராச சுந்தரிக்கும் பிறந்தவனே ஆவன். எனினும் என்ன? அரசன் என்னும் ஆணவம் உறவை மதியாதன்றோ? இப்போருக்குப் பரணி கூறும் காரணம் பொருத்தம் அன்று. வட கலிங்கம் சோழனுக்கு உட்பட்டதன்று. சோழன் வட கலிங்கத்தைப் பிடித்து ஆண்டதாகவும் சான்றில்லை[24]. ‘வடகலிங்கத்தரசன் நாடு வேட்கையால் தென் கலிங்கத்தைக் கைப்பற்ற முனைந்திருக்கலாம். இச்செய்தி காஞ்சி அரண்மனை[25] யிலிருந்து குலோத்துங்கற்கு எட்டியது. அவன் உடனே தொண்டைமானை வேங்கி இளவரசற்கு உதவியாக அனுப்பினான்’ எனக் கோடலே பொருத்தம் உடையது; அல்லது, முதற் கலிங்கப் போரும் இந்த இரண்டாம் கலிங்கப் போரும் சாளுக்கிய விக்கிரமாதித்தன் சூழ்ச்சியால் நடந்தன என்றும் கூறலாம். வேங்கியைச் சோழர் ஆட்சியிலிருந்து ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்ட அவன், பலமுறை சிற்றரசர் பலரை வேங்கியை ஆண்ட இளவரசர்க்கு மாறாகத் தூண்டினனாதல் வேண்டும். இத் துண்டல் முயற்சி ஏறத்தாழக் கி.பி.1118-ல் பயனளித்த தென்னலாம்.
வேங்கி அரசு:குலோத்துங்கன் தன் இறுதிநெருங்குவதை அறிந்து, கி.பி.1118-இல் விக்கிரம சோழனை வேங்கியிலிருந்து அழைத்துக்கொண்டான்.உடனேவேங்கிநாட்டிற்குழப்பம் உண்டானது[26]. இஃது உண்மை என்பதைக் குலோத்துங்கன் 48-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகளும் விக்கிரமசோழன் கல்வெட்டுகளுமே உணர்த்துகின்றன. திராக்ஷாராமத்தில் குலோத்துங்கனுடைய 48-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகள் வரைதாம் கிடைத்துள்ளன. வேங்கியில் விக்கிரம சோழன் பட்டம் பெற்ற பிறகு உண்டான கல்வெட்டுகள் இல்லை. அவை குண்டுரையே வட எல்லையாகக் கொண்டுவிட்டன. இதனால், வேங்கிநாடு வேறாகிவிட்டதை நன்குணரலாம் அன்றோ? ஆனால், வேங்கியிலும் திராக்ஷாராமம் முதலிய இடங்களிலும் விக்கிரமாதித்தனுடைய 45 முதல் 48 வரை உள்ள ஆட்சி ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் வேங்கி நாட்டில் இருந்த சிற்றரசர் பலருடையன. இவற்றுள் விக்கிரம ஆண்டும், விக்கிரமன் பேரரசிற்குத் தாங்கள் பணிந்தவர்கள் என்றும் அச்சிற்றரசர் குறிப்பிட்டுள்ளனர். கி.பி.1118-இல் விக்கிரமாதித்தனின் தண்டநாயகனான அனந்தப்பாலையன் என்பவன் வேங்கியை ஆண்டான் என்று கல்வெட்டொன்று. குறிக்கிறது[27]. கி.பி. 1120-இல் இவன் மனைவி பீமேசுவரர் கோவிலுக்களித்த தானத்தைக் குறிக்கும் கல்வெட்டில் விக்கிரம ஆண்டேகுறிக்கப்பட்டுள்ளது[28]. திராக்ஷாராமத்துக் கல்வெட்டுகள் கி.பி. 1132-3 வரை சாளுக்கிய-விக்கிரம ஆண்டுகளைக் குறிக்கின்றன. அனந்தபாலையன் உறவினன் ஒருவன் கிருஷ்ணைக் கோட்டத்தில் உள்ள ‘கொண்ட பல்லி’யைக் கி.பி. 1727-இல் ஆண்டுவந்தான்[29]. கிருஷ்ணையாற்றுக்குத் தென்பாற்பட்ட நாட்டைக் ‘கொள்ளிப்பாக்கை’யின் அரசன் என்னும் பட்டத்துடன் நம்பிராசன் என்பவன் கி.பி. 1131-இல் ஆண்டுவந்தான்[30]. இதுகாறும் கூறிய சான்றுகளால், குலோத்துங்கன்பேரரசிற்கு உட்பட்டிருந்த அவனுக்கு உரிமையான வேங்கிநாடு, அவனது ஆட்சி இறுதியில் கி.பி.1118-இல் விக்கிரமாதித்தனால் கைப்பற்றப்பட்டது விளங்குகிறதன்றோ? இம்முடிவினால் விக்கிரமாதித்தன் முதலிற் கொண்ட (சோழ நாட்டையும் வேங்கியையும் வேறு பிரிக்க வேண்டும் என்ற) எண்ணமும் நிறைவேற்றிக் கொண்டான் என்பதும் தெளிவாகின்றது.
