சேர மன்னர் வரலாறு - யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
இவ்வாறு சில ஆண்டுகள் கழிதலும், கொங்கு நாட்டில் பகைவர் சிலர் தோன்றி நாட்டவர்க்கு அல்லல் விளைத்தனர். அங்கிருந்து நாடு காவல் புரிந்த சேர மன்னர், அப் பகைவரை ஒடுக்கும் திறமிலராயினர். நாட்டின் பகுதிகள் பல சீரழிந்தன. குடிகள் பலர் மிக்க துன்புற்றனர். இச் செய்தி சேரமானுக்குத் தெரிந்தது. அவன் தக்கதொரு படை கொண்டு சென்று குறும்பு செய்த பகைவரை ஒடுக்கினான். கொங்கு நாட்டுத் தலைவர் பலரும் சேரமான் பக்கல் நின்று அரும் போர் உடற்றி அப் பகுதிகளிற் புகுந்து அரம்பு செய்து பகையிருளை அகற்றினர். பகைவரால் அழிவுற்ற பகுதிகளைச் சேரமான் சீர்செய்து துளங்குகுடி திருத்தி வளம் பெருகச் செய்தான். மக்கட்கு வாழ்வு இன்பமாயிற்று. நீர்வளத்துக்குரிய பகுதிகளில் நெல்லும் கரும்பும் நெடும்பயன் விளைவித்தன. மலைபடு பொருளும் காடுபடு பொருளும் பெருகின. அச்சத்துக்கும் அவலத்துக்கும் இடமின்றிப் போகவே எம் மருங்கும் இன்பமே பெருகி நின்றது. அந் நிலை விளங்கக் கண்ட சான்றோர், “மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடு, புத்தேள் உலகத் தற்று” எனப் புகழ்வாராயினர். இப் புகழ் தமிழகமெங்கும் தமிழ்த் தென்றல் போலப் பரவித் தழைத்தது. “எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே” என்னுமாறு எங்கும் சோற்றுவளம் பெருகிற்று.
இந் நிலையில் சேரமான் கொங்கு நாட்டில் தான் தங்கியிருந்த பாசறைக் கண்ணே பெருஞ்சோற்று விழா நடத்தினான். சேர நாட்டின் பகுதிகள் பலவற்றினின்றும் சான்றோர் பலர் வந்து குழுமினர். அவர்கட்கு வேண்டுவன பலவும் கொல்லி நாட்டுத் தலைவர்களே மிக்க அன்போடு செய்தனர். யானைகளும் தேர்களும் அணி அணியாகத் திரண்டு வந்து நின்றன. பாடி வந்த பாணர் கூத்தர் முதலிய பரிசிலர் பலர்க்கும் அவர்கள் பகை வேந்தர்பால் திறையாகப் பெற்ற செல்வங்களைப் பெருக நல்கினர். ஒருகால் தம்மைப் பாடிய அவர் நா, பிறர்பால் எப்போதும் சென்று பாடாவண்ணம் மிக்க பொருளை நல்கினர்.
சேரமானுடைய புகழ்ச் செய்தி குறுங்கோழியூர் கிழாருக்குச் சென்று சேர்ந்தது; அவரைக் கண்ட சான்றோர் “இரும்பொறை ஓம்பிய நாடு புத்தேளிர் வாழும் பொன்னுலகு போல்வது” என்று பாராட்டிக் கூறினர். உளங்கொள்ளலாகாத பேருவகை நிரம்பிய அச் சான்றோர் சேரமான் பாசறையிருக்கும் திருவோலக் கத்துக்கு வந்து சேர்ந்தார். வேந்தன் அவரை அன்புடன் வரவேற்றுச் சிறப்பித்தான். கொல்லி நாட்டு வேந்தர் சூழ வீற்றிருந்த வேந்தனது காட்சி அவர்க்கு மிக்க இன்பம் செய்தது.
