சேர மன்னர் வரலாறு - யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை
என்று பாராட்டிப் பாடினார். இந்த அழகிய நெடும் பாட்டைக் கேட்டு வேந்தனும் வேத்தியம் சுற்றத்தாரும் மிக்க மகிழ்ச்சி யெய்தினர். வேந்தன் கிழார்க்கு மிக்க பொருளைப் பரிசில் நல்கிச் சிறப்பித்தான்.
மலையாள மாவட்டத்தில் பாலைக்காடு பகுதியைச் சேர்ந்த நடுவட்டம் பகுதியில் கூடலூர் என்றோர் ஊர் உண்டு. அவ்வூரில் நல்லிசைப் புலமைமிக்க சான்றோர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் யானைக்கண் சேய் மாந்தரனுடைய முன்னோர்களாலே நன்கு சிறப்பிக்கப் பெற்றுக் கூடலூர் கிழார் என விளங்கியிருந்தனர். யானைக்கண் சேய் இளையனாய் இருந்த காலத்தில் அவர்பால் அவன் கல்வி பயின்றான். அவன் வேண்டுகோட்கு இசைந்தே கூடலூர் கிழார் ஐங்குறுநூறு என்னும் தொகை நூலைத் தொகுத்தார். அத்தொகைநூலின் இறுதியில் இந்நூல் தொகுத்தார். “புலத்துறைமுற்றிய கூடலூர் கிழார்” என்றும், தொகுப்பித்தான், “கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை” என்றும் பண்டைச் சான்றோர் குறித்திருக்கின்றனர். இவர் மாந்தர்க்குரிய மாந்தை நகரத்தைக் குறுந்தொகைப் பாட்டொன்றில்[9] குறித்துள்ளார். தலைமகனோடு கூடி இல்வாழ்க்கை புரியும் தலைமகள், அவற்கு முளிதயிரைப் பிசைந்து புளிக்குழம்பு செய்து உண்பித்தலும், அவன் “இனிது” எனச் சொல்லிக் கொண்டு உண்பதும், அது கண்டு அவளது ஒண்ணுதல் முகம் “நுண்ணிதின் மகிழ்ந்ததும்[10]“ படிப்போர் நாவில் நீருறுமாறு பாடியவர் இக் கூடலூர் கிழாரேயாவர். அத்தலைமகள் களவுக் காலத்தில் தலைமகன் விரைந்து வரைந்து கொள்ளாது ஒழுகியது பற்றி மேனி வேறுபட்டாள்; அதற்குரிய ஏது நிகழ்ச்சியையுணராத அவளுடைய தாயார் வெறியெடுக்கலுற்றது கண்டு, தோழி, தலைமகன் ஒருகால் தலைமகள் இருந்த புனத்துக்குப் போந்து “பெருந்தழை உதவி” யதும், பின்பு “மாலை சூட்டியதும்” அறியாது, இவ்வூரவர் வெறி நினைந்து ஏமுறுகின்றனர்[11] என அறத்தொடு நிற்பதாக இக் கூடலூர்கிழார் பாடிய பாட்டுத் தமிழறிஞர் நன்கறிந்தது.