கங்கபாடி பிரிந்தது : மைசூரில் அஸ்ஸன், கடுர் கோட்டங்களையும் நாகமங்கல தாலுகாவையும் கொண்ட நிலப் பரப்பை முதலில் ஆண்டவர் ஹொய்சளர் என்னும் மரபினர். இவர்கள் மேலைச் சாளுக்கிய்ர்களுக்கு அடங்கி ஆண்டு வந்த சிற்றரசர். இவருள் ஒருவனான எரியங்கன் என்பவனே குலோத்துங்கற்கும் விக்கிரமாதித்தற்கும் நடந்த போரிற் பின்னவன் பக்கம் நின்று போரிட்டவன். ஹொய்சளர் இராசராசன் காலம் முதலே இருந்து வந்தனர்.
அவருள் முதல் அரசன் திருமகாமன் (கி.பி. 1022-1040) என்பவன். அவன் மகன் விநயாதித்தன். அவன் மகனே எரியங்கன். விநயாதித்தன் கி.பி.1040 முதல் 1100 வரை ஆண்டான். கி.பி.1100-இல் பிட்டிக விஷ்ணு வர்த்தனன் அரசன் ஆனான். இவன் கி.பி.1116-இல் சோழரிடமிருந்து தழைக்காட்டை மீட்டான், அதனால் ‘தழைக் காடு[31] கொண்ட’ என்னும் தொடரைத் தன் பெயர்க்கு முன் பூண்டான். அந்த ஆண்டிலே இவன் கங்கபாடி முழுவதும் தனதாக்கி ஆண்டான் என்பது இவன் கல்வெட்டால் தெரிகிறது[32].
கங்கபாடி நீண்ட காலமாகச் சோழர் ஆட்சியில் இருந்து வந்த நாடாகும். அது கொங்கு நாட்டை அடுத்தது; ஆசலால், கொங்கு நாட்டை ஆண்டுவந்த அதியமான் மேற்பார்வையில் இருந்து வந்தது. அதியமான்கள் சோழர் படைத்தலைவராகவும் சிற்றரசராகவும் இருந்தார்கள். விஷ்ணுவர்த்தனன் தானைத் தலைவனான ‘கங்கராசன்’ அதியமானைச் சரண்புக அழைத்தான். அதியமான் மறுக்கவே, போர் மூண்டது. அதியம்ான், தாமோதரன், நரசிம்மவர்மன் முதலிய சோழர் படைத் தலைவர்கள் போரிட்டனர்; இறுதியில் தோற்றனர். அதன் விளைவாகக் கங்கபாடி ஹொய்சளர் ஆட்சிக்குச் சென்றுவிட்டது[33]. குலோத்துங்கன் கல்வெட்டுகள் 15 வரையே கங்கபாடியிற் கிடைத்துள்ளன. ஆதலின், கி.பி.1115-இல் கங்கபாடி கை மாறியது உண்மையாகும்.
- ↑ 24. K.A.N. Sastry’s Chola’s, Vol. II, pp. 37-38.
- ↑ 25. இவ்வரண்மனை பற்றிய குறிப்பு உத்தமசோழன் கல்வெட்டுகளிற் காணலாம்.
S.I.I. Vol.3. p. 269. - ↑ 26. Ep. Ind. Vol. 4, No.33.
- ↑ 27. 819 of 1922
- ↑ 28. 330 of 1893.
- ↑ 29. 258 of 1905
- ↑ 30. 266 of 1893.
- ↑ 31. இஃது இராசராசபுரம் என்று சோழர் ஆட்சியில் பெயரிடப்பட்டது.
- ↑ 32. Rice’s ‘Mysore and Coorg from Ins.’ p.93
- ↑ 33. Ep. Carnataka, Vol. II, No.240.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 8 | 9 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முதற் குலோத்துங்கன் - History of Chola - சோழர் வரலாறு - கல்வெட்டுகள், கங்கபாடி, விக்கிரம, அவன், இவன், அரசன், குலோத்துங்கன், என்னும், சோழர், வேங்கி, இருந்து, ஹொய்சளர், ஆண்டான், கொண்ட, கிடைத்துள்ளன, என்பவன், சிற்றரசர்