சேர மன்னர் வரலாறு - யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
சேரர் குடித் தலைவனொருவன் பாண்டியனொடு பொருது அழிந்த செய்தியைச் சேரமான் கேள்வி யுற்றான். அத் தோல்வி சேரர்குடிக்கு மாசு தருவது கண்டு யானைக்கண்சேய் நெடுஞ்செழியன் பால் பகைமை கொண்டான். அவனது பகைமை பாண்டியனுக்கும் தெரிந்தது. இருவருடைய படைகளும் ஓரிடத்தே கை கலந்து பொருதன. சேரர் படையினும் பாண்டிப் படை வலியும் தொகையும் மிகுந்திருந்தமையின், சேரர் படை உடைந்தோடலுற்றது. அதனால், பாண்டியர் படை சேரமானை வளைந்து பற்றிக் கொண்டது. நெடுஞ்செழியன் சேரமானைப் பற்றிச் சிறையிட்டான். இச் செய்தி சேர நாட்டுக்குத் தெரிந்தது. அந் நாட்டுச் சான்றோர் எய்திய துன்பத்துக்கு அளவில்லை. சேர நாடு முழுதும் பெருங் கவலைக் கடலுள் ஆழ்ந்தது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஓரிடத்தே நல்ல அரணமைந்த சிறைக்கூடம் அமைத்து அதன்கண் சேரமானை இருப்பித்தான். அவ்வரண்களைச் சூழ ஆழ்ந்த அகழியொன்று வெட்டி அதன் உண்மை தோன்றாதபடி மேலே மெல்லிய கழிகளைப் பரப்பி மணல் கொண்டு மூடிக் காண்பார்க்கு நிலம் போலக் காட்சி நல்கச் செய்திருந்தான். இச் சூழ்ச்சியைச் சேரமான் எவ் வண்ணமோ தெரிந்து கொண்டான். சேரமான் ஒற்றர்கள், காண்பார் ஐயுறாத வகையிற் போந்து வேந்தனுடைய நலம் அறிந்து அவற்கு வேண்டும் உதவிகளைச் செய்து வந்தனர்.
பாண்டியன் செய்தது போன்ற செயலைப் பூழி நாட்டவர் யானைகளைப் பற்றுதற்காகச் செய்வது வழக்கம். சேர நாட்டுச் சான்றோர் புகுந்து வேந்தன் இருப்பதை உணர்ந்துகொள்ள முயன்றால், அவர்களை அகழியில் அகப்படுத்திக் கொள்ளுதற்கும், சேரமான் தப்பியோட முயன்றால் அவன் அகப்பட்டு வீழ்தற்கு மாக இச் சூழ்ச்சியைப் பாண்டியன் செய்திருந்தான். சேரமான் யானைக்கட்சேய், அதனைத் தெரிந்து கொண்டு பாண்டியர் சூழ்ச்சி பாழ்படுமாறு சீர்த்த முயற்சிகள் செய்தான்; தான் இருந்த சிறைக் கோட்டத்துக்குப் பாண்டியர் வந்து போதற் பொருட்டுச் செய்திருந்த கள்ள வழியை அறிந்து அதன் வாயிலாகக் காவலர் அயர்ந்திருந்த அற்றம் பார்த்து வெளிப் போந்தான். உடனே அவனுடைய வாள் மறவர் அவ் வழியைத் தூர்த்துவிட்டனர். சிறைக்கோட்டத்தைச் சூழ்ந்திருந்த பாண்டிப் படைமறவர் பற்பன்னூற்றுவர் அகழகியை மறைத்திருந்த நிலத்திற் பாய்ந்தனர். அஃது அவரனைவரையும் அகழியில் தள்ளி வீழ்த்திற்று.
சிறிது போதிற்குள் சேரர் படை போந்து அகழியை அழித்து அரணைச் சிதைத்துச் சிறைக்கோட்டத்தைத் தீக்கிரையாக்கிற்று. உயிருய்ந்த பாண்டி மறவர் சிலர், வையை யாற்று வழியே மதுரைக்குச் சென்று நெடுஞ்செழியனுக்கு உரைத்தனர். சேரமான் பாண்டி நாட்டினின்றும் நீங்கி நேரிமலை வழியாகக் குட்டநாடு சென்று சேர்ந்தான். இவ்வரலாற்றை அப்பகுதியில் வாழும் முதுவர்கள் திரித்தும் புனைந்தும் வழங்குகின்றனர் எனத் திரு. பி. ஆர். அரங்கநாத புஞ்சா அவர்கள் கூறுகின்றார்கள். இது கேரள மான்மியத்தில் வேறுபடக் கூறப்படுகிறது; இவற்றில் சேரமான் யானைக்கட்சேயின் பெயரும் பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரும் குறிக்கப்படவில்லை; ஆயினும் இந் நிகழ்ச்சி மட்டில் விளக்கமாகிறது.
சேரமான் தன் நாடு சென்று சேர்ந்த செய்தி தெரிவதற்குள் பாண்டியன் அவனைத் தேடிப்பற்றிக் கொணருமாறு செய்த முயற்சிகள் பயன்படவில்லை. படை மறவருட் சிலர் சேர நாட்டு மலைக் காடுகளில் தேடிச் சென்று சேரர் வாட்படைக்கும் வேற்படைக்கும் இரையாயினர். சேரமான் யானைக்கண்சேய் தனது குட்டநாடு கடந்து பொறை நாட்டுத் தொண்டி நகரையடைந்து முன்பு போல் அரசு கட்டிலில் விளக்கமுற்றான்.
யானைகளை அகப்படுப்போர், அவை வரும் வழியில் மிக்க ஆழமான குழிகளை வெட்டி மெல்லிய கழிகளை அவற்றின் மேல் பரப்பி மண்ணைக் கொட்டி இயற்கை நிலம்போலத் தோன்றவிடுவார். அவ் வழியே வரும் யானைகள் அக் குழிகளில் வீழ்ந்துவிடின் பழகிய யானைகளைக் கொண்டு இவற்றைப் பிணித்துக் கொள்வர். வரும் யானைகளுள் சில இச் சூழ்ச்சியை அறிந்து கொள்ளுதலுமுண்டு; வலி மிக்கவை அக்குழியில் வீழ்ந்து கரையைத் தம் மருப்பினால் இடித்தழித்துக் கொண்டு வெளியேறுவதும் செய்யும். சேரமான், இச்சூழ்ச்சி முழுதும் நன்கு கண்டு கொண்ட கொல்களிறு போலப் பாண்டியர் செய்த சூழ்ச்சியைச் சிதைத்துப் போந்தமை பற்றி “யானைக் கண் சேய் மாந்தரன்” என்று சிறப்பிக்கப்படும் தகுதி பெற்றான் என்றற்கும் தக்க இடமுண்டாகிறது. சேர நாட்டுச் சான்றோரும் அக்கருத்து விளங்கவே இவனைப் பாடியிருக்கின்றனர்.
சேரமான், தொண்டி நகர்க்கண் சிறப்புறுவது நன்கறிந்த குறுங்கோழியூர் கிழார் ஒருகால் அவன்பாற் சென்றார். அவன் பாண்டியன் நெடுஞ்செழியனது பிணிப்பினின்றும் நீங்கிப் போந்த செய்தியைப் பாராட்டுதற்குப் பொருட்டுச் சேர நாட்டின் பல பகுதியிலிருந்தும் வேந்தரும் சான்றோரும் பிறரும் வந்து அவனது திருவோலக்கத்திற் கூடியிருந்தனர். அப்போது, குறுங்கோழியூர்கிழார், சேரமான் சிறை தப்பிப் போந்த செயலை, யானையொன்று படுகுழியில் வீழ்ந்து தன் பிரிவெண்ணி வருந்திய ஏனைக் களிறும் பிடியுமாகிய தன் இனம் மகிழப் போந்து கூடிய செய்தியை உவமமாக நிறுத்தி,
“மாப்பயம்பின் பொறை போற்றாது நீடுகுழி அகப்பட்ட பீடுடைய எறுழ்முன்பின் கோடு முற்றிய கொல்களிறு நிலைகலங்கக் குழிதொன்று கிளைபுகலத் தலைக்கூடியாங்கு நீபட்ட அருமுன்பின் பெருந்தளர்ச்சி பலர்உவப்ப |
வந்த சேர்ந்ததனை; வேந்தே, இதனை அறியும் நின் பகைவர் இனி நினக்குப் பணி செய்யத் தொடங்குவரே யன்றிப் பகை செய்யக் கனவிலும் நினையார்; நின் முன்னோர்,
“கொடிது கடிந்து கோல் திருத்திப் படுவது உண்டு பகலாற்றி இனிது உருண்ட சுடர் நேமி முழுதாண்டோர்[8] |
- ↑ 8. புறம். 17.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - சேரமான், பாண்டியன், சேரர், நெடுஞ்செழியன், சென்று, கொண்டு, பாண்டியர், வரும், அறிந்து, போந்து, நாட்டுச்