சேர மன்னர் வரலாறு - யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை வழியில் யானைக் கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை தோன்றிச் சேர நாட்டு அரசு கட்டிலேறிச் சேரமானாய் விளங்கினான். சேய் என்பது இந்த இரும்பொறையின் இயற்பெயராகும். தனது சிறு கண்ணைக் கொண்டு பருவுடலைத் தாங்கி நெறியறிந்து இயங்கும் யானை
போலச் சிறு முயற்சி செய்து பெரும்பயன் விளைத்துக் கொள்ளும் சிறப்புடையன் என்பது போலும் கருத்துப்பட வரும் பெயரால், இவன், யானைக் கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்று சிறப்பிக்கப்படுவானாயினன். இவனைப் பாடிய சான்றோர்களும் “வேழ நோக்கின் விறல்வேஞ் சேய்[1]” என்று பாராட்டிக் கூறுகின்றனர். இச் சேரமானுக்கு மாந்தரன் குடியோடு தொடர்புண்டு என்பது இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை எனப்படுவதால் தெரிகிறது.
திருவிதாங்கூர் நாட்டு ஆனைமுடிப் பகுதியில் ஆனக்கஞ்சிறு என்பதும், மலையாள மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளுவ நாடு வட்டத்திலுள்ள வெள்ளாத்திரி நாட்டுப் பகுதியில் இருக்கும் ஆனக்கன் குன்னு என்பதும் யானைக்கண் சிறை என்றும், யானைக்கண் குன்று என்றும் பொருள் தருவன. இரை இரண்டுக்கும் இடையிலுள்ள பகுதி பொறை நாடாதலால், இவை யானைக் கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் பெயரையும் புகழையும் நினைவு கூர்விக்கின்றன. இக் குறிப்புகளையன்றி, இவ் வேந்தர் பெருமானுடைய பெற்றோர் மக்கள் முதலியோரைப் பற்றிய குறிப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை.
யானைக்கண் சேயினது ஆட்சிக் காலத்தில் சேர நாடு மிக்க சிறப்புற்று விளங்கிற்று. தொண்டி நகரம் தலைநகரமாக இருந்தது. மக்கள் செல்வக் குறைபாடின்றி இனிது வாழ்ந்தனர். இவன் காத்த நாடு புத்தேள் உலகம் போல்வது[2] எனச் சான்றோர் புகழும் பொற்புடையதாய் விளங்கிற்று. இவன் நாட்டு மக்கட்குச் சோறு சமைக்கும் தீயின் வெம்மையும், ஞாயிற்றின் வெம்மையுமே யன்றிக் கோல் வெம்மையோ பகைவர் செய்யும் வெம்மையோ ஒன்றும் தெரியாது. அவர்கள் நாட்டில் வானவில் வளைந்து தோன்றுவதுண்டேயன்றிக் கொலை குறிக்கும் வில் வளைந்து தோன்றுவது கிடையாது; படை வகையில், நிலத்தைக் கலப்பை கொண்டு உழுங்கால் காணப்படும் படையல்லது பகைவர் அணி கொண்டு திரண்டுவரும் படைவகை காணப்படுவதில்லை. அவனது நாட்டில் சூல் கொண்ட மகளிருள் சிலர் மண்ணை உண்பது கண்டதுண்டேயன்றிப் பகை வேந்தர் போந்து கவர்ந்துண்ணக் கண்டதில்லை.[3]
இவனது ஆட்சியில் சேரர் குடியில் தோன்றிய தலைவர் பலர், நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து நாடு காவல் புரிந்தனர். சேர நாட்டின் எல்லை தெற்கே தென்பாண்டி நாடு வரையிலும் கிழக்கிற் கொங்குநாடு முற்றும் பரவியிருந்தது. வட கொங்கு நாட்டுக் கொல்லிக் கூற்றமும், தெற்கில் தென்பாண்டி நாட்டுக்கும் குட்ட நாட்டுக்கும் இடையிற் கிடந்த வேணாடும் சேர நாட்டிற்குள் அடங்கியிருந்தன.