இவர், வயது மிகவும் முதிர்ந்திருந்ததனால் குறுங்கோழியூர் கிழார் போலச் சேரமானை அடிக்கடிச் சென்று பாடும் வாய்ப்பு இலரானார். இவர் வானநூற் புலமையிலும் சிறந்தவர். ஒரு நாள் இரவு விண்ணிலே ஒரு மீன் விழக் கண்டார். அதன் பயனாக நாட்டில் வேந்தனுக்குத் தீங்குண்டாகும் என்பது வான நூல் முடிபு. ஏழு நாள்களில் அது நிகழும் என்ற அச்சத்தால் தாமும் வேறு சில சான்றோரும் கூடி ஒவ்வொரு நாளையும் கழித்தனர். அவர் எண்ணியவாறே மீன் வீழ்ந்த ஏழாம் நாளன்று யானைக்கட்சேய் உயிர் துறந்தான். அது கண்டு பெருந்துயர் உழந்த புலவர் பெருமானான கூடலூர் கிழார்,
“ஒருமீன் விழுந்தன்றால் விசும்பினானே, அதுகண்டு, யாமும் பிறரும் பல்வேறு இரவலர், பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன் நோயிலனாயின் நன்றுமன் தில்லென அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப அஞ்சினம் ஏழுநாள் வந்தன்று இன்றே” |
என்று சொல்லி, “யானைகள் நிலத்தே கை வைத்து உறங்குகின்றன; முரசம் கண் கிழிந்து உருளுகின்றது; கொற்ற வெண்குடை கால்பந்து வீழ்கிறது; குதிரைகள் ஓய்ந்து நிற்கின்றன[12];” இத் தீக் குறிகளின் இடையே வேந்தன் “மேலோர் உலகம் எய்தினன்” என்று புலம்பினர். இவ் வேந்தன், “பகைவரைப் பணிக்கும் பேராற்றலும், பரிசிலர்க்கும் இரவலர்க்கும் அளவின்றி நல்கும் ஈகையும், மணிவரை போலும் மேனியும் உடையன்; மகளிர்க்கு உறுதுணையாகி மாண்புற்றவன்; இன்று தன் துணைவரையும் மறந்தான் கொல்லோ” என அவர் வருந்திக் கூறுவன நெஞ்சையுருக்கும் நீர்மை யுடையவாகும்.
இறுதியாக ஒன்றி கூறுதும்: இந்த யானைக்கண் சேய் மாந்தரன், சேரன் செங்குட்டுவனுக்கு மகன் என்று திரு. கனகசபைப் பிள்ளையவர்கள் கூறினாராக, அவரைப் பின்தொடர்ந்து டாக்டர் திரு. எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்களும், திரு. பானர்ஜி அவர்களும்[13] கூறியுள்ளனர். இவர்கள் கூற்றுக்கு ஓர் ஆதரவும் கிடையாது. தமிழ்நாட்டு வரலாறு எழுதிய ஆராய்ச்சியாசிரியர் சிலர் தமிழ் நூல்களை ஆழ்ந்து நோக்காது தாம் தாம் நினைந்தவாறே தவறான முடிபுகள் கொண்டு ஆங்கிலத்தில் எழுதி வரலாற்றுலகில் புகுத்தியிருக்கின்றனர். இவ்வாறே திரு. கே.ஜி. சேஷையரவர்கள் சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் சேரமான் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் ஒருவரே எனக் கூறுகின்றார்[14]. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை காலத்தில் சோழ நாட்டில் இராயசூயம் வேட்ட பெருநற் கிள்ளியும் பாண்டி நாட்டில் கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழிதியும் ஆட்சி செய்தனர். சேரமான் யானைக்கட்சேய் காலத்தில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆட்சி செய்தான்; ஆகவே சேரமான்கள் இருவரும் வேறு வேறு காலத்தவர் என்பது தெளிவாம். இவையெல்லாம் நோக்காது தமிழ்வேந்தர் ஆட்சி நலங்களும் கொள்கையுயர்வுகளும் தவறாகவே பரப்பப் பெறுகின்றன. அதனால் ஏனை நாட்டவர் உண்மை அறிய மாட்டாது இருளில் விடப்படுகின்றனர்.
- ↑ 9. குறுந். 166.
- ↑ 10. குறுந். 6.
- ↑ 11. குறுந். 214.
- ↑ 12. புறம். 229.
- ↑ 13. Junior History of India. p. 94.
- ↑ 14. Cera Kings of the Sangam Period.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
யானைக்கண்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - கூடலூர், சேரமான், திரு, காலத்தில், கிழார், சேய், யானைக்கண், நாட்டில், வேறு, ஆட்சி, கண்டு, யானைக்கட்சேய், அவர், அவன், வேந்தன், மாந்தரஞ்சேரல், இவர்