சேர மன்னர் வரலாறு - குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறைக்குப் பின், சேரமான், குடக்கோ சேரல் இரும்பொறை என்பான் சேரநாட்டு அரசனாக விளங்கினான். அவன் மிக்க செல்வமும் சிறப்பும் உடையனாயினும், தன்னை நாடிவரும் பரிசிலர்க்கு அவர் தம் வரிசை அறிந்து நல்கும் கொடை நலம் இலனாயினான்.
இப்போது பொன்னானி வட்டம் இருக்கும் பகுதியில் பெருங்குன்னூர் என்றோர் ஊருளது. அதற்கு அந்நாளில் பெருங்குன்றூர் என்று பெயர் வழங்கிற்று. அவ்வூரில் நல்லிசைச் சான்றோர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர், பிற்காலத்தே பெருங்குன்றூரைத் தமக்குக் காணியாட்சியாகப் பெற்றுக் கிழார் என வேந்தரால் சிறப்பு நல்கப் பெற்றதனால் பெருங்குன்றூர் கிழார் எனச் சான்றோர்களால் குறிக்கப் பெறுவார். ராயினர். குடக்கோச்சேரல் இரும்பொறை காலத்தில். அவர் நல்லிசைப் புலமை பெற்று விளங்கினாராயினும், கிழாராகவில்லை; அவர் எளிய நிலையிலேயே இருந்துவந்தார்.
அவர், ஒருகால், குடக்கோச் சேரல் இரும் பொறையைக் கண்டு தனது புலமைநலம் தோன்ற இனிய பாட்டைப் பாடினார். அவன் பெரிதும் மகிழ்ந்து அவர்க்கு உண்டியும் உடையும் தந்து பரிசில் வேறே நல்காது காலம் நீட்டித்தான். புலவரது உள்ளம் வறுமையின் கொடுமையை நினைத்து பெருவாட்டம் உற்றது. அவர் குடக்கோவை நோக்கி, “அரசே, உலக மக்களைப் புரத்தற்குரிய நினது உயர்ச்சியைக் கருதாமல், அன்பு கண்மாறி அறம் நினையாதிருக்கின்றாய். உன்னைப் போலும் வேந்தர் பலரும் அப் பெற்றியராய் விடின், என்னைப் போலும் பரிசிலர் இவ்வுலகிற் பறிக்கமாட்டார்கள் என்றார்.
குடக்கோ: (முறுவலித்து) வறுமையுற்றபோது நும் மனைவியும் நும்மை வேண்டாள்; ஆகவே, நீர் இப்போது போவதால் பயன் என்னை?
பெருங்குன்: வேந்தே, என் மனையுறையும் காதலி வறுமைத்துயர் வாட்டும் போதும் தன் கடமை தவறாள். இதுகாறும் அவள் இறந்திருக்க வேண்டும்.
குடக்கோ: அப்படியாயின், வருந்த வேண்டாவே.
பெருங்: இறவாமல் இருந்தால்?
குடக்கோ: (நகைத்து) இருந்தால், இதுவரை இருந்ததுபோல் இருக்கத்தானே போகிறாள்!
பெருங்: இறவாதிருப்பாளாயின், என்னை நினையாதிராள்; நினைக்கும் போதெல்லாம் “கூற்றமோ அறமில்லாதது; இழைத்த நாள் நோக்கி உயிர்களைக் கவர்வது அதற்கு அறம்; அந்த அறத்தைக் கைவிட்டு என் கணவன் உயிரை யுண்டதோ, என்னவோ? அவர் இன்னும் வந்திலரே!” என்று நினைத்து வருந்துவாள். அவளது இடுக்களைத் தீர்த்தற்காகவேனும் யான் போதல் வேண்டும்.
குடக்கோ: அப்படியாயின், நீவிர் போய் வரலாம்.
பெருங்: (திகைப்பும் சினமும் கொண்டு) வேந்தே , நின்தானை சென்று பகைவர் அரணை முற்றிய போது, அரண் காக்கும் பகைவர் செயலற்றுப் போவர், அவ்வாறே யான் யெலற்றுச் செல்கின்றேன். நினது தானைபோல என்னை வறுமைத் துயர் முற்றிக் கொண்டு நிற்கிறது, அந்தத் துயரை முந்துறுத்தே செல்கின்றேன்[1].
குடக்கோ : (முறுவலித்து) நும்மை முற்றியிருக்கும் வறுமைத் துன்பத்துக்கு என் தானை தக்க உவமமாகாது, அஃது என் வயம் இருப்பது.
இதனைக் கேட்டதும் பெருங்குன்றூர்கிழார், “சேரமான் கொடாதொழிகுவனல்லன்; சில நாள்கள் தன்பால் இருக்க வேண்டும்” என்று கருதுகின்றான் போலும் என நினைத்தார். அவ்வாறே சின்னாள்கள் இருந்து மறுபடியும் ஒருநாள் இரும்பொறையைக் கண்டார். அவனோடு அளவளாவிப் பரிசிலர்க்குப் பரிசில் கொடாது மறுத்த செல்வர் சிலரைக் குறித்துக் கூறித் தனக்கு விடை நல்குமாறு வேண்டினார். அப்போதும் அவன் பரிசில் ஒன்றும் நல்கும் குறிப் புடையனாகத் தோன்றவில்லை. புலவர்க்கு அது காணவே ஒருபால் அவலமும், ஒருபால் வெகுளியும் உண்டாயின. தம்முடைய கண்களைப் பரக்க விழித்து வேந்தனை நோக்கினார். “புகழுடைய வேந்தே, உன்னைக் கண்டு பரிசில் பெற வந்த யான் ஒரு பரிசிலனே; ஆயினும் யான் ஓர் ஓங்கு நிலைப் பரிசிலன், பரிசிலரை யேற்று அவர்க்கு உரிய பரிசில் கொடாது மறுத்த பிற செல்வருடைய கொடுமைகளைச் சொன்னால், நீ வள்ளன்மையுடையை யாதலால், மனம் இரங்கிப் பெரும் பரிசில் நல்குவாய் என எண்ணியே அவற்றை நினக்கு மொழிந்தேன். எனினும், நீ உன் கருத்தையே முடித்துக் கொண்டாய். முன்னாள் கையில் உள்ளது போலக் காட்டி, மறுநாள் அது பொய்பட நின்ற உனது நிலைக்கு நீ சிறிதும் நாணுகின்றாயில்லை. நீ கேட்டு நாணுமாறு நின் புகழெல்லாம் நான் பலபட என் செந்நாவால் பாடினேன்; யான் பாடப் பாடப் பாடுபுகழ் பெற்றாய்; நல்லது; வணக்கம்; சென்று வருகிறேன்” என்று கை தொழுது சென்றார். அப்போது, அவன் “புலவீர், ஒன்றும் மனத்திற் கொள்ளலாகாது; சென்று வருக” என்றான். அந் நிலையினும் அவர், “வேந்தே , என் புதல்வனொடு வாடி வதங்கியிருக்கும் என் மனைவியையே நினைத்துக் கொண்டு செல்கின்றேன்; ஆதலால், நின் கொடுமையை நினைப்பதற்கு என் நெஞ்சில் இடமில்லை, காண்[2]” என்று சொல்லி விட்டுச் சென்றார். அது கண்டும் இரும்பொறையின் மனம் கற்பொறையாகவே இருந்தொழிந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை - History of Chera - சேர மன்னர் வரலாறு - அவர், குடக்கோ, பரிசில், யான், அவன், கொண்டு, சென்று, செல்கின்றேன், என்னை, போலும், வேந்தே, பெருங்