இப்போது திருவாங்கூர் நாட்டிலுள்ளதும், பண்டை நாளில் குட்டநாட்டைச் சேர்ந்திருந்ததுமான அம்பலப் புழை வட்டத்தில், குறுங்கோழியூர் என்றோர் ஊர் இருந்தது. அஃது இப்போது கோழிமுக்கு என வழங்குகிறது. குறுங்கோழியூர் எனவே பெருங்கோழியூர் என்றோர் ஊரும் இருக்கவேண்டுமே என நினைவு எழும்; பெருங்கோழியூர் இப்போது பெருங்கோளூர் என்ற பெயருடன் புதுக்கோட்டைப் பகுதியில் உளது. அதற்குப் பண்டை நாளில் பெருங்கோழியூர் எனப் பெயர் வழங்கிற்றென அவ்வூர்க் கல்வெட்டொன்று[4] கூறுகிறது. சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை அரசுபுரிந்த நாளில் இக் குறுங் கோழியூரில் நல்லிசைப்புலமை வாய்ந்த சான்றோர் ஒருவர் வாழ்ந்தார். சேயினது ஆட்சி நலத்தால் மக்கள் இன்ப அன்பு கலந்து அறவாழ்வு வாழ்வது கண்டு அவர் பெருமகிழ்வு கொண்டார். வேந்தனுடைய அறிவும் அருளும் பெருங் கண்ணோட்டமும் அப்புலவர் பெருமானுக்குப் பேருவகை தந்தன. பகைமையும் வறுமையும் இன்றி, நாட்டவர் மழையும் வயல் வளமும் பெருகப் பெற்றுச் செம்மாந்திருந்தனர். போர் இல்லாமையால், கடியரண்களில் அம்பும் வேலும் வாளுமாகிய படைகள் செயலற்றுக் கிடந்தன. வேத்தவையில் அறக் கடவுள் இன்பவோலக்கம் பெற்றிருந்தது. புதுப்புள் வரினும், பழம்புள் போகினும், நாட்டு மக்கள் அச்சம் சிறிதுமின்றி அமைந்திருந்தனர். குறுங்கோழியூர்ச் சான்றோர் இவற்றைக் கண்டு இன்புற்று வருகையில் நாட்டவர் உள்ளத்தில் அச்சம் ஒன்று நிலவக் கண்டார். அவர்க்கு வியப்புண்டாயிற்று. உண்மையாய் ஆராய்ந்தபோது, மக்கட்கு வேந்தன்பால் உண்டான அன்பு மிகுதியால், “அவனுக்கு எங்கே இடையூறு உண்டாகிவிடுமோ?” என்ற அச்சம் அவர்களது உள்ளத்தில் நிலவின்மை தெரிந்தது. அதனால், அவர் வேந்தன்பால் சென்று தாம் கண்ட காட்சிகளைத் தொகுத்து இனிய பாட்டொன்றில்[5] தொடுத்துப் பாடினார். அப் பாட்டின்கண், சேரமான் யானைக்கண் சேயினுடைய அளப்பரிய வலிநிலையை வியந்து, “வேந்தே , கடலும் நிலமும் காற்றும் வழங்கும் திசையும் ஆகாயமுமாகிய இவற்றின் அகலம் ஆழம் உயர்வு முதலிய கூறுகளை அளந்தறிவது என்பது அரியதொரு செயல் ; முயன்றால் அதனையும் செய்து முடிக்கலாம்; ஆனால், உனது வலி நிலையை அளந்தறிவது மிகவும் அரிது” என்று பாடினர் வேந்தன் முறுவலித்தான்; அரசியற் சுற்றத்தார் அளவுகடந்த மகிழ்ச்சி எய்தினர்.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - சேய், இரும்பொறை, நாடு, யானைக்கண், இவன், மக்கள், என்பது, நாட்டு, அச்சம், பெருங்கோழியூர், நாளில், இப்போது, பகுதியில், யானைக், மாந்தரஞ்சேரல், கொண்டு, சான்றோர்