“ஒங்கிய நடையும், மணிகிடந்து மாறி மாறி ஒலிக்கும் மருங்கும், உயர்ந்தொளிரும் மருப்பும், செறல் நோக்கும், பிறை நுதலும் கொண்டு, மதம் பொழியும் மலைபோல நின் யானைகள் கந்தணைந்து அசைந்து விளங்குகின்றன. வெண்மதிபோலும் கொற்றக்குடை நீழலில் வாழும் வாள் மறவர் பக்கத்தே நின்று காவல் புரிகின்றனர். ஒருபால் நெல் வயலும், ஒருபால் கரும்பு வயலும் விளைந்து விழாக் களம் போல இனிய காட்சி நல்குகின்றன. நெல் குற்றுவோர் பாடும் வள்ளைப் பாட்டும், பனங்கண்ணி சூடிய மறச் சான்றோர் பாடும் வெறிக்குரவைப் பாட்டும் இசைக்கின்றன. இவ்வகை யால் கடல் போல் முழங்கும் பாசறையில் தங்கிய வேந்தே, நின்னைச் சூழவிருக்கும் வேந்தர் கொல்லி நாட்டுக் கோவேந்தராவர். பகைப்புலத்தில் தாம் வென்று பெற்ற திறைப் பொருளைத் தம்மைச் சேர்ந்தோர்க்கும் அவர் சுற்றத்தார்க்கும் அளித்து உதவும் வண்மையுடையர். அவர்கட்குத் தலைவனாக நீ விளங்குகின்றாய்; யானைக் கண்ணையுடைய சேயே! நின் வரம்பிலாச் செல்வம் பல்லாண்டு வாழ்க. பாடி வந்தோரது நா பிறர்பாற் சென்று பாடாதவாறு நல்கும் வண்மையும் ஆற்றலும் உடைய எம் அரசே, மாந்தரஞ்சேரல் ஓம்பிய நாடு புத்தேளுலகத் தற்று எனச் சான்றோர் சாற்றக் கேட்டு நின்னைக் காண வந்தேன்; வந்த யான் அவர் கூற்று முற்றும் உண்மையாதல் கண்டு உள்ளம் உவகை மிகுகின்றேன். வேற்று நாட்டிடத்தே தங்கியிருக்கும் நின் தானையால் நாடுகாவற்குரிய செயல் வகைகளை மடியாது செய்து எங்கும் சோறுண்டாக வளஞ் செய்கின்றனை, நீ நீடுவாழ்க[6]” என்று பாடி யாவரையும் மகிழ்வித்தனர் பாட்டின் நலங்கண்டு மகிழ்ந்த வேந்தன் அவரைக் குறுங்கோழியூர்க்குக் கிழார் என்று சிறப்பித்தான். சின்னாள்களில் சேரமான் தொண்டிக்குச் சென்றார். சான்றோர் குறுங்கோழியூர் சென்று சேர்ந்தார்.
பின்னர், யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை தொண்டி நகர்க்கண் இருந்து வருகையில், பாண்டி நாட்டில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டி வேந்தனாகும் உரிமை எய்தினான். அவ்வரசு கட்டிலுக்குப் பாண்டியர் குடியிற் பிறந்த வேறு சிலரும் முயற்சி செய்தனர். அவர்கட்குத் துணையாகத் திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் என்ற குறுநிலத் தலைவரும், சேரர் குடிச் செல்வரும், சோழர் குடிச் செல்வரும் சேர்ந்து போருடற்றினர். அப் போர் தலையாலங்கானம்[7] என்னு மிடத்தே நடந்தது. அப் போரில் பகைவர் எழுவரையும் வென்று நெடுஞ்செழியன் புகழ் மிகுந்தான். அவன் புகழைக் குடபுலவியனார், இடைக்குன்றூர்க்கிழார் முதலிய பலரும் பாடித் தமிழகமெங்கும் பரப்பினர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - சான்றோர், சேரமான், சென்று, மிக்க, நாடு, பாடி, அவர், நின், கொல்லி, கொங்கு, நாட்டில், ஓம்பிய, வந